சகுந்தலா திரைப்படம் எப்படி உள்ளது?

சகுந்தலா திரைப்படம் எப்படி உள்ளது?
Office
Published on

உடல்நலக்குறைவிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் சகுந்தலா. அதே புராணக் கதைதான்! தெலுங்குப் பட இயக்குநரான குணசேகரின் படைப்பு இது.

மகாகவி காளிதாஸர் சமஸ்கிருத மொழியில் எழுதிய மாபெரும் காதல் காவிய நாடகம் 'அபிஞான சகுந்தலம்'. அதைத் தழுவியே இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. புராண கால கதைக்கு சமந்தாவா என்ற ஆச்சரியம் எல்லார்க்கும் உண்டு. படத்துக்கு முன்பு சமந்தாவே,’ நான் நிக்கறதே ஆம்பள மாதிரிதான் நிப்பேன். என்னைய போய் சகுந்தலா கதாபாத்திரத்தில் நளினமாக நடக்கச்சொன்னால் எப்படி?’ என கிண்டலாகக்  கேட்டு அந்த பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை வடிவமைத்துக் கொள்ள பட்ட கஷ்டத்தை விவரித்திருப்பார். தமிழிலும் அவரே டப்பிங் பேசி இருக்கிறார். ‘ எல்லா மொழியும் எளிமையாக இருந்தது. ஆனா இந்த செந்தமிழில் பேசுனதுதான் கஷ்டம்” என்றார் அவர்.   அவரே ஒப்புக்கொண்ட படி பல் உடையும் அளவுக்குத்தான் பேசியிருக்கிறார். கஷ்டம்!

 ஒருநாள் காட்டுக்கு வேட்டையாட வரும் ராஜா துஷ்யந்தன் (தேவ் மோகன்) சகுந்தலாவை(சமந்தா) பார்த்த நொடியிலேயே காதல் கொள்கிறார். இந்த உணர்வு கரமான காட்சிகளிலும் பிற்பாடு சகுந்தலாவை யாரென்றே தெரியாது என துஷ்யந்தன் சொல்கையிலும் சமந்தாவும் சரி  தேவ் மோகனும் சரி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். படத்தின் முதல் பாதி கார்ட்டூன் படத்தை பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தாலும், இரண்டாம் பாதி கொஞ்சம் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது. சமந்தாவின் நடிப்பு கவனிக்கும் படி உள்ளது. காதல், பிரிவு, தவிப்பு, அவமானம் போன்ற பல்வேறு உணர்ச்சி நிலைகளில் சமந்தா அசத்தியுள்ளார். . துஷ்யந்தனாக நடித்துள்ள தேவ் மோகனின் நடிப்பு கச்சிதம். கவரும் பார்வை, கட்டுடல், கம்பீரம் என தோற்றத்திற்கு ஏற்ற பாத்திரம். பிரகாஷ் ராஜ், கெளதமி, மது உள்ளிட்ட பலர் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

இது போன்ற புராணக் கதைகளை திரைப்படமாகும் போது, கதாபாத்திரங்களின் உடல், மொழி, ஆடை, இருப்பிடம் போன்றவற்றைத் தத்ரூபமாக காட்சிப்படுத்துவது சிரமம். அதை ஓரளவு சாத்தியப்படுத்தியுள்ளது படக்குழு. இந்தப் படத்தில் கலை இயக்குநரின் பணி பிரமிப்பை ஏற்படுத்தினாலும், சிஜி காட்சிகள் பலவீனமாக உள்ளன. மணி சர்மாவின் பின்னணி இசை கவனிக்க வைக்கிறது.

ஏற்கெனவே அனுஷ்கா நடிப்பில் ருத்ரம்மா தேவி என்ற சரித்திரப் படத்தை தந்தவர் இயக்குநர் குணசேகர். சகுந்தலா கதை இந்த தலைமுறையினருக்குத் தெரியாது என்று துணிந்து எடுத்திருக்கிறார் எனத் தோன்றுகிறது. வெள்ளித் திரையிலும் சின்னத் திரையிலும் பார்த்து ரசிக்கப்பட்ட கதை சகுந்தலா.  தெலுங்கில் என் டி ராமராவ், சரோஜாதேவி நடிப்பில் சகுந்தலா வெளியாகி இருக்கிறது.  நிஜமான பான் இந்தியா கதை இது. கறுப்பு வெள்ளை காவியங்களைத் தாண்டி, சிஜி சித்து வேலைகளின் காலத்தில் இன்னும் கொஞ்சம் நன்றாக சிஜி வேலைகள் இருந்திருக்கலாமே எனத் தோன்றுகிறது!

logo
Andhimazhai
www.andhimazhai.com