நடிகர் நாசர்
நடிகர் நாசர்

செக்யூரிட்டி, சர்வர் வேலை வரை பார்த்தபின் தான் நடிகன் ஆனேன்! - நாசர்

நடிகர், இயக்குநர், தீவிர திரைப்பட ஆர்வலர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் நாசர். அவருடன் பேசுவது திரைப்படம் பற்றி பாடம் கற்பது போலத்தான். எழுத்தாளருமான நடிகருமான ஷாஜி சென் நாசருடன் அந்திமழைக்காக உரையாடியதில் இருந்து ஒரு சிறுபகுதி:

என்னுடைய தந்தை தன் குழந்தைகள் எல்லோருக்குமே பெருந்தலைவர்கள் பெயரைத்தான் வைத்தார். எனக்கு நாசர், என் தம்பிக்கு அயூப், மூன்றாவதாகப் பிறந்த மகளுக்கு இந்திரா மெஹதி ஹசன் பானு. எங்க உறவினர்கள் 'இந்திரா'ன்னு வைக்கலாமா என ஆட்சேபம் தெரிவித்தபோது தலைவர்கள் பெயர்தான் வைப்பேன் என்று உறுதியாகச் சொன்னார். இன்னொரு தம்பிக்கு ஜவஹர், அடுத்த தம்பிக்குப் ஜாஹிர் உசைன் என்றே பெயர் வைத்தார். சிறுவயதில் என்னை மேடையேற்றிப் பார்ப்பதில் என் தந்தைக்கு பெரும் மகிழ்ச்சி. எனக்கு விருப்பம் இல்லை என்றாலும் எனக்குக் கிடைக்கும் பிஸ்கட் போன்ற சின்னச்சின்ன சலுகைகளுக்காக அப்பா சொன்னபடி நாடகங்களில் நடித்தேன். அது பள்ளியில் படிக்கும்போது. பிறகு பியூசி பெயில் ஆயிட்டேன். வீட்டுப் பொருளாதாரம் மிக மோசமாக இருந்ததால் உடனடியாக ஒரு வேலை என்பது என் தேவையாக இருந்தது. என் நண்பன் ஸ்டீபன் விமானப்படையில் சேர்ந்திருந்தான். அங்கே கிடைக்கும் வசதிகள், சலுகைகள், உணவு எல்லாவற்றையும் அவன் அழகாக விவரிப்பான். மாதம் 270 ரூபாய் உதவித் தொகை! அவற்றுக்காக நானும் அங்கே சேர்ந்தேன். ஆனால் கண்டிப்பாக 15 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அப்போதுதான் எனக்குத் தெரியவந்தது நான் சினிமா நடிகன் மட்டும்தான் ஆகவேண்டும் என்று என் அப்பா கங்கணம் கட்டியிருந்தார் என்று. சென்னை, தாம்பரத்தில் தான் விமானப்படை பயிற்சி மையம் இருந்ததால் வாராவாரம் செங்கல்பட்டில் இருந்த என் வீட்டுக்குச் செல்வேன். அப்போது ‘இந்த வேலை உனக்கு வேண்டாம். நீ நடிகனாகியே தீரவேண்டும்‘ என்று அப்பா அதட்டி வற்புறுத்துவார். அதனால் விமானப்படைப் பயிற்சியை பாதியிலேயே விட்டு விட்டு வெளியே வந்தேன்.

