
சென்னை விருகம்பாக்கத்தில் அமைதியாக இருக்கிறது அந்த வீடு. வாசலில் நுழைந்ததும் எதிர்கொள்கிறார் இயக்குநர் பூரணபிரக்ஞா.
‘’மேலே போங்க.. அங்கே ஒரு கண்ணாடி அறை இருக்கும். அங்கே உட்காருங்க. அப்பா வந்திடுவார்’’ என்கிறார். குறுகலான படிகள். அருகே கண்ணாடிக் குழாய் மின் தூக்கி இருக்கிறது. உடனிருந்த இயக்குநர் ராசி அழகப்பன், இந்த லிப்ட் அமைக்க என்ன செலவாகும்? எனக் கேட்கிறார். ‘அப்போ ரொம்ப செலவாச்சு. இப்ப கம்மியாகத்தான் ஆகும்’ என்கிறார் பூரணபிரக்ஞா. ராசி, தன் வீட்டிலும் இப்படி ஒரு லிப்ட் அமைக்கவேண்டும் என்று அந்த லிப்டை ஆசையுடன் பார்த்தவாறே நம்முடன் படியேறுகிறார். அநேகமாக அடுத்தமாதம் சோழிங்கநல்லூரில் இருக்கும் மாளிகையில் அதை அமைத்துவிடுவார். படியில் ஏறுகையில் சுவரில் அபூர்வ சிங்கீதம் என கருப்புப் பலகையில் ஆங்கிலத்தில் எழுதி கீழே லவ், கமலஹாசன் என எழுதப்பட்டிருக்கிறது.
அறையில் இருந்த மஞ்சள் நிற நாற்காலிகளில் அமர்ந்த மறு நொடி பக்கத்து படுக்கையறையில் இருந்து கையில் சிறு ஊன்றுகோலுடன் தோன்றுகிறார் சிங்கீதம் சீனிவாச ராவ். ராஜபார்வை, பேசும்படம், மகளிர்மட்டும், மைக்கேல் மதனகாமராஜன் போன்ற கமல் படங்களின் இயக்குநர். மாயாபசாரில் உதவி இயக்குநராக பணிபுரிய ஆரம்பித்து ராஜாஜியின் திக்கற்ற பார்வதி நாவலை திரைப்படமாக இயக்கி தேசிய விருது பெற்றவர். 94 வயதே நிரம்பிய இளைஞர்! எழுபது படங்களுக்கு மேல் இயக்கிய அனுபவம் வாய்ந்தவர்.
ராசி.அழகப்பன், சிங்கீதம் சீனிவாசராவிடம் கமலஹாசன் படங்களில் உதவி இயக்குநராக வேலை செய்தவர். மிகுந்த பணிவுடன் அவர் பாதம் பணிகிறார்.
ராவ், எங்கள் அனைவரையும் நலம் விசாரித்து அமர்கிறார். வளர்ந்து கனிந்த ஆலமரத்தின் நிழலில் அமர்வது போல் இருக்கிறது.
“செப்டம்பர் மாத அந்திமழை இதழில் தமிழில் வெளியான மகிழ்ச்சியான திரைப்படங்கள் பற்றி கட்டுரை வெளியிட்டோம். அப்போது எடுத்த கருத்துக் கணிப்பில் மைக்கேல் மதன காமராஜன் படமே சிறந்த மகிழ்ச்சியான படமாகத் தேர்வாகியது. அதன் இயக்குநர் என்ற முறையில் உங்களைச் சந்தித்து எங்கள் பாராட்டுகளைத் தெரிவிக்க வந்துள்ளோம்’’ என்கிறோம்.
ஒரு குழந்தையைப் போல் மலர்ந்து சிரிக்கிறார். சால்வையைப் போர்த்தி அந்திமழையின் சிறு பாராட்டுக் கேடயம் ஒன்றை வழங்குகிறோம். எழுபது படங்களுக்கு மேல் இயக்கி இருக்கும் அவர் பெற்றிருக்கக் கூடிய நூற்றுக்கணக்கான கேடயங்களில் ஒன்றாக நம்முடையதும் அமைந்தாலும் அவர் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி அலாதியாக இருக்கிறது.
“மைக்கேல் மதன காமராஜன், அதுவாகவே அமைந்த படம். திட்டமிட்டெல்லாம் எடுக்க முடியாது. அது இறைஅருள்” என்கிறார்.
“சார், இப்ப ஏதாவது ஸ்கிரிப்ட் எழுதிகிட்டு இருக்கீங்களா?’’ என்கிறார் ராசி.
“ஸ்கிரிப்ட் எழுதறதா? படம் இயக்கிக்கிட்டு அல்லவா இருக்கேன்?”
“ஓ.. நான் தான் தப்பா கேட்டுட்டேன் போலிருக்கு”
“கல்கி 2040 படம் வந்ததுல்ல…. அதோட இயக்குநர் நாக் அஸ்வினுக்காக ஒரு படம் இயக்குறேன். இங்கே ஆபீஸில் இருந்தே என்னுடைய லேப் டாப் திரைக்கு மானிட்டர் கனெக்ஷன் குடுத்துடுறாங்க. நான் பார்த்து சொன்னால் போதும். எவ்வளவு வளர்ச்சி பாத்தீங்களா? அந்த காலத்தில் மாயாபசார் படத்தில் உதவி இயக்குநராக அறிமுகம் ஆனப்ப காமிரா பக்கம் நின்னு பார்த்ததில் இருந்து இன்னிக்கு நம்பவே முடியாத வளர்ச்சி…”
“இந்த படத்தில் யார் நடிக்கறாங்க…?”
“முற்றிலும் புதுமுகங்களை மட்டும் வெச்சிதான் இதை எடுக்கிறோம்!”
சிங்கீதம் தினமும் காலையில் பத்து மணியில் இருந்து 12 மணி வரை இந்த வயதில் தினமும் வேலை செய்வதாகத் தெரிவிக்கிறார். அதன் பின்னர் ஓய்வு. ஓடிடியில் சமீபத்தில் அமீர்கானின் சித்தாரே ஜமீன் பர் படத்தைப் பார்த்து ரசித்ததாகக் கூறுகிறார்.
”சார்… நீங்கதானே புஷ்பக் (பேசும்படம்) எடுத்தீங்க. வசனமே இல்லாமல் ஒரு படம் எடுக்கணும்கிற அந்த யோசனை எப்படி வந்துச்சு?”
“கமலுடன் ராஜபார்வை செய்த காலத்தில் இருந்தே அந்த யோசனை இருந்தது. ஆனால் தயாரிப்பாளர்கள் கிடைக்கல. பிறகு நானே ஷ்ரிங்கார் நாகராஜுடன் இணைந்து தயாரிச்சேன். அவர் ஷ்ரிங்கார் என்கிற பெயரில் டூர் கம்பெனி நடத்திகிட்டு இருந்தவர். இதை ஒரு சவாலாக எடுத்துகிட்டு தயாரிக்க முன்வந்தார். தேசிய விருது கிடைச்சது. அவர்தான் கன்னட நடிகர் ராஜ்குமாரின் சம்பந்தி தெரியும் இல்லையா? உலகம் முழுக்க மிக வரவேற்பைப் பெற்று ரொம்ப நல்லா ஓடியது. அந்த படத்துக்குத்தான் மொழி தடை இல்லையே.”
“கமல் சாருக்கு 71 வது பிறந்த நாள் சமீபத்தில் வந்துச்சே….’’
“நான் நேராப் போகலே… போனில் செய்தி அனுப்பினேன். 71 என்பது வெறும் எண் தான். இன்னும் நீங்க இளைஞர்தான் என்று. அவரும் ஆமா... இப்பகூட இளைஞர்களுடன் வேலை செய்திட்டுருக்கேன்னு பதில் அனுப்பினார்’’ எனச் சொல்லி மகிழ்ந்து சிரிக்கிறார்.
எழுபது படங்களுக்கும் மேலாக அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இயக்கி இருக்கும் சிங்கீதம் அவர்களை மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விடைபெறுகிறோம்.