திரிஷா
திரிஷா

மன்சூர் அலிகான் ஆபாசப் பேச்சு: கண்டித்த திரிஷா…ஆதரவு தெரிவித்த லோகேஷ்!

நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் ஆபாசமாகப் பேசியது சர்ச்சையான நிலையில், மன்சூருக்கு திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் மன்சூர் அலிகான் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இதற்கிடையே, சமீபத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய மன்சூர் அலிகான் திரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்குக் கிடைப்பதில்லை என்றும் லியோ படத்தில் திரிஷாவை வன்புணர்ச்சி செய்யும் காட்சி அமையவில்லை என்றும் அவர் கூறியிருந்தார். அவர் கூறிய கருத்துகள் ஆபாசமாக இருந்ததால் பலரும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த வீடியோ சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவியது.

இந்த நிலையில், மன்சூர் அலிகான் பேச்சுக்கு திரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் திரிஷா கூறியிருப்பது:

“மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோ ஒன்றை நான் பார்த்தேன். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பாலியல் ரீதியாகவும், அவமரியாதையாகவும், வெறுக்கத்தக்க வகையிலும், பாலின வெறுப்பை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளார். அவர் என்னுடன் திரையில் இணைந்து நடிக்க விரும்பலாம். ஆனால், இதுவரை இது போன்றதொரு நபருடன் நான் நடிக்கவில்லை என்பது ஆறுதல்.

இனி வரும் நாட்களிலும் எனது திரை வாழ்க்கையில் நான் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்களால்தான் மனிதக் குலத்துக்கே அவப்பெயர்.” என்று த்ரிஷா கடுமையாக சாடியுள்ளார்.

இந்த விவகாரம் மிகப் பெரிய சர்ச்சையான நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜும் இந்த விவகாரத்தில் ட்வீட் செய்துள்ளார். "மன்சூர் அலி கான் கூறிய கருத்துக்கள் மோசமானதாகவும் கோபமடைய வைப்பதாகவும் இருக்கிறது. பெண்கள் மற்றும் சக கலைஞர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும். இதில் சமரசம் செய்துகொள்ளவே முடியாது. அவரது இந்த பேச்சை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com