அதுக்கப்பறம் பெரிய பயம். ஏனெனில் நான் பியூசி பெயில். கிடைத்த நல்ல வேலையையும் விட்டாகிவிட் டது. சினிமா என்பதோ என்போன்றவர்களுக்கு எட்டா மரக்கொம்பு. ஒருவேளை எட்டினாலும் அது ஒரு நிரந்தர வேலை கிடையாது. அந்த காலத்தில் தினத்தந்தியில் ஒரு சின்ன விளம்பரம் வந்தது. அதை அப்பா பார்த்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக ஒரு சினிமா நடிப்புப் பள்ளியை ஆரம்பிக்கிறார்கள். நான் போக விரும்பவில்லை. ஆனால் அப்பா என்னை கட்டாயப்படுத்தி தள்ளித்தான் விட்டார். அந்த பள்ளியில் நான் சேர்ந்தேன். அங்கே இருந்துதான் ரஜினிகாந்தும் சிரஞ்சீவியும் வந்தார்கள். ரஜினிகாந்த் முதல் பேட்ச். நானும் சிரஞ்சீவியும் கடைசி பேட்ச். அதோடு அந்த பயிற்சிப் பள்ளி மூடப்பட்டுவிட்டது.

நான் நடிகன் ஆவேனா என்கிற பெரிய கேள்விக்குறி எனக்கு இருந்தது. நான் மிக ஒல்லியாக இருப்பேன். நாயகனில் என் உருவத்தைப் பார்த்திருப்பீர்கள். ஒரு கோடு போட்டு அதன் மேல் ஒரு தலையை வரைந்தால் நாசர் என்று சொல்லிவிடலாம். என் மூக்கை இன்று சிலாகிக்கிறார்கள். அந்த காலத் தில் என் மூக்கு எனக்கு ஒரு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போது கிளிமூக்கா என்றுதான் என்னைக் கூப்பிடுவார்கள். அந்த வயதில் அதை நாம் மகிழ்வுடன் ஏற்றுக்கொள்ள முடியாது அல்லவா? எல்லா எதிர்மறை எண்ணங்களும் எனக்கு இருந்தன.

நாசர்
நாசர்

அந்த நடிப்புப் பயிற்சியில் ஓராண்டு கழிந்தது. படிப்பு முடிந்ததும் இனிமேல் என்ன பண்ணப்போகிறோம் என்ற அச்சம் சூழ்ந்தது. சென்னையில் தங்குவதா? அதற்கான செலவழிக்க அப்பாவால் முடியாது. வாய்ப்பு எப்ப வரும்னே தெரியாது. திடீரென தட்டிக் கூப்பிட்டுச் செல்வார்கள் எனச் சொல்வார்கள். காலையில் வரும் ஷட்டில் ரயிலில் ஏறி மாம்பலத்தில் இறங்கி எல்லா சினிமா கம்பனிக்கும் போய் பின்னால் முகவரி எழுதப்பட்ட என் புகைப்படங்களை அளிப்பேன். முகவரியைப் பார்த்துவிட்டு, ‘உன்னை செங்கல்பட்டில் இருந்து கூட்டிவரணுமா?' என்பார்கள். இல்லை சார் காலையிலே நானே வந்துவிடுவேன் என்பேன். ‘இங்கேயே தங்கினா நல்லது' என்பார்கள்.

இச்சமயம் நடந்த மிக முக்கியமான ஒன்றைப் பற்றி சொல்லவேண்டும். ஒருமுறை பூனே சினிமா இன்ஸ்டியூட் சார்பாக அடையார் திரைப்பட நிறுவனத்தில் ஒரு பத்து நாள் ஒர்க் ஷாப் நடந்தது. அங்கே போன பிறகுதான் சினிமான்னா என்னன்னு தெரிஞ்சது. முதல்நாள் எனக்கு எதுவுமே புரியல. முதலில் ஒரு படம் போட்டாங்க. An occurrence at owl creek bridge என்ற படம் திரையிட்டார்கள். கதையே இல்லாமல் ஒரு நிகழ்வு பற்றிய படம். இப்படியெல்லாம் படம் இருக்குமா என்று தோன்றியது. அப்புறம் ஒரு ஜப்பானிய படம் திரையிடல். இப்படி ஒரு நடிப்பா என்று அதில் நடித்தவரின் நடிப்பைப் பார்த்து பிரமித்தேன். சாப்பிடும்போது பக்கத்தில் இருந்தவரிடம் அந்த படத்தில் நடித்தவர் பெயர் என்ன என்று கேட்டேன். இதுகூடத் தெரியாதா என்பதுபோல் பார்த்தவர்,‘தஷிரோ மிஷினே' என்றார். இயக்குநர் பேரு? அகிரா குரசோவா. அதன் பின்னர் பதேர் பாஞ்சாலி பார்க்கிறேன். இங்மர் பெர்க்மன், படம் பார்க்கிறேன். அதுதான் சினிமாவா என்று பிரமித்துப் போனேன். சினிமா கல்வி என்றால் எல்லா நாளும் இப்படித்தான் இருக்கும் என்று அடையாறு பிலிம் இன்ஸ்டிடியூட்ல படிப்பதற்காகச் சேர்ந்தேன். ஆனால் அது அப்படி இல்லை என்பது வேறு விஷயம்.

