வசந்தபாலன்
வசந்தபாலன்

இப்படியா செய்தி வெளியிடுவது...?- இயக்குநர் வேதனை!

“பத்திரிகைகள் பல கோணங்களில் யோசித்து செய்தியை வெளியிட வேண்டும்” என இயக்குநர் வசந்தபாலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழின் முன்னணி நாளேடு ஒன்றில், ‘சென்னை திருவொற்றியூரில் கொடூர சம்பவம்: தாய் - மகன் கழுத்தை அறித்து படுகொலை - கல்லூரி மாணவன் வெறிச்செயல்’ என்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தது. 

இந்த செய்திக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வசந்த பாலன், இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில்:

“இது போன்ற செய்திகளுக்கு பத்திரிகைகள் முன்னுரிமைக் கொடுத்து தலைப்புச் செய்தியாகப் போடுவது மாபெரும் தவறு. இதற்கு என் கண்டனங்கள்.பெற்றோர்கள் திருந்தட்டும் என்று எண்ணுகிறீர்கள் தானே, அதன் சதவீதம் என்ன ? நடுத்தர வர்க்கத்திற்கும், அடித்தட்டு வர்க்கத்திற்கும் படிப்பை விட பெரிய எதிர்காலம் வேறு என்ன உள்ளது? இந்த செய்தி தமிழகத்தில் இன்று எத்தனை பெற்றோர்களுக்கு பெரும் மன அழுத்தங்களை ஏற்படுத்தும் என்று தெரியுமா? படி படின்னு சொல்லித் தானே நம் தலைமுறை படித்து முன்னேறி முதல் தலைமுறை பட்டதாரியாக மாறினோம்.

குழந்தைகளின் மனநிலையைக் கருத்தில் கொண்டு நடக்கும் பெற்றோர்களாக மாற வேண்டிய கட்டாயம் உள்ளது உண்மைதான். ஆனால், பள்ளி இறுதியாண்டு படிப்பும், கல்லூரி படிப்பும் எத்தனை பெரிய பொருளாதாரச்  சிக்கலுக்குள், அரசியலுக்குள் சென்று விட்டது என்று தெரியுமா உங்களுக்கு?

நீட் பயிற்சி மையங்கள், ஜே.இ.இ.- நெட் பயிற்சி மையங்கள் பல லட்சங்களை டியூசன் தொகையாக கோருகின்றன. நீட் முறைகேடு வேறு சேர்ந்து கொண்டது. இன்னும் இது பற்றி பேச பல செய்திகள் உள்ளன.

பெற்றோர்களின் மனநிலையோடு மாணவர்களின் எதிர்காலத்தோடு நாளைய தலைமுறையின் ஆரோக்கியத்தோடு அனைவரும் சடுகுடு விளையாடுகிறார்கள். சமூகத்தில் பொறுப்பில் உள்ள பத்திரிகைகள் இது போன்ற செய்திகளை வெளியிடும் முன் பல கோணங்களில் யோசிக்க வேண்டும்.” என்று வசந்தபாலன் அக்கறையுடன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com