சாருகேசி விமர்சனம் - ஒரு தடவைக்கு நூறு தடவை யோசி!
நம்ம ரேட்டிங்(2 / 5)
நானே நேரடியாக பாதிக்கப்பட்டவன் என்கிற முறையில் கேட்டுக்கொள்கிறேன்…
குழந்தைகள், இளைஞர்கள், இளைஞிகள், பெற்றோர்கள், மற்றோர்கள் ஆகிய அனைத்து மனித ஜீவராசிகளும், அடுத்த சில தினங்களுக்கு தாங்கள் இருக்கிற இடத்திலேயே பத்திரமாக பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இது ஸ்பாயிலர் அலெர்ட் மட்டுமல்ல… கொதிக்கும் பாய்லர் அலெர்ட்..
சாருகேசி ஒய்.ஜி மகேந்திரா படுபயங்கரமான சங்கீத வித்வான். அவர் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே ரேஞ்ச். அவரது விசுவாச மனைவி சுஹாசினி. நவரசங்களை கொட்டிக்கொண்டேயிருக்கும் டிரைவர் தலைவாசல் விஜய், எதற்கும் அடங்காமல் தொடர்ந்து தந்தையை அவமானம் செய்துகொண்டிருக்கும் மகன். சுருக்கமாகச் சொன்னால் மீண்டும் ஒரு சிந்துபைரவி குடும்பம்.
இந்தக் குடும்பத்துக்கு திடீர் மருமகளாக வரும் ரம்யா, பாண்டியன் சாருகேசியின் மகன் அவருக்குப் பிறந்தவனில்லை என்று முதல் மரியாதை ட்விஸ்ட் ஒன்றை அவிழ்த்துவிட, ஏற்கனவே கொஞ்சமா நடிங்க பாஸ் என்று கெஞ்சிக்கொண்டிருந்த நம்மை மகேந்திராவும், சுஹாசினியும் 100 சிவாஜி, 200 கே.ஆர்.விஜயாக்களாக மாறி கதற விடுகிறார்கள். 24 மணிநேரமும் இவர்கள் கூடவே நடமாடுகிற தலைவாசல் விஜயோ நம்மை தலைவிரிகோலத்துக்குக் கொண்டுவந்தே நிறுத்துகிறார்.
மகனின் டார்ச்சர்களால் ஒரு கட்டத்தில் மறதிவியாதி எனப்படும் அல்சைமர் நோயால் பாதிக்கப்படுகிறார் சாருகேசி. அப்படிப் பாதிக்கப்பட்டவர் ஒரு சமயம் தலைவாசல் விஜய்யிடம் ‘நமக்கு நேரம் குறைவா இருக்கு. ஆனா செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய்ய இருக்கு’ என்று சொல்லும்போது, ‘இதையும் விடவா செய்வாங்க?’ என்று நமக்கு உயிர் பயமே வந்துவிடுகிறது.
இருக்கிற அவஸ்தைகள் போதாதென்று கதையின் ஒரு கட்டத்தில், நிஜத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாதவரான சத்யராஜ் கடவுளாக வர ஆரம்பித்து அவரும் தன் பங்குக்குக் கதையை கொத்து பரோட்டா போடுகிறார். சாருகேசியின் கதையை முடித்து பீச்சில் தன்னோடு வாக்கிங் அழைத்த்ப்போகிறார் என்று போகிறது கதை.
கதை போதும் சாமி. யாருங்க டைரக்டர் ? ‘சத்யா’, பாட்ஷா’, ‘அண்ணாமலை’ படங்களை இயக்கினாரே அதே சுரேஷ் கிருஷ்ணாதான். இசை தேனிசைத் தென்றல் தேவாவேதான். தேங்காமூடி சபா கச்சேரிகளுக்குக் கூடாத தேறாத இசை.
அடடே சபா என்றவுடன் தான் ஞாபகத்துக்கு வருகிறது. இந்த சாருகேசியை ஆக்சுவலாக ஒய்.ஜி.மகேந்திரா சபாக்களில் நாடகமாகத்தான் தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டிருந்தாராம். அதை ஷூட்டிங் இல்லாத ஒரு சமயத்தில் தற்செயலாக பார்க்க நேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிதான் ‘இதையே படமாக எடுத்தால் சூப்பராக ஓடும். ஏழெட்டு தேசிய விருதுகள் நிச்சயம்’ என்று ஐடியா கொடுத்தாராம்.
படம் குறித்து இன்னொரு கூடுதல் தகவல். இந்த தகவலுக்கு கோல்டன் மொமண்ட்ஸ், கூஸ் பம்ஸ் மொமண்ட்ஸ் என்று எப்படி வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். படத்தில் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளும் தங்கத்தாமரை மகளுமான ஒய்.ஜி.மதுவந்தியும் நாலைந்து காட்சிகளில் நடித்திருக்கிறார்.

