சீன் -விமர்சனம்
நம்ம ரேட்டிங்(2.5 / 5)
இந்திப்பட இயக்குநர் பால்கி உள்பட சில தெலுங்கு, மலையாள இயக்குநர்கள் நேரடி தமிழ்ப்படம் இயக்க ஆர்வம் காட்டும் பாஸிடிவான காலகட்டத்தில் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் படம் இந்த சீன்.
இப்படி ஒரு கதைக்கு ஏன் இந்த சீன் என்ற டைட்டில் என்பது எண்ட் கார்டு வரைக்கும் புரியாத புதிர்.
எப்படி ஒரு கதை என்று பார்ப்போம்.
தவிர்க்க முடியாத ஸ்பாயிலர் அலெர்ட்.. டி.எஸ்.பி இன்பராஜான சூர்யாவுக்கு பார்வைக்குறைபாடு. அதை மறைத்து வேலை செய்பவர் ஒரு கட்டத்தில் ராஜினாமா செய்ய விரும்பினாலும் உயர் அதிகாரி அனுமதிக்காமல் இருக்கிறார். ஒரு கட்டத்தில் குட்டு உடைந்து பணியில் இருந்து அனுப்பப்பட்ட பிறகும் பிரஸ்டீஜ் காரணமாக தான் ஏற்கனவே துப்புத்துலக்கி வந்த சைக்கோ கொலையாளியை கண்டுபிடிக்க முயல்கிறார். அவரது முயற்சியில் கண்ணுக்கு கண்ணான நஸ்ரியா உடனிருக்க கொலையாளியை எப்படி வேட்டையாடுகிறார் என்பதுதான் சீன்.
மலையாளத்தில் ரோமாஞ்சம், ஆவேசம் என்று இரு வல்லிய படங்கள் கொடுத்தவர் ஜித்து. அந்த இரு படங்களோடு ஒப்பிடும்போது சீன் மிகவும் சுமாரான படம்தான். இன்வெஸ்டிகேடிவ், காமெடி, த்ரில்லர் என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தில் மூன்றுமே நிறைவாக இல்லை. திரைக்கதையில் 62 காட்சிகளில் 72 ஓட்டைகள்.
படத்தின் ஹைலைட் சூர்யாவின் அட்டகாசமான நடிப்பு. நஸ்ரியாவும் சளைக்கவில்லை. கதை கேரள பார்டரான மூணாரில் நடப்பதால் லால், டொவினோ தாமஸ், கொலைகார வில்லனாக கலக்கியிருக்கும் நெல்சன் என்று மலையாள நட்சத்திரங்களின் ஆதிக்கம் அதிகம். ஆனால் எல்லோரும் கலக்கியிருக்கிறார்கள்.
இயக்குநர் ஜித்து மாதவனுக்கு என்ன பிரச்சினை எனத் தெரியவில்லை. ஹீரோவைப் பார்வையற்றவராகக் காட்டியதோடு நிற்காமல் ஹீரோயினுக்கு வலிப்பு நோய், ஹீரோயின் அம்மாவுக்கு குடி நோய், அப்பா ஆனந்தராஜுக்கு மறதி நோய், ஹீரோயின் அப்பாவுக்கு பவுடர் இழுக்கும் நோய் என்று நோயாளிப்படமாகவே மாற்றியிருக்கிறார்.
வினித் அகஸ்டியனின் ஒளிப்பதிவும், சுஷின் ஸ்யாமின் இசையும் படத்துக்கு பக்க பலம். ஒரு முக்கியமான காட்சியில் இளையாராவின் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலைப் பயன்படுத்திவிட்டு ’மஞ்சுமல் பாய்ஸ்’க்கு வந்த வக்கீல் நோட்டீஸ் நமக்கும் வந்துவிடக்கூடாது என்கிற பயபக்தியுடன் முதல் நன்றி கார்டு போட்டிருக்கிறார்கள். போக ஒரு சுவாரசியமான கற்பனையில் ஒரு சிங்கிள் ஷாட்டில் ஜோதிகா வந்துபோகிறார்.
குறைகள் எவ்வளவோ இருந்தாலும் விறுவிறுப்பான காட்சிகளால் கவனம் ஈர்க்கும் டான்தான் இந்த சீன்.
