விஜய்சேதுபதி
விஜய்சேதுபதி

இந்தி படிக்கக்கூடாது என்று தமிழகத்தில் சொல்லவில்லை! – விஜய் சேதுபதி

“தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியைத் திணிக்கக் கூடாது என்றுதான் சொன்னார்கள்.” என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் 'மெரி கிறிஸ்மஸ்'. இதில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப், ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ப்ரீத்தம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதியன்று வெளியாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன், கத்ரீனா கைஃப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் விஜய் சேதுபதி பேசியது:

“ 96 படம் பார்த்துவிட்டு இயக்குநர் எனக்கு மெசேஜ் அனுப்பினார். அரை மணிநேரம் பேசினோம். அவருடைய முதல் படம் என்னுடைய பிறந்தநாள் அன்று வெளியானது. அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம், ’ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநர், ஸ்ரீராம் ராகவன் படம் இயக்கியிருக்கிறார்’ என கூறினார். அவரின் முதல் படம் எனக்கு மிகவும் பிடித்தது. ஒரு நாள் இவருடன் பணியாற்ற வேண்டும் என ஆசையிருந்தது.

அவர் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ படத்தின் கதை சொன்னார் பிடித்திருந்தது. நடிகர்களுக்கு சுதந்திரம் கொடுப்பார் ஸ்ரீராம் ராகவன். அவர் எப்படி வேலை வாங்குவார் என்பதே தெரியாது. அவருடன் பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்தது. கத்ரீனா கைஃபை நேரில் பார்த்து எனக்கு ஒரு ஆச்சரியம். நம்மைவிட சீனியர் நடிகர் என்ற பயம் எனக்குள் இருந்தது. அவரிடம் எந்த தலைகனம் இல்லை. அவருடன் பணியாற்றியது மிகவும் கம்பர்டபிளாக இருந்தது. நாங்கள் எல்லோரும் படத்தைப் பார்த்துவிட்டோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும். பாசியில் நடிக்கும்போது இந்தியில் பேசுவது கடினமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது.” என்றார்.

இந்தியில் சேதுபதி பேசியதைப் பற்றி செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, “ஆமிர்கான் வந்தபோதுகூட இந்தி தொடர்பான கேள்வியைக் கேட்டீர்கள். இந்தக் கேள்வி எதற்கு என்பது எனக்குப் புரியவில்லை. இப்போது என்னிடமும் கேட்கிறீர்கள். தமிழகத்தில் இந்தி படிக்கக் கூடாது என யாரும் சொல்லவில்லை. இந்தியைத் திணிக்கக்கூடாது என்றுதான் சொன்னார்கள். உங்களின் கேள்வியே தவறானது. இங்கே எல்லோரும் படித்துக்கொண்டு -தான் இருக்கிறார்கள். யாரும் தடுக்கவில்லை.” என்றார் விஜய் சேதுபதி.

logo
Andhimazhai
www.andhimazhai.com