லட்டு குறித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட கார்த்தி... பாராட்டிய பவன் கல்யாண்!
லட்டு விவகாரத்தில் மன்னிப்புக்கோரிய நடிகர் கார்த்திக்கு ‘இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன், அதனை மிக கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்” என ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அட்வைஸ் கூறியுள்ளார்.
பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்துள்ள ‘மெய்யழகன்’ திரைப்படம் வரும் 27ஆ ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் நேற்று முன்தினம் ஹைதராபாத் சென்றிருந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா?”என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ளதாக ஆந்திர துணை முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண் ஆதங்கம் தெரிவித்தார். இதற்கு வருத்தம் தெரிவித்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் தள பக்கத்தில் “அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைப்பிடிப்பேன்” என பதிவிட்டிருந்தார்.
கார்த்தி மன்னிப்புகோரியதற்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்,”திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து உங்கள் விரைவான பதிலையும், எங்கள் கலாச்சாரத்தின் மீது நாங்கள் காட்டிய மரியாதையையும் நான் மனதார பாராட்டுகிறேன். திருப்பதி லட்டுகளின் புனிதத்தன்மை பல லட்சம் பக்தர்களின் உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. எனவே இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன், அதனை மிக கவனமாகக் கையாள வேண்டியது அவசியம்.
அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட நடிகராக நமது சினிமாவை வளப்படுத்திய உங்களுக்கு எனது பாராட்டுகள். சூர்யா, ஜோதிகா மற்றும் ஒட்டுமொத்த மெய்யழகன் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.” என தனது எக்ஸ் இந்த பதிவின் கமெண்ட் பகுதியில் சூர்யா, கார்த்தி இருவரும் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.