அந்தப் படிப்பு முடிந்த நிலையில் எனக்கு முன்பாக திரைப்படக் கல்லூரியில் படித்த ராஜீவ் என்பவர் தாஜ் கொரமண்டலில் கேப்டனாக வேலை பார்த்தார். ஒரு முறை பார்க்கையில் என்னையும் தாஜுக்கு விண்ணப்பம் போட்டு வைக்குமாறு சொன்னார். ஹவுஸ்கீப்பிங் வேலைக்காக விண்ணப்பம் போட்டேன். தேர்வு செய்து வெயிட்டர் எனப் போட்டார்கள். என்னது சர்வர் வேலையா என நினைத்து ராஜீவ் கிட்டப் போனேன். ‘அடப்பாவி.. மேனேஜர் வேலையே கிடைத்தாலும் வேண்டாம். வெயிட்டர் வேலைதான் நல்லது. நிறைய டிப்ஸ் கிடைக்கும் தைரியமா இரு' என்றார். 79-இலிருந்து 82 வரை வேலை செய்தேன். முதல் ஆறுமாதம் 370 ரூபா சம்பளம். அந்த வேலை நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. பொருளாதாரக் கஷ்டங்கள் இல்லாமல் நன்றாக இருந்தேன்.

ஆனா ஒரு நாள் ‘எத்தனை நாளைக்கு இந்த வேலை செய்வே? யாராவது கேட்டால் என் மகன் பிளேட் கழுவுற வேலை பார்க்கிறான் என்று சொல்லமுடியுமா?' என்று அப்பா கேட்டார். வேலையை விட்டுவிட்டேன்.

தாஜ்ல வேலை கிடைக்கிறதுக்கு முன்னாடி வண்டலூர்ல ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டு வேலை பார்த் திருக்கிறேன். அங்கேதான் தொழில்சங்கம் பற்றிய விஷயங்களை எல்லாம் தெரிந்துகொண்டேன்.

இந்த பின்னணியில்தான் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு முழுமையாக திரைப்பட வாய்ப்புகளைத் தேட ஆரம்பிக்கிறேன். அப்போதுதான் கூத்துப் பட்டறை உருவாகிக் கொண்டு இருந்தது. நாட கங்களும் பரிச்சயம் ஆயின. கூத்துப்பட்டறையில் கொஞ்சமாக மாதசம்பளம் கொடுத்து நடிகர்களை தங்க வைப்பார்கள். அப்பாகிட்ட போய் சொல்றேன்.. அவர் சினிமாவில்தான் கவனம் செலுத்தவேண்டும் என்று உறுதியாகசொல்லிவிட்டார்.

இயக்குநர் சேனாபதி எடுத்த பனங்காடு என்ற படம்தான் நான் முக்கியமான பாத்திரத்தில் நடித்த முதல் படம் என்று சொல்லணும். அதற்கு முன்னாலே கே எஸ் சேதுமாதவன் இயக்கத்தில் ஒரு சின்ன படம் நடித்திருந்தேன். அந்த கட்டத்தில் இயக்குநர் அருண்மொழிதான் என்னை கே.பாலசந்தர் சார்கிட்ட கூப்பிட்டுப் போனார். அப்போ அவர் இருகோடு கள் படத்தை கன்னடத்தில் பண்ணிகிட்டு இருந்தார். என்னைப் பார்த்ததும் கேபி சார் 'என்னய்யா'ன்னு கேட்டார். ‘சார், வாய்ப்பு தேடி...' என்றேன். ‘அப்படியே வந்திடறதா? வாய்ப்பு கிடைச்சுடுமா?' என்றரார். ‘சார்.. நான் பிலிம் இன்ஸ்டிடூட்ல் படிச்சிருக்கேன்' என்று சொன்னேன். அதன் பிறகு அவரது குரலின் தொனி மாறியது. 'சேம்பர் நடத்திய பயிற்சியிலும் படிச்சுட்டு, இன்ஸ்டிட்யூட்லயும் படிச்சியா?' என்று கேட்டுக்கொண்டார். 'இதில் மிகவும் சின்ன ரோல்தான். அடுத்த படத்தில் பார்த்துக்கிடலாம்' என்று சொல்லி அனுப்பிவிட்டார்.

அடுத்த நான்குமாதத்தில் கவிதாலாயாவில் இருந்து எனக்கு கல்யாண அகதிகள் நடிக்க அழைப்பு வந்தது. அதில் இருந்துதான் எனக்கு மையநீரோட்ட சினிமா வாழ்க்கை தொடங்கியது. கல்யாண அகதிகள் சரியாகவே போகவில்லை. அதனால் திரும்பவும் எனக்கு அச்சம் ஏற்பட்டது. ஆனால் அப்படத்தில் நடித்தது மிகப்பெரிய பாடம். பாலசந்தரின் கவிதாலயாவில் இருக்கும் சிறந்த அணுகுமுறையை இன்றுவரை வேறு எந்த கம்பெனியிலயும் பார்க்கவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். அவர்களுக்கு நேரமும் உழைப்பும் மிக முக்கியமானது .

முதல் படம் ஓடலை என்றால் ராசி இல்லை என்று சொல்லிவிடுவார்கள். தொடர்ச்சியாக இது சொல்லப்படுவதை நானும் எதிர்கொண்டேன். அப்ப கவிதாலயாவில் அனந்து சார் இருந்தார். அவரிடம் நன்றாகப் பழகுவேன். கவிதாலயாவில் நடக்கும் படங்களில் அங்கங்கே டப்பிங் பேசுவேன். அப்புறம் வண்ணக்கனவுகள் என்று ஒரு படம் கொடுத்தார்கள். அப்பவே அது பாடல்களே இல்லாத படம். அப்புறம் யூகிசேது கவிதை பாட நேரமில்லை என்று ஒரு படம் எடுத்தார். பிறகு வேலைக்காரன் படம் வந்தது. அதில் எனக்கு நெகட்டிவ் கேரக்டர்.

எனக்கு ஹீரோ ஆகவேண்டுமென முன்னெடுப்பு இல்லை. ஆனா அதற்கான சூழல் உருவாகிக்கொண்டே வந்தது. வரவு எட்டணா செலவு பத்தணா, மகளிர் மட்டும் எல்லாம் பண்ணினேன். அப்பதான் அவதாரம் படத்தை பிடிவாதமாக எடுத்தேன். அது பொருளாதார சிக்கலில் தள்ளிவிட்டது. அவதாரம் எடுத்து முடித்து அதை விற்கமுடியாம அலைந்து இடையில் மூன்று ஆண்டுகள் இடைவெளி விழுந்துவிட்டது. அப்புறம் மீண்டும் வாய்ப்புகளைத் தேடி நடிக்க ஆரம்பித்து விட்டேன்.

logo
Andhimazhai
www.andhimazhai.com