(இடமிருந்து வலம்) இந்திரா காந்தி, நர்கீஸ் தத்
(இடமிருந்து வலம்) இந்திரா காந்தி, நர்கீஸ் தத்

தேசிய திரைப்பட விருது: இந்திரா காந்தி, நர்கீஸ் தத் பெயர் நீக்கம்!

தேசிய திரைப்பட விருதில் இந்திரா காந்தி, நர்கீஸ் த்த பெயரில் வழங்கப்பட்டு வரும் விருதின் பெயர்கள் மாற்றப்பட்டு, அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இந்திய மொழிகளில் வெளியாகும் திரைப்படங்களுக்கு மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய திரைப்பட விருதுகள்' வழங்கப்படுகின்றன.

அந்த வகையில், 2022ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகளுக்கு தகுதியான திரைப்படங்களை சமர்ப்பிக்கும் பணிகள் கடந்த ஜனவரி 30ஆம் தேதி நிறைவடைந்தன.

இதனிடையே தேசிய விருது பட்டியலில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழங்கப்படும் விருதுகள், பரிசுத் தொகைகள் ஆகியவற்றை சீரமைக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி, '70-வது தேசிய திரைப்பட விருதுகள் 2022'இல் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் வழங்கப்பட்டு வரும் 'சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திரா காந்தி விருது' என்பது 'சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பரிசுத் தொகை முன்பு தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் பிரித்து வழங்கப்பட்ட நிலையில், இனி இயக்குநருக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், நடிகை நர்கீஸ் தத் பெயரில் வழங்கப்பட்டு வரும் 'தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது' என்பது 'தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாதாசாகேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.15 லட்சமாகவும், ஸ்வர்ன் கமல் விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 3 லட்சமாகவும், ரஜத் கமல் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com