ஷங்கருக்கு வாட்ச் பரிசளிக்கும் கமல்ஹாசன்
ஷங்கருக்கு வாட்ச் பரிசளிக்கும் கமல்ஹாசன்

“திமிறி எழுங்கள், பல புதிய உயரங்கள் தேடி” – ஷங்கருக்கு கமல் வாழ்த்து!

இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், அவருக்கு விலை உயர்ந்த வாட்ச் ஒன்றை பரிசளித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், பல்வேறு காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்தது.

இதையடுத்து தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடந்த நிலையில் அங்கு கமலின் காட்சிகளை படமாக்கி முடித்தனர். தற்போது, படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. அண்மையில் எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "இந்தியன் 2 படத்தின் பிரதான காட்சிகளை இன்று பார்த்தேன். என் உளமார்ந்த வாழ்த்துகள் ஷங்கர். இதுவே உங்கள் உச்சமாக இருக்கக் கூடாது என்பதும் என் அவா. காரணம், இதுதான் உங்கள் கலை வாழ்வின் மிக உயரமான நிலை. இதையே உச்சமாகக் கொள்ளாமல் திமிறி எழுங்கள். பல புதிய உயரங்கள் தேடி" என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com