மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்: திரைவிமர்சனம்!

மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்: திரைவிமர்சனம்!

வரலட்சுமி, மகத், சந்தோஷ் பிரதாப் ஆகியோரது நடிப்பில், தயாள் பத்மநாபன் இயக்கத்தில் ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்.

அனாதை விடுதியில் வளரும் வரலட்சுமி, மகத், சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் ஆகியோர் உற்ற நண்பர்களாக உள்ளனர். திடீரென ஒருநாள், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காணாமல் போகிறார் மகத். பின்னர் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அவரின் கொலைக்கு காரணமானவர்களை வரலட்சுமியும் அவரது நண்பர்களும் தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள். இறுதியில் இவர்களின் திட்டம் நிறைவேறியதா? இல்லையா? என்பது தான் மீதிக் கதை.

‘கொன்றால் பாவம்’ படத்தை இயக்கிய தயாள் பத்மநாபனின் இரண்டாவது தமிழ் படம் இது. இயக்குநர், எளிமையான ஒரு த்ரில்லர் கதையை எடுத்துக் கொண்டு, ஆங்காங்கே சில திருப்பங்களை வைத்து, திரைக்கதையை ரசிக்கும் படி உருவாக்கியிருக்கிறார்.

ஒரே ஒரு போலீஸ் ஸ்டேஷனிலேயே முக்கால்வாசிப் படமும் நகர்கிறது. முதல் பாதி முழுக்க வரலட்சுமியே திரை முழுவதும் இருக்கிறார். ஒரு துடுக்கான காவல் அதிகாரிக்கு உரிய தோற்றம் அவரிடம் இல்லை. இரண்டாம் பாதியில் உதவி காவல் ஆணையராக ஆரவ் வந்த பிறகு தான் படம் சூடுபிடிக்கிறது. அவரின் புலனாய்வும், மிரட்டும் பார்வையும் படத்திற்கு பெரும் பலம். அவரும் மகத்தும் இறுதிக் காட்சியில் சந்தித்துக் கொள்ளும் காட்சி கண்களைக் கலங்க செய்கிறது. மகத் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்து விடுகிறார். சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், யாசர் கொடுத்த கதாபாத்திரத்தில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். அமித் பார்கவ் இன்ஸ்பெக்டராக தோற்றத்தில் கம்பீரம் காட்டினாலும் நடிப்பில் அது வரவில்லை. சுப்பிரமணிய சிவாவுக்கு தாதாவுக்கு ஏற்ற பில்டப் இல்லை. எல்லா காட்சிகளிலும் சாதாரணமாக பேசி விட்டு கடந்து போகிறார்.

இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என தனித் தனியே குறிப்பிடும் அளவிற்கு டெக்னிக்கலான படமல்ல. ஒரு டிராமா போலத்தான் படம் முழுவதும் நகர்கிறது.

படத்தில் நிறைய லாஜிக் மிஸ்ஸிங். ஆரவ்வுக்கு வரலட்சுமி மீது சந்தேகம் வராமல் இருப்பது, போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி கேமரா இல்லாமல் இருப்பது, காவல் ஆணையரே தலையிடும் அளவிற்கு உள்ள வழக்கை தனிநபர் பகையாக முடித்து வைப்பது போன்றவற்றை சொல்லலாம்.

ஒரு க்ரைம் த்ரில்லர் கதையில் அண்ணன் – தம்பி பாசத்தைப் புதுமையான முறையில் சொல்லியதால் “மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்”பார்த்து ரசிக்கலாம்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com