நடிகர் சங்கக் கட்டடப் பணிக்கு ரூ. 1 கோடி வழங்கிய உதயநிதி!
தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் கட்ட அந்த சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ரூ.1 கோடி வழங்கியுள்ளார்.
சென்னை தியாகராய நகர் அருகே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மீண்டும் இந்த கட்டடத்தை கட்ட நிதி திரட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக நாசர் தலைமையிலான அணி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் ஆகியோர் முன்னிலையில் ரூ. 1 கோடிக்கான காசோலையை நடிகர் சங்கத்தின் பொருளாளர் கார்த்தியிடம் இன்று வழங்கினார்.
நடிகர் சங்கத்தில் ஆயுள் கால உறுப்பினர் என்ற முறையில், தன் சொந்த நிதியிலிருந்து இந்த தொகையை வழங்கியதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நடிகர் சங்க கட்டடம் கட்ட நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, நடிகர் சங்க நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர்.