ஜேசன் சஞ்சயின் பேட்டிகளுக்குப் பின்னால் இருப்பவர் யார்?

ஜேசன் சஞ்சயின் பேட்டிகளுக்குப் பின்னால் இருப்பவர் யார்?
Published on

முன்னாள் உச்ச நடிகர், இந்நாள் முதல்வர் விஜய்யின் வாரிசு ஜேசன் சஞ்சய் தனது பட புரமோஷனுக்காக அளித்துவரும் பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில் அதன் பின்னூட்டங்களில் ‘அடடே எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்’ என்கிற சிலாகிப்புகள் குவிகின்றன கியூகட்டி நிற்கின்றன.

இந்தப் பேட்டிகளுக்கு சஞ்சயைத் தயார் படுத்துகிறவர், அவரது அப்பாவுக்கு நெருக்கமான அவரேதான்.

சஞ்சய் இயக்கி முடித்துள்ள ‘சிக்மா’ படம் ஜூலை31 அன்று ரிலீஸாகியிருக்கவேண்டியது. விஜய்யின் ‘ஜனநாயகன்’ 23 அன்று ரிலீஸானதால் பல படங்கள் போன்று சஞ்சயின் படமும் அடுத்த தேதி அறிவிப்பின்றி தள்ளிப்போடப்பட்டது. அப்படி தள்ளிப்போன படங்களில் சில இம்மாதம் ரிலீஸாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சிக்மா ரிலீஸ் தேதி இன்றுவரை அறிவிக்கப்படவில்லை. அநேகமாக இப்படம் இன்னும் இரு வாரங்களில் ரிலீஸ் ஆகக்கூடும் என்கிறார்கள்.

இந்நிலையில் இப்பட புரமோஷனுக்காக ஒன்றிரண்டு சேனல்களுக்கு அவர் பேட்டியளித்திருக்கிறார். அப்பேட்டிகளில் தனது தந்தை குறித்து பேச அவர் எவ்வித தயக்கமும் காட்டவில்லை. குறிப்பாக அவர் தமிழகத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் தன் குடும்பத்தினருக்கு கூடுதல் பொறுப்பு இருப்பதாகவும் தாங்கள் அவரது பதவியை பயன்படுத்தாமல் சொந்த முயற்சியில் முன்னேறவேண்டும் என்று அதிகபட்ச முதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது வாரிசு அரசியல் என்கிற பேச்சுக்கே எங்கள் குடும்பத்தில் இடமில்லை என்பது அவரது பேட்டியில் வெளிப்படுவதை பலரும் மேற்கோள் காட்டுகிறார்கள்.

பார்க்க அப்பாவி போல காணப்பட்ட சஞ்சயா இவ்வளவு விவரமாகப் பேசுகிறார் என்று பலருக்கும் ஏற்பட்டிருக்கும் ஆச்சர்யத்துக்குப் பின்னால் விஜய்யை வைத்துக் கடைசிப் படம் இயக்கிய ஹெச்.வினோத் இருக்கிறார் என்கிறார்கள்.

விஜய்யின் வேண்டுகோளின்படி மிக சமீபத்தில் சஞ்சயை சந்தித்த வினோத் தான் அவர் பேட்டிகளில் என்னவெல்லாம் பேசவேண்டும், எதைத் தவிர்க்கவேண்டும் என்று வழிநடுத்துவதாகவும் அப்பாவுக்கும் மகனுக்குமான நல்லிணக்கத் தூதுவராக செயல்பட்டுவருவதாகவும் நம்பகமான தகவல்கள்.

ஒருவேளை சிக்மா படத்தில் இயக்குநராக சஞ்சய் தோற்றால் அவரை நடிகராக ஜெயிக்கவைக்கும் பொறுப்பும் வினோத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com