ஜிகு ஜிகு ரயில் பாடல் காட்சியில் சிறுவர்களுடன்  ஏ.ஆர். ரஹ்மான்
ஜிகு ஜிகு ரயில் பாடல் காட்சியில் சிறுவர்களுடன் ஏ.ஆர். ரஹ்மான்

மாமன்னனின் ’ஜிகு ஜிகு ரயில்’ பாடல் உருவானது எப்படி? யுகபாரதி நேர்காணல்

சமீபத்தில் வெளியான இயக்குநர் மாரிசெல்வராஜின் “மாமன்னன்” திரைப்படத்தில் இடம்பெற்ற ”ஜிகு ஜிகு ரயில்” என்ற பாடல் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழ் சினிமாவில் இதுவரை ரயிலை மையப்படுத்தி வெளிவந்த அத்தனை பாடல்களும் மெகாஹிட் . ரயில் தமிழ் சினிமாவில் பெரும்பாலும் நவீனத்தின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. இயக்குனர் இமையம் பாரதி ராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் “பூவரசம் பூ பூத்தாச்சி” பாடல், இயக்குனர் ஷங்கரின் ஜென்டில் மேன் திரைப்படத்தில் வரும் “சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே” பாடல், ஃபைவ் ஸ்டார் திரைப்படத்தில் வரும் “ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்” பாடல், ஜெயம் திரைப்படத்தில் வரும் “வண்டி வண்டி ரயிலு வண்டி”, பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் வரும் “வா ரயில் விட போலாம் வா” உள்ளிட்ட பாடல்கள் இன்னும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவை.

அந்த வரிசையில் “ஜிகு ஜிகு ரயில்” பாடலும் இடம்பெற்று திரைப்படம் வெளிவருவதற்கு முன்னமே சூப்பர் ஹிட். அதிலுள்ள “எல்லாம் மாறும் இனி எல்லாம் மாறும்” வரிகள் தன்னம்பிக்கை வளர்ப்பதாக உள்ளது. இப்பாடலை ஏ. ஆர். ரஹ்மான் பாடியது மட்டுமின்றி இதன் லிரிக்கல் வீடியோவில் குழந்தைகள் புடை சூழ நடனமும் ஆடியிருக்கிறார். படத்தில் இப்பாடல் படம் முடிந்து பங்கேற்றவர்கள் பெயர்கள் போடப்படும்போது பின்னணியில் ஒலிக்கிறது. இப்பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் யுகபாரதியைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

பாடலாசிரியர் யுகபாரதி
பாடலாசிரியர் யுகபாரதி

”கடல், காடு, யானை, ரயில் இவை நான்கையும் மையப்படுத்தி வெளிவரும் பாடல்களோ, கதைகளோ எப்பொழுதும் பெரும்பாலும் வெற்றி பெற்றவையாகவே இருக்கின்றன,

ரயில் பற்றிய பாடல் என்பதால் இப்பாடலுக்குள் செல்வதற்குள் கலைவாணரின் ”கிந்தனார் கதாகாலட்சேபம்” என்கிற நாடகம் குறித்து தெரிந்துகொள்வோம். இதிலும் ரயில் வருகிறது. இந்த நாடகம் உருவானதே ஒரு சுவாரசியமான வரலாறு. அந்த காலத்தில் பிரபல திரைப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி சென்னை தியாகராயர் நகரில் மாளிகை ஒன்றை புதிதாகக் கட்டி அதன் திறப்பு விழாவுக்கு சேங்காலிபுரம் அனந்த ராம தீட்சதரிடம் “நந்தன் சரித்திரம்” கீர்த்தனைக் கதாகாலட்சேபம் நடத்தித் தருமாறு வேண்டுகோள் விடுக்கிறார். அனந்த ராம தீட்சதர் சற்று மடியானவர். சூத்திரப் பெண்மணி அதுவும் நடிகை கட்டிய வீட்டில், கதாகாலட்சேபமா? என்று நடத்திக் கொடுக்க மறுத்துவிட்டார்.

நடிகை டி. ஆர். ராஜகுமாரி இதனை கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லி வருத்தப்பட்டார். உடனே அனந்த ராம தீட்சிதருக்கு பதிலடி தர கலைவாணர் எழுதி நடத்தித் தந்ததுதான் “கிந்தனார் சரித்திர கதாகாலட்சேபம்”.

பின்னாளில் கிந்தன் கலாட்சேபம் , அண்ணாவின் கதை வசனத்தில் உருவான திராவிட இயக்கத்தின் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டநல்ல தம்பி என்ற திரைப்படத்தில் “கர கரவென சக்கரம் சுழலும்” என்ற பாடலில் பயன்படுத்தப்பட்டது.

அப்பாடல் சொல்வது என்ன?

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த கிந்தன் படித்து பெரிய அதிகாரியாகிறான். அதனால் சாதிய, வேறுபாடுகள் ஏதுமின்றி, ரயிலில் அனைவருடனும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து பயணம் செய்கின்றான். ரயில் எப்படி ஆண்டாண்டு காலமாக படிந்திருந்த வேறுபாடுகளை, தீண்டாமைகளை களைந்தது அனைவரையும் சமமாக நடத்தியது என தனக்கேயுரித்த பாணியில் கலைவாணர் சுவாரசியமாக கூறியிருப்பார். அதில் பாடல் வரிகள்,

“ஏய் ரயிலே எங்கள் நாட்டில் எத்தனை பெரிய பெரிய தலைவர்கள் எங்கள் தேசத்திலே எவ்வளவோ தீண்டாமையை ஒழிக்க பாடுபட்டும் இன்னும் தீண்டாமை ஒழிந்த பாடில்லை இப்பேர்ப்பட்ட அரிதான காரியதை மனிதர்களாலே முடியாத காரியத்தை மரக்கட்டையாகிய நீ வந்த அன்னைக்கே செய்து விட்டாய்…! சகல சாதியாரையும் ஒரே பெஞ்சின் ஒன்றாக உட்கார வைத்த பெருமை உன்னுடைது”- என அமைந்திருக்கும்.

இந்த பாடல் எனக்குள் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்று. ரயிலில் சாதிய வேறுபாடுகள் தோன்றாது. அது அனைவரையும் சமத்துவத்தோடு நடத்துகிறது.

அதே போல், இசைப் போராளி பாப் மார்லியின் “Zion train is coming on the way” என்ற பாடலும் ரயிலை மையமாகக் கொண்டு தீண்டாமையையும், அடிமைத்தனத்தையும் ஒழித்து சமத்துவத்தை வலியுறுத்தும் பாடலாக இருக்கும். Raggae வகையைச் சார்ந்த அந்த பாடல் இசையமைப்பாளர் ரஹ்மான் அவர்களை ஈர்க்கவே அது போல் இசையமைக்கப்பட்டது தான் “ஜிகு ஜிகு ரயில்” பாடல்.

நான் ஒரு முறை பொள்ளாச்சியிற்கு விருது வாங்கும் விழா ஒன்றிற்கு சென்றிருந்தேன். அப்பொழுது அங்கு வந்த தம்பதிகள் ஒருவர் என்னை சாலையில் அடையாளம் கண்டு ”ஜெய் பீம்” திரைப்படத்தில் வரும் “இந்த பொல்லாத உலகத்திலே” பாடல் அவர்களுக்கும் மிகவும் ஆறுதல் அளித்ததாகவும், அதன் பின்னரே என்னைப் பற்றி அறிந்து கொண்டனர் எனவும் கூறி என் கால்களில் விழ முற்பட்டனர். நான் நெகிழ்ந்து விட்டேன்.

அந்த சம்பவத்திற்கு பிறகு நான் கற்றுக் கொண்டதெல்லாம், இங்கு எல்லா சாமானிய மனிதனும் சாதிய வேறுபாடுகளாலும், பிரச்னைகளாலும் ஒரு வெறுமைக்குள் தள்ளப்பட்டிருக்கிறான். அதற்கு கடந்த பத்து வருடங்களாக சாதிய பிரச்னைகளை, சமூக ஏற்றத் தாழ்வுகளை கருப்பொருளாக கொண்டு கலைப்படைப்பாக, திரைப்படங்களாக, பாடல்களாக வருவது தங்களை ஏதோவொரு வகையில் ஆற்றுப்படுத்துவதாக உணர்கிறார்கள்.

இதேபோல் தான் ”அசுரன்” திரைப்படத்தில் வரும் “எள்ளு வய பூக்கலையே” பாடலிலும் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. காலங்காலமாக “எள்ளு” என்ற தானியம் ஈமக் காரியத்திற்கு பயன்படுவதால் அதனை ஒதுக்கியே வைத்து, வெறும் சொல்லாடலாக “எள்ளு” என்பதைக் கூட உபயோகப்படுத்தமாட்டார்கள். உதாரணமாக, தேங்காயிலிருந்து வருவதால் தேங்காய் எண்ணை, கடலையிலிருந்து வருவதால் கடலை எண்ணை, எள்ளிலிருந்து வருவதால் எள் எண்ணெய் என்று தானே வர வேண்டும், ஆனால் மேலே குறிப்பிட்டுள்ள படி எள் என்ற சொல்லையே அமங்கலமாக ஐதீகப்படுத்தி அதனை நல்லெண்ணெய் என்று குறிப்பிட்டு வந்துள்ளனர். இதனையெல்லாம், நான் எழுதும் பாடல்களில் கடைபிடிக்க கூடாது என்று தான் “எள்ளு வய பூக்கலையே” என்று எழுதினோம்.

என்ன தான் நான் ”காதல் பிசாசே”, “ஊதாக்கலரு ரிப்பன்” உள்ளிட்ட பாடல்களால் நான் அறியப்படுவதை காட்டிலும்,”ஜிகு ஜிகு ரயில்” போன்ற சமத்துவத்தை வலியுறுத்தும் பாடலாலும், “எள்ளு வய பூக்கலையே” போன்ற மூட நம்பிக்கையை அகற்றும் பாடலாலும், “இந்த பொல்லாத உலகத்திலே ஏன் என்னை படைத்தாய் இறைவா” போன்ற எளிய மக்களின் வலிகளை பிரதிபலிக்கும் பாடலாலும் அறியப்படுவதையே விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com