இளையராஜா 50… நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர்தான் ராஜா

இளையராஜா 50… நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர்தான் ராஜா
Published on

மே 14. தமிழக வரலாறு தன்னைப் பொன் எழுத்துகளால் பொறித்துக்கொள்ளவேண்டியநாள். ராஜாவின் அறிமுகப்படமான ‘அன்னக்கிளி’ வெளியாகி இன்று 50ம் ஆண்டைத் தொட்டிருக்கிறது. இந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தை எத்தனையோ பேர் ஆண்டிருக்கலாம். ஆனால் இங்கே தமிழர்களின் மனங்களின் ஒரே ஒரு ராஜா அவர்தான் இளையராஜா என்பது மட்டும்தானே நிதர்சனம்.

அன்னக்கிளியில் ராஜாவின் பெயர் இடம் பெற்ற டைட்டில் கார்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப்போடுவதில் துவங்கி, சமூக வலைதளங்களில் ராஜாவின் ரசிகர்கள் தாரைதப்பட்டைகள் முழங்க கொண்டாட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். அவரது சாதனைகள் பட்டியலிடப்படுகின்றன. அவற்றில் பல ஏற்கனவே தெரிந்தவைதான் என்றாலும் எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாத அவரது பாடல்களைப் போலவே முழுமையாகப் படிக்காமல் கடக்க முடிவதில்லை.

தனது பிறந்தநாளான ஜூன் 2 அன்று வழக்கம்போல் ரசிகர்களுக்கு தரிசனம் தந்துவிட்டு அன்று இரவே பெங்களூருவில் சிம்பொனி கச்சேரி களைகட்ட இந்த ஆண்டு முழுவதும் உலகம் முழுக்க தனது இசைப்பயணத்தைத் துவங்க முடிவு செய்திருக்கிறார் ராஜா.

1500க்கும் மேற்பட்ட படங்கள் 8000த்துக்கும் மேற்பட்ட பாடல்கள் என்பதோடு முடித்துவிட முடியுமா ராஜாவின் சாதனைகளை ? ‘ஹவ் டு நேம் இட், நத்திங் பட் விண்ட், திருவாசகங்கள் வழியாக சிம்பொனி வரை எத்தனை ராட்சஸ சாதனைகள்.

விகடன் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை கமல் கையால் கொடுக்கச் செய்தபோது ராஜா சொன்னதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். ‘வாழ்நாள் சாதனையாளர் விருதை நான் வாங்கலாமா ? என் சாதனை இன்னும் முடியலையே “

மனிதர் உணர்ந்துகொள்ள அது மனித சாதனை அல்லவே.

அவரை வியக்கிற பலரும் முடிவாக சொல்லுவது இந்த 82 வது வயதிலும், ஒரு மூன்று மணி நேர மேடைக் கச்சேரிகளில் ஒரு கணம் கூட அமராமல், ஒரு சொட்டு நீர் அருந்தாமல், ‘அமுதே தமிழே’ என்று இசையை அள்ளி வழங்குவதை. இந்த அதிசயத்தை அவர் தனது நூறாவது வயதிலும் நிகழ்த்தவிருப்பதை நாம் நிச்சயம் பார்க்கத்தான் போகிறோம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com