லியோ திரைப்படம்: விஜய் - த்ரிஷா
லியோ திரைப்படம்: விஜய் - த்ரிஷா

லியோ: திரைவிமர்சனம்!

தன் கொடூரமான முந்தைய கால வாழ்க்கையை மூடி மறைக்க நினைக்கும் ஒருவனின் கதையே ‘லியோ’ படத்தின் ஒன்லைன்.

விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விஜய்யுடன் இணையும் இரண்டாவது படம், நீண்ட காலத்துக்குப் பிறகு விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா இணைந்திருக்கும் திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே பல பஞ்சாயத்துகளில் சிக்கி வெளிவந்துள்ள படம்… இப்படிப்பட்ட லியோ அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா என்று பார்ப்போம்.

காஷ்மீரில் காஃபி ஷாப் ஒன்று நடத்தி வரும் பார்த்திபன் (விஜய்) தனது மனைவி (திரிஷா), குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒருநாள், தன் கடையில் வந்து ரகளை பண்ணும் வழிப்பறி திருடர்களை பார்த்திபன் சுட்டுக்கொன்றுவிடுகிறார். அவர் தற்காப்பிற்காகத்தான் சுட்டார் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்க, ஒரேநாளில் இந்தியா முழுவதும் அறியப்படுகிறார். இது அவருக்கு புதிய பிரச்னை ஒன்றைக் கொண்டு வருகிறது. அந்தப் புதுப் பிரச்னை தான் படத்தின் மீதிக்கதை.

‘ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ்’ என்ற ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் லியோ. அந்த படத்தின் சாயல் இல்லாமல், விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் மாதிரியான திரைக்கதை எழுதியுள்ளார் லோகேஷ் கனகராஜ். ஆனால், விஜய் படத்தில் வழக்கமாக இருக்கும் நகைச்சுவையோ, துள்ளலோ இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.

படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் எதுவும் மனதில் நிற்கவில்லை. பார்த்திபன் விஜயைவிட, லியோ விஜய் பாத்திரம்தான் மிரட்டலாக உள்ளது. சத்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள த்ரிஷா குடும்ப பெண்ணாக வந்து செல்கிறார்.

ஆண்டனி தாஸாக சஞ்சய் தத்தும் ஹரால்டு தாஸ்ஸாக அர்ஜுனும் கொடூரமான வில்லன்களாக வந்து மிரட்டுகின்றனர். மடோனா செபஸ்டீன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், அனுராக் காஷ்யப், கௌதம்மேனன், லால் போன்ற பெரிய நடிகர்கள் உப்புசப்பில்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

முதல் பத்து நிமிடத்தைத் தவறவிடாதீர்கள் என்று லோகேஷ் கூறியிருந்தார். ஆனால் படத்தைப் பார்க்கையில் “இதுக்கா இந்த பில்டப்” என தோன்றியது உண்மை.

ஓநாயை மடக்கிப் பிடிக்கும் காட்சி, கார் விபத்து போன்ற கிராபிக்ஸ் காட்சிகள் பரவாயில்லை.

படத்தில் வில்லன்களின் உலகை விரிவாகக் காட்டியிருந்தாலும், அது கவரும்படியில்லை. கிளைமாக்ஸ் காட்சி சாதாரணமாக முடிந்துவிடுவது ஏமாற்றமே.

அனிருத் வழக்கம்போல், மாஸ் படத்துக்கு தேவையான பரபர பின்னணி இசைபோட்டிருக்கிறார். “நா ரெடிதான் வரவா” இந்த ஒரு பாடலைத் தவிர மற்ற பாடல் எதுவும் மனதில் நிற்கவில்லை.

மனோஜ் பரமஹம்சாவின் காமிரா ஓரளவு படத்துக்கு பலம் சேர்கிறது. சாதாரண காட்சிகளையும் அவரின் காமிரா கோணம் விறுவிறுப்பைக் கூட்டிவிடுகிறது. பிலோமின் ராஜ் படத்தொகுப்பு ஓரளவு ஓகே. அன்பறிவ் மாஸ்டரின் சண்டைக் காட்சிகளில் அதிகப்படியான ரத்தம் தெறிக்கிறது.

படத்தை காப்பற்றியிருக்க வேண்டிய செண்டிமெண்ட், ஆக்‌ஷன் காட்சிகள் அழுத்தமற்று இருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும்.

தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் விஜய்யின் நோக்கம். ஆனால், இறுதிக் காட்சியில், கமல்ஹாசன் பின்னணி குரலில் வரும் வசனம் அடுத்த பாகத்துக்கு அடிபோடுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com