இளங்காத்து வீசுதே… இசைஞானி ‘83 தரிசனம் கிடைக்காமல் தவித்த ரசிகர்கள் !

இசைஞானி இளையராஜா
இசைஞானி இளையராஜா
Published on

தனது இசையை ஒரு நதியின் பயணம் என்று எளிமையாக சொல்லிக்கொள்ளும் இசைஞானி இளையராஜா தனது 50 ஆண்டுகால பிரவாக பயணத்தின் வழியே இன்று தனது 83வது பிறந்தநாளில் காலடி எடுத்து வைத்தார். ஆனால் அவரது வழக்கமான தரிசனம் கிடைக்காமல் அவரைத்தேடி வந்த ரசிகர்கள் பலரும் முகம் வாடித் திரும்பினர்.

துவக்க காலங்களில் தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவ்வளவு ஆர்வமாக இல்லாத ராஜா, ஜூன் 2 அன்று பூங்கொத்தும் பொன்னாடைகளுமாக தன்னைத் தேடி வரும் ரசிகர்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கலானார். குறிப்பாக ஏவிஎம்மிலிருந்து அவர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு மாறிவந்தபின்னர் இந்த கொண்டாட்டங்கள் திருவிழாக்களாக மாறின. காலை 7 மணிக்கு துவங்கி சில நாட்களில் இரவு வரை, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உதவி இயக்குநர்கள் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று திரையுலகம் போக அவரது ரசிகர்களும் வரிசையில் நின்று காத்திருந்து அவரது காலில் விழுந்து ஆசி வாங்கிச் சென்றனர்.

இந்நிகழ்வு ராஜா பிரசாத்திலிருந்து தனது இளையராஜா ஸ்டுடியோவுக்கு சென்றபிறகும் தொடர்ந்து. ஆனால் ராஜாவின் ஸ்டுடியோ பரப்பளவில் மிக்குறைந்தது என்பதால் அதிக அளவு ரசிகர்கள் அங்கே கூடி அவருக்கு வாழ்த்துச் சொல்ல வழியில்லை என்பது ஒரு பெருங்குறையாகவே இருந்தது.

அதிலும் இந்த ஆண்டு இன்னும் பெரும் சோகம். கடந்த சனி ஞாயிறுகளில் ராஜாவின் கச்சேரிகள் சென்னையில் இருந்ததால் மலேசியா, சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் இருந்து கச்சேரிக்கு வந்த ரசிகர்கள் இன்னும் ஒருநாளில் ராஜாவுக்கு பிறந்தநாள் இருக்கிறதே. அதை ஒட்டி அவரை நேரில் தரிசித்து ஆசி பெற்றுச் செல்லலாமே என்று பலரும் இங்கேயே முகாமிட்டிருக்கிறார்கள். அப்படி முகாமிட்டவர்கள் இன்று காலை ராஜாவின் ஸ்டுடியோவுக்குள் மொத்தமாக அதிரடி விசிட் கொடுக்க காலை 7 மணிக்கே அவரது ஸ்டுடியோ ஹவுஸ்ஃபுல். சுமார் 200 பேர் மட்டுமே கூட முடியும் என்கிற இடத்துக்கு ஒரே நேரத்தில் 1000 பேர் திரண்டால்?

ஒரு கட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்டும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. போதாக்குறைக்கு மீடியாக்கள் வேறு கேமராவோடு ஸ்டியோவை முற்றுகையிட, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது ‘இளங்கத்து வீசுதே சென்னை வெயில் ராஜா இசைபோல வீசுதே’ என்று பொறுமைகாத்த ரசிகர்கள் ‘மீடியா டவுன் டவுன்’ என்று கொந்தளிப்போடு கோஷம் போட்டும் பயனில்லை.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com