1934 இல் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய எழுத்தாளர் லூகி பிராண்டெல்லோ (Luigi Prandello), 1921 இல் எழுதி-நிகழ்த்தப்பட்டு, 1922 இல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட மிக முக்கியமான நாடகம், ’நாடக ஆசிரியரைத் தேடி ஆறு கதாபாத்திரங்கள்’ (Six Characters in search of an Author) என்பது! முதல் உலகப் போருக்குப் பின்னான காலத்தில், யதார்த்தம் (Reality) / மாயவாதம் (Illusion) இரண்டையும் மோதவிட்டு, வாழ்வின் அபத்தத்தை (Absurdity), ’நாடகத்துள் நாடகம்’ (Meta-Thea tre) எனும் வடிவத்தில் படைத்திருந்தார். அதைத் தொடர்ந்து, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான காலத்தில், வாழ்வின் மீதான நம்பிக்கை இழந்துபோக, வாழ்க்கையை அபத்தமாகப் பார்த்த பல நாடகப் படைப்புகள் வெளிவந்திருந்தன. அந்தவகையில், 50-60 களில் கோலோச்சிய அபத்தவி யல் நாடக ஆசிரியர்களான சாமுவேல் பெக்கெட், யூஜின் அயனெஸ்கோ, ஹெரால்ட் