Justice Hema Committee members handing over the report to Chief Minister Pinarayi Vijayan
நீதிபதி ஹேமா ஆணைய உறுப்பினர்கள் முதல்வர் பினராயி விஜயனிடம் அறிக்கை வழங்கியபோது.

இவ்வளவு மோசமா மலையாள திரையுலகம்?... புயலை கிளப்பிய ஹேமா கமிஷன் அறிக்கை...

Published on

மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரித்த ஹேமா ஆணையத்தின் அறிக்கை வெளியாகி, கேரள சினிமாவில் புயலை கிளப்பியுள்ளது.

கேரளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட பலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனா். அதைத் தொடா்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறாா்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 போ் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது.

இந்த ஆணையம் கடந்த 2019ஆம் ஆண்டு அரசிடம் சமர்பிக்கப்பட்டது. 235 பக்கம் கொண்ட அறிக்கையை கேரள அரசு நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.

அந்த நிபுணா் குழுவின் அறிக்கையில், ஊதிய வேறுபாடு, பாலியல் சீண்டல் உட்பட பெண்கலைஞர்கள் எதிர்கொள்ளும் 17 வகையான சுரண்டல்களை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக, மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குநா்கள், நடிகா்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளா்கள் உட்பட பத்து பதினைந்து போ் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது. இவா்கள் திரையுலகின் பெண் தொழிலாளா்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகிறது’ என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நடிகைகள் மட்டுமின்றி தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் பெண்களும் பாலியல் சமரசங்கள் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனா். சமரசம் செய்ய மறுக்கும் பெண்களுக்கு திரைத் துறையில் அறிவிக்கப்படாத தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையாள திரையுலகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ‘ஹேமா குழு’ அறிக்கை, திரையுலகை மட்டுமல்லாது மாநில அரசியலில் அதிா்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

விரிவான திரைத் துறைச் சட்டத்தை உருவாக்குவது, திரைத் துறை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண தீா்ப்பாயம் அமைப்பது உள்பட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தாா்.

இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து மறைந்த மலையாள நடிகர் திலகன் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு அமைச்சர் அமைச்சர் கணேஷ் குமார்தான் காரணம் என நடிகை சோனியா திலகம் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், நடிகை தனுஸ்ரீ தத்தா, ஹேமா ஆணைய அறிக்கை பயனற்றது என்று கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com