40 ஆண்டுகாலமாக சினிமாவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருந்தவர்!

40 ஆண்டுகாலமாக சினிமாவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டே இருந்தவர்!
Published on

சினிமாவை மட்டுமே நேசித்த நண்பர் சத்யேந்திரனின் மறைவு பெரும் துயரை உருவாக்குகிறது.. நல்ல சினிமாவின் காதலர் அவர்.. எந்த சினிமாவாக இருந்தாலும் அதை ஒவ்வொரு கண்ணோட்டத்தில் அலசி பார்த்து விமர்சிப்பவர்.. அவரின் ஆன்மா இனியும் நல்ல சினிமாக்களுடன் வாழட்டும்..

- எக்ஸ் தளத்தில், தனது படங்களில் ஒரு துண்டுக் காட்சியில் நடிக்கக்கூட சத்யேந்திரனுக்கு வாய்ப்பு தராத இயக்குநர் சேரன்.

சேரன் மட்டுமா, இயக்குநர் மிஷ்கின் தொடங்கி சினிமாவின் பெரும்புள்ளிகள் பலரும், நேற்று மாலை முதல் சத்யேந்திரனுக்காக உருகி உருகி இரங்கல் பதிவுகளை அள்ளிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இதேபோல் முகநூலிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் நெஞ்சுவலிக்க அஞ்சலிக் குறிப்புகள் குவிந்துகிடக்கின்றன.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது ஒரு சொட்டு தண்ணீர் தரக்கூடாத மனமில்லாத திரையுலக பிரபலங்கள் அவர் இறந்தபிறகு ஆளுயர மாலையுடன் கண்ணீர்மல்க நிற்கும் காட்சிகளை இன்று நேற்றா பார்க்கிறோம்.

யார் இந்த சத்யேந்திரன் ?

கர்நாடகத்தை பூர்விகமாகக் கொண்ட சத்யேந்திரன் தமிழ் சினிமாவில் நடிகராக ஜொலிக்கும் கனவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே குடியேறியவர். பெண் வாசனை கிடைக்காத கட்டை பிரம்மச்சாரி. இந்த 40 ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்த உருப்படியான ஒரே வாய்ப்பு படத்தொகுப்பாளர் லெனின் இயக்கிய ‘நாக் அவுட்’ குறும்படம். அப்படத்தில் அவர் ஒரு சடலமாகத்தான் நடித்திருந்தார். அதற்குபின்னர் சில துண்டு துக்கடா காட்சிகளாக சுமார் 40 படங்களில் வந்துபோயிருக்கிறார். அதாவது தோராயமாக வருடத்துக்கு ஒரு படம். அவ்வேடத்துக்கு 300 முதல் 500 ரூபாய்க்கு மேல் கிடைத்திருக்காது என்னும் வகையில் அவரது வருட சம்பாத்தியமே அதுதான்.

ஆக நேற்றும் இன்றும் அவருக்காக கண்ணீர் சிந்துபவர்கள் யாரும் அவருக்கு ஒரு துண்டுக்காட்சி வாய்ப்பு கூட தரவில்லை. சில நண்பர்கள் அவ்வப்போது ஒருவேளை சோற்றுக்கு உதவ, சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் காட்சிக்கு படம் பார்க்க வந்து அப்பட மக்கள் தொடர்பாளர்கள் ஆதரவில் உணவருந்தி படங்கள் பார்த்துக்கொண்டவரைத்தான் நேற்று, ‘போதும்பா நீயும் உன் சினிமாவும் ‘ என்று மரணம் அழைத்துக்கொண்டது.

சினிமாவில் கரையேறிவிட முடியாதா என்று நாற்பதாண்டுகளை நகர்த்திக்கொண்டு வந்த சத்யேந்திரன் பஸ் பயணத்துக்குக் கூட வழியின்றி எங்கு சென்றாலும் நடைராஜா சர்வீஸ்தான்.

சத்யேந்திரனைப் போல் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் கோடம்பாக்கத்தில் ஒரே ஒரு நல்ல வாய்ப்புக்காக குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.

வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ அவர்கள் கண்ணைமூடும்போது தரமான கண்ணீர்த்துளிகள் வரவழைக்கக்கூடிய இரங்கல் பதிவுகள் நிச்சயம் கிடைக்கும்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com