கொக் கொக் கொக்… கொட்டுக்காளி!
கூழாங்கல் இயக்குநர் பி.எஸ். இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள ‘கொட்டுக்காளி’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்ற படம் ‘கூழாங்கல்’. 94-வது ஆஸ்கர் விருதுக்கும் இந்தியா சார்பில் அதிகாரபூர்வமாக பரிந்துரைக்கப்பட்டது. இந்தப் படத்தின் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் அடுத்ததாக இயக்கியுள்ள படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
சூரி நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில், மலையாள நடிகை அன்னாபென் நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படம் பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இப்படம் வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மூட நம்பிக்கை, ஆணாதிக்கம் மற்றும் சிக்கலான மனித உணர்வுகள் குறித்து இப்படம் பேசும் என இயக்குநர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கல்லில் கட்டிப்போட்டிருக்கும் சேவலை அன்னா பென் உற்றுப் பார்க்கும் காட்சியுடன் படம் டிரெய்லர் தொடங்குகிறது. சூரி, அன்னா பென் என ட்ரெய்லரில் தோன்றும் அத்தனை கதாபாத்திரங்களும் ஏதோ ஒரு தவிப்புடனும் பதட்டத்துடனுமே உள்ளனர். ஒரே ஒரு காட்சியில் மட்டுமே வசனம் இடம்பெறுகிறது. மலை சார்ந்த காட்சியும் அதன் பின்னணி இசையில் சேவல் கூவும் சத்தமும் ஒருவித படபடப்பைக் கொண்டு வருகிறது. வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள கொட்டுக்காளி டிரெய்லர் கவனத்தை ஈர்க்கிறது.