பொதுவாக இந்திய சினிமாத்துறை ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று உண்டு. இந்தத் துறையில் ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாது படங்களிலும் ஹீரோயிசமே அதிகமாகவும் ஹீரோயின்களுக்கு இரண்டு காதல் காட்சிகள், ஒரு பாடல் என வியாபர நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உண்டு. அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களை மையப்படுத்திய கதைகள் வந்து கொண்டிருந்தாலும் இன்னும் அதிகம் எண்ணிக்கையில் வேண்டும், கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கும் சம்பளம் என்ற குரல்களும் வலுத்துக் கொண்டே இருக்கிறது.
ஆனால், சமீபகாலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளும் இணையத்தொடர்களும் அதிகம் வெளியாவதும் அவை பேசுபொருளாவதும் சர்ச்சைகள் எழுவதும் பார்க்க முடிகிறது. அப்படி இந்த வருடத்தில் வெளியாகி அதிக கவனம் ஈர்த்த பெண்களை மையப்படுத்திய படங்கள், இணையத்தொடர்கள் என்னென்ன என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
‘பேட் கேர்ள்’ திரைப்படம்:
பெண்களின் பிரச்சினைகளை பெண்களின் பார்வை வழி பேசிய திரைப்படங்கள் வெகுசிலதான். அதில் ஒன்றாக தனித்து நிற்கிறது சமீபத்தில் வர்ஷா பரத் இயக்கத்தில் வெளியான ‘பேட் கேர்ள்’ திரைப்படம். படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே பல சர்ச்சைகள் கிளம்பினாலும் பல சென்சார் ‘கட்’ வாங்கிய பின்பு கடந்த வாரம் திரைக்கு வந்திருக்கிறது ஒரு பெண்ணின் வாழ்வில் மூன்று கட்டங்களில் அவள் சந்திக்கும் பிரச்சினைகளும் அதை அவள் எதிர்கொள்ளும் விதமும் அதன்மூலம் பார்வையாளர்களுக்கு எழும் கேள்விகளும்தான் ‘பேட் கேர்ள்’ திரைப்படம்.
’லோகா’ திரைப்படம்:
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ தமிழிலும் தாறுமாறு வெற்றியடைந்தது நினைவிருக்கலாம். அதுபோல, இந்த வருடத்திற்கான படமாக மலையாளத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது ‘லோகா’. பெண் சூப்பர் ஹீரோ கதையான இதில் ஆக்ஷன், எமோஷன் என ஆல் ஏரியாவிலும் பின்னியிருந்தார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன். தொன்மக்கதையின் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சராக விரியும் இந்தக் கதை நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய ஒன்று.
’டப்பா கார்டெல்’ இணையத்தொடர் (நெட்ஃபிலிக்ஸ்):
மும்பையில் டப்பாவில் உணவு தயாரித்து டெலிவரி செய்யும் ஐந்து பெண்கள் எதிர்பாராத விதமாக போதைப்பொருள் கும்பலில் சிக்க நேரிடுகிறது. ஐந்து பெண்கள் அந்த தாதா கும்பலை எதிர்கொள்ளும்விதம்தான் ‘டப்பா கார்டெல்’. வெவ்வேறு பின்னணி, சூழ்நிலை கொண்ட பெண்கள் அவர்களின் குணாதிசியங்கள், போதைப்பொருள் பின்னணி என விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது ஒவ்வொரு எபிசோடும். சிகரெட், மது அருந்துவது, கெட்ட வார்த்தை பேசுவது என நடிகை ஜோதிகாவின் கதாபாத்திர வடிவமைப்பு பற்றி இந்த சீரிஸ் வெளியான சமயத்தில் விவாதப்பொருளானது நினைவிருக்கலாம். பெண்களை மையப்படுத்திய கதை என்பதால் ஐந்து பெண்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டிருக்கிறது இந்த வெப்சீரிஸ்.
‘பர்தா’ திரைப்படம்:
அனுபமா பரமேஸ்வரன், சங்கீதா, தர்ஷனா ராஜேந்திரன் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் கடந்த மாதம் வெளியான படம் ‘பர்தா’. ‘சினிமா பண்டி’, ‘சுபம்’ படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா இயக்கத்தில் வெளியான படம் இது. சிறிய கிராமத்தில் இருக்கும் சுப்பு என்ற பெண் பர்தா அணிய வேண்டும் என்ற தனது குடும்ப பாரம்பரியத்தை பின்பற்ற கட்டாயப்படுத்தப்படுகிறாள். அதுவே அவள் நகரத்திற்கு இடம்பெயர்ந்து சங்கீதா மற்றும் தர்ஷனாவை சந்திக்கும்போது அவளது வாழ்க்கை மாறுகிறது. பாரம்பரியம் என்ற பெயரில் பெண்கள் மீது பல தலைமுறைகளாக கட்டவிழ்த்து விடப்படும் சமூக பிற்போக்குத்தனங்களை கேள்வி கேட்கிறது இந்த ‘பர்தா’.