
தனது அயராத அரசியல் பணிகளுக்கு சற்றே ஓய்வுகொடுத்துவிட்டு மீண்டும் சினிமா பக்கம் திரும்பியிருக்கிறார் கமல். தனது ராஜ்கமல் நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ பட பூஜையில் ஆசுவாசமாகக் கலந்துகொண்ட அவர் பட புரமோஷனின் துவக்கமாக புகைப்படங்களுக்கும், காணொளிகளுக்கும் கொடுத்த போஸ்கள் கணிசமாக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சி.கா நடிக்கும் ‘சேயோன்’ படப்பிடிப்பு சில மாதங்களாக தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில் நேற்று புதனன்று மதுரையில் துவங்கியது. இப்படப்பிடிப்பின் துவக்கவிழாவில் கலந்துகொண்ட கமல் சில மணி நேரங்கள் வரை படப்பிடிப்புக் குழுவினருடன் தாராளமாக செல்வழித்தார்.
இந்த துவக்கவிழாவில் கலந்துகொண்டவர்களில் பலரது ஆச்சர்ய கவனத்தைக் கவர்ந்தவர் மதுரை அன்பு. திரைத்துறையினருக்கு ஃபைனான்ஸ் செய்து வட்டி வசூலிக்கும் அன்புவை ரெட்ஜெயண்ட் நிறுவனத்துடன் கூட்டணி வைத்தபிறகு கமல் கழட்டிவிட்டுவிட்டார். அதனால் நேற்றைய இவரது வருகை பல சந்தேகங்களைக் கிளப்பியிருக்கிறது.
பெரும் தயக்கத்துக்குப்பின் முதல்வர் விஜயை சந்தித்த கமல், இனி திமுகவுடன் உறவைத் தொடர்வதில் தனக்கு எவ்வித நன்மையும் இல்லை என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் என்கிறார்கள்.
அதனால் உதயநிதியின் ரெட்ஜெயண்டுடனான உறவை நிரந்தரமாக துண்டித்துவிட்டு மதுரை அன்புவிடம் வட்டிக்கு வாங்கியே படம் தயாரிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறார். அதனால்தான் சேயோன் பூஜைக்கு உதயநிதியை தவிர்த்துவிட்டு மதுரை அன்புக்கு அழைப்பு என்கிறார்கள்.