’இதயம் முரளி’க்கு என்ன ஆச்சி ? களைகட்டும் கட்டப்பஞ்சாயத்து…

Idhayam Murali
’இதயம் முரளி’
Published on

‘ பராசக்தி படத்தை இயக்கிய வகையில் எனக்கு 8 கோடியே 39 லட்சம் சம்பள பாக்கி இருக்கிறது. எனவே அப்படத்தயாரிப்பாளரின் ‘இதயம் முரளி’ படத்துக்கு தடை விதிக்கவேண்டும் ‘ என்று சுதா கொங்குரா கோர்ட்டுக்கு சென்றிருக்கும் நிலையில் அடுத்த வெள்ளியன்று அப்படம் ரிலீஸாகுமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா,ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த ஜனவரி 10 அன்று ரிலீஸான படம் ‘பராசக்தி’. திமு கழகத்துக்கு நெருக்கமான ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்‌ஷர்ஸ் இப்படத்தைத் தயாரித்திருந்தது. படத்தின் வசூல் பட்ஜெட்டை விடக் குறைவாக இருந்ததால் தயாரிப்பு நிறுவனம் இயக்குநருக்கு சம்பள பாக்கியை செட்டில் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

படம் ரிலீஸான 6 மாதங்கள் கழித்து, அதுவும் தயாரிப்பாளரின் அடுத்த படமான ‘இதயம் முரளி’ ஜூலை 10 அன்று ரிலீஸ் என்று அறிவிக்கப்ப்ட்டுள்ள நிலையில் சுதா கோர்ட்டுக்குச் சென்று தடை கோரியிருப்பது தயாரிப்பு தரப்பை கடும் ஆத்திரத்துக்கு ஆளாக்கியுள்ளது.

சம்பள பாக்கிக்காக இயக்குநர் சங்கத்தையோ, தயாரிப்பாளர் சங்கத்தையோ நாடாமல் சுதா கோர்ட்டுக்குச் சென்றிருப்பதால் இதில் அரசியல் தலையீடும் இருக்கக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சில தயாரிப்பாளர்கள் தலைமையில் பஞ்சாயத்தைக் கூட்டியிருக்கும் ஆகாஷ் பாஸ்கரன், சுதா படத்துக்கு தான் சொன்னதை விட மிகப்பெரிய செலவு இழுத்துவிட்டதால் எங்களால் அவருக்கு மீதிப் பணத்தை செட்டில் செய்ய முடியவில்லை. அவர் கேட்ட தொகையில் பாதியை செட்டில் செய்துவிடுகிறோம். எனவே உடனே வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லுங்கள் என்று முறையிட்டிருக்கிறார்களாம்.

நாட்டாமைகள் தீர்ப்புக்காக இதயம் முரளி வெயிட்டிங்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com