ஜெய் பீம் மணிகண்டனின் அடுத்த பட அப்டேட்!
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஜெய் பீம் மணிகண்டன் நடக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி கிளாப் அடித்து தொடங்கி வைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் இயக்கிய 'குட் நைட்' படத்தில் ஜெய் பீம் மணிகண்டன் கதாநாயகனாக நடித்திருந்தார். மேத்தி ரகுநாத் கதாநாயகியாகவும் ரமேஷ் திலக், பகவதி பெருமாள் என்ற பக்ஸ், பாலாஜி சக்திவேல் மற்றும் ரேச்சல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.
குறட்டைப் பிரச்னையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பதிவு செய்தது.
அப்படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்த படம் தயாராகிறது.
அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்தப் புதிய படத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன்லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
சமகால காதலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. சென்னை, கோவா ஆகிய பகுதிகளில் படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர் படக்குழு.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கிய நிலையில், முதல்நாள் படப்பிடிப்பை கிளாப் அடித்துத் தொடங்கிவைத்தார் விஜய் சேதுபதி.