இறந்த மகளின் உடலைப் பார்க்க விரைந்த இளையராஜா - வைரலான வீடியோ!

இறந்த மகளின் உடலைப் பார்க்க விரைந்த இளையராஜா - வைரலான வீடியோ!

தன் மகள் பவதாரணியின் இறப்புச் செய்தியைக் கேட்டு, மருத்துவமனைக்கு விரைந்த இளையராஜா வீடியோ அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பின்னணிப் பாடகியும் இசையமைப்பாளருமான பவதாரிணி கடந்த 5 மாதங்களாக கல்லீரல் புற்றுநோய்க்கு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார்.

இளையராஜாவின் மகளான பவதாரிணி ராசய்யா படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகி, ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

நடிகை ரேவதி இயக்கிய மித்ர மை பிரண்ட் என்ற படம் மூலம் இசையமைப்பாளராகவும் பவதாரிணி அறிமுகமானார். இவர் தெலுங்குப் படங்களிலும் பாடியுள்ளார். குயில்போல அழகாகப் பாடும் பவதாரிணிக்கு, பாரதி திரைப்படத்தில் இடம்பெற்ற ’மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலைப் பாடியதற்காக தேசிய விருது கிடைத்தது.

பவதாரணி, சபரிராஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கும்மேல் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த பவதாரிணி நேற்று மாலை 5:20 மணிக்கு உயிரிழந்தார். இவருடைய உடல் இன்று மாலை சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது.

பவதாரிணியின் மறைவால் அதிர்ச்சியடைந்த திரைத் துறையினர் அவருடைய மறைவுக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் நாளையும் நாளைமறுநாளும் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக இலங்கைக்குச் சென்றிருந்த இளையராஜா, மகள் இறந்த செய்தியறிந்து, அவரின் உடலைப் பார்க்க மருத்துவமனைக்கு விரைந்து சென்றார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com