கருப்பசாமியை வைத்து காமெடி பண்ணுகிறாரா ஆர்.ஜே.பாலாஜி?

கருப்பசாமியை வைத்து காமெடி பண்ணுகிறாரா ஆர்.ஜே.பாலாஜி?
Published on

கருப்பு எப்படி இருக்கு?

மூக்குத்தி அம்மன் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்த ஆர்.ஜே.பாலாஜியின் மூன்றாவது இயக்கம் கருப்பு. படத்தின் முக்கிய வில்லனாகவும் வரும் அவர் படத்தின் வில்லனா படத்துக்கே வில்லனா என்று பார்ப்போம்.

கேரளாவிலிருந்து தனது மகள் சிகிச்சைக்காக வரும் இந்திரன்ஸ் சென்னை பேசின் பிரிட்ஜ் ஏரியாவில் 60 பவுன் நகையைப் பறிகொடுக்கிறார். அதை முக்கால்வாசியை காவல்துறை மீட்டுக்கொடுக்க, மீட்கப்பட்ட நகையை நீதிமன்றத்தின் மூலம் பெற என்ன பாடுபடுகிறார் என்று போகிறது முதல் பாதி.

முன்னாள் மந்திரி வேல ராமமூர்த்தியிடம் தனது கற்பைப் பறிகொடுத்துவிட்டு நீதி கிடைக்காமல் அல்லாடுகிறார் ஷிவதா. இந்த இரு வழக்குகளையும் கையில் எடுத்துக்கொண்டு, சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி என்னவெல்லாம் வில்லத்தனம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அப்ப கதையில சூர்யா என்னதாங்க செய்கிறார். த்ரிஷாவுக்கு என்ன வேலை என்றெல்லாம் பதட்டப்படாதீர்கள்.

சாட்சாத் கருப்பசாமிதான் சூர்யா. போதையின் உச்சத்தில் இருக்கும் ஆர்.ஜே.பாலாஜியின் ககன லோகத்தில் தரிசனம் தரும் கருப்பு சூர்யா ‘இனி உன் கொட்டத்தை அடக்குறேன் பார்’ என்று கொக்கரித்து அதே கோர்ட்டுக்கு வக்கீலாக வலம் வருகிறார். அதே கோர்ட்டில் இன்னொரு வக்கீலாக வரும் த்ரிஷா சூர்யா மிஸ்டர் கருப்பு என்பதைத் தெரிந்துகொண்டு ஒரு பக்தை ஸ்தானத்தில் அவருக்கு விசிலடித்து மகிழ்கிறார்.

என்னங்க கதை என்னவோ மாதிரி இருக்கு என்று கன்ஃபியூஸ் ஆகிறீர்களா ? ஆகிக்கோங்க.

படம் துவங்கி 40 வது நிமிடத்தில்தான் எண்ட்ரியே கொடுக்கிறார் கருப்பு சூர்யா. அதன் பின்னரும் கூட தேவையற்று திணிக்கப்பட்ட இரு பாடல்கள், இரு சண்டைக்காட்சிகள் தவிர்த்துப் பார்த்தால் சூர்யாவுக்கு இது ஒரு கவுரவ வேடப் படம் தான். நடித்த வகையிலும் கொஞ்சம் கவுரவத்தைக் காப்பாற்றிக்கொள்ளவே செய்திருக்கிறார். த்ரிஷா படத்தில் இருக்கிறார் அவ்வளவுதான்.

முதல் பாதி கதையில் வரும் மலையாள குணச்சித்திர நடிகர் இந்திரன்ஸ் தனது அற்புதமான நடிப்பால் மனசை என்னவோ செய்கிறார்.

இதையே முழுநீளக்கதையாக எடுத்துக்கொண்டு நீதித்துறையை விமர்சித்திருந்தால் சூர்யாவுக்கு இன்னொரு ஜெய்பீம் வாய்த்திருக்கக்கூடும்.

பக்தர் பாலாஜி விடுவாரா ?

ஒளிப்பதிவு ஜி.கே.விஷ்ணு. கொடுக்கப்பட்ட கடமையை கண்ணும் கருத்துமாய் செய்திருக்கிறார். இசை சாய் அபயங்கர். பத்து அனிருத் அவதாரம். காதுகள் பத்திரம்.

சில காட்சிகளில் பாலாஜி கடவுளை கலாய்க்கிறாரோ என்கிற சந்தேகமும் வராமலில்லை. அந்த பார்டர் தாண்டி வந்துட்டா எனக்கு பவர் கிடையாது என்று செல்போனுக்கு சிக்னல் இல்லை என்பதுபோல் மிஸ்டர் கருப்பு பேசுவது ஒரு உதாரணம்.

மற்றபடி நீதிபதிகள் ,வக்கீல்கள் தங்களைத்தேடி வரும் மக்களை எவ்வளவு கீழ்த்தரமாய் நடத்துகிறார்கள் என்று நீதித்துறையை இவ்வளவு ராவாக விளாசியதற்கு பாலாஜிக்கு பாராட்டுகள்.

கருப்பு கொஞ்சம் சிறப்பு… கொஞ்சம் வெறுப்பு!!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com