சீமான்
சீமான்

'ஜோ' படம்: நெஞ்சை நெகிழச் செய்யும் காதல் காவியம்- சீமான்

ஜோ திரைப்படம் பார்த்த நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், “நெஞ்சை நெகிழச்செய்யும் காவியம்” என்று படத்தைப் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"அருளானந்தின் விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத் தயாரிப்பில், இயக்குநர் ஹரிகரன் ராமின் இயக்கத்தில், ரியோ ராஜ் நடிப்பில் வெளிவரவிருக்கும் 'ஜோ' திரைப்படத்தைச் சிறப்பு காட்சியில் கண்டுகளித்தேன்.

நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழில் மீண்டும் வெளிவரவிருக்கும் உணர்வுப்பூர்வமான காதல் காவியத்தைக் கண்டு மிகுந்த நெகிழ்ச்சியடைந்தேன். அண்மைக்காலத்தில் தமிழ்த்திரைத்துறை தவறவிட்ட ஒன்றினை மீண்டும் திரும்பப்பெற்றது போன்ற உணர்வை இத்திரைப்படம் மனதில் ஏற்படுத்திவிட்டது.

காதலுக்காக யாரும் சாகக்கூடாதுதான்; அதே நேரத்தில் காதலிக்காமலும் யாரும் சாகக்கூடாது என்பதை இத்திரைப்படம் நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது. கடந்தகால காதல் நினைவுகளை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இப்படம் அசைபோடச் செய்யும். அந்த அளவிற்கு ஆகச்சிறந்த காதல் காவியமாக ஜோ திரைப்படம் உருவாகியுள்ளது மிகுந்த மனநிறைவைத் தருகிறது. படத்தின் இறுதிக்காட்சி மனதை உருக வைத்து, நெகிழச்செய்கிறது.

நடிகர்களின் மிகைப்படுத்தப்படாத எதார்த்தமான நடிப்பு, அழுத்தமான திரைக்கதை, அழகான உரையாடல், இயல்பான கதை மாந்தர்கள், இயற்கையான காட்சியமைப்பு, உருக்கமான பாடல்கள், பின்னணி இசை, கலை இயக்கம் என படத்தில் அனைத்துமே செய் நேர்த்தியுடன் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ஹரிகரன் ராம் அவர்கள் இப்படி ஒரு படத்தை எழுதி இயக்க வேண்டும் என்று எண்ணியதற்கே எனது மனமார்ந்த பாராட்டுதல்கள். எங்களது பரமக்குடியிலிருந்து இன்னொரு சிறந்த இயக்குநர் உருவாகி வந்திருப்பதில் மகிழ்கிறேன்.

தம்பி ரியோவுடன் இணைந்து அண்ணன் சார்லி, நடிகைகள் மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, தம்பி ஏகன், தம்பி அன்பு உள்ளிட்டோர் படத்திற்கு தங்களின் இயல்பான நடிப்பாற்றலால் ஏற்ற பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். இதற்கு முன் படங்களில் நடித்திருந்தாலும் தம்பி ரியோவிற்கு இப்படம் வெற்றியின் தொடக்கப்படமாக அமையும் என்பது உறுதி. புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு நாயகி மாளவிகா மனோஜ் மிகச்சிறப்பான இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைக் கதையாக அண்ணன் சார்லி வரும் பகுதி உறவின் வலிமையை உணர்த்தி அவரின் உருக்கமான நடிப்பால் நெஞ்சை நெகிழச்செய்கிறது.

நாயகனின் நண்பனாக வரும் தம்பி ஏகனின் முதிர்ச்சியான நடிப்பை மிகவும் ரசித்தேன். தம்பி சித்துகுமாரின் இசை மனதை படம் முழுக்க மெல்ல வருடியது, பாடல்கள் மட்டுமல்லாது பின்னணி இசையிலும் காட்சியோடு இணைந்து அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். மிக நேர்த்தியான வண்ணமயமான தம்பி விக்னேஷ் அவர்களின் ஒளிப்பதிவும், தங்குதடையில்லாத தம்பி வருண் அவர்களின் சிறந்த படத்தொகுப்பும் நம்மை படத்தோடு முழுவதுமாக ஒன்றச்செய்கிறது.

இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர் என்று பெரும்பாலும் புதுமுக கலைஞர்கள் பங்களிப்பில் உருவானபோதும் அதற்கான சுவடு தெரியாமல் ஆகச்சிறந்த கலைப்படைப்பாக இத்திரைப்படம் ஒளிர்கிறது. இளைஞர்களை நம்பி, குடும்பத்தோடு காணும்படியான இப்படியொரு காதல் காவியத்தைத் தயாரிக்க முன்வந்த என் அன்புத்தம்பி அருளானந்து அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

'ஜோ' படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், இணை-துணை இயக்குநர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த அன்பும், வாழ்த்துகளும்!

காலத்தால் அழியாத காவியப் படைப்பாகவே உருவாகி, வருகின்ற நவம்பர் 24 அன்று வெளியாகவிருக்கும் 'ஜோ' திரைப்படத்தை உலகெங்கும் பரவி வாழும் தாய்த்தமிழ் உறவுகள் குடும்பத்தோடு திரையரங்கிற்குச் சென்று, கண்டு களித்து, படத்தினை மிகப்பெரிய வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com