கங்குவா: டிரெய்லர் மாஸ்… சூர்யா டயலாக் தமாஷ்!
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ள ‘கங்குவா’ படத்தின் டிரெய்லர் வெளியாகி சினிமா ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
பாட்டி கதை சொல்வது போலத் தொடங்கும் டிரெய்லரில் பற்றி எரியும் தீக்கு நடுவே வித்தியாசமாக தோன்றுகிறார் சூர்யா. பச்சை பசேல் காட்சிகள் போர்க்களமாய் மாறுகிறது. ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமாக கண்முன் விரிய ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் அதிகம் இடம்பெற்றுள்ளன. தேவிஸ்ரீ பிரசாத் இசையும் கவனம் ஈர்க்கின்றன.
’விருந்தறுந்த வாரீரோ?’ என வில்லன் பேசும் வசனம் காத்திரமாக இருக்க, ‘உன் ரத்தமும் என் ரத்தமும் வெவ்வேறா’ என சூர்யா பேசும் வசனம் செயற்கையாக உள்ளது. ஹாலிவுட் போர்ப் படங்களைப் பார்த்துப் பழக்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு 'கங்குவா' வித்தியாசமான திரை அனுபவத்தைக் கொடுக்குமா என்று பார்ப்போம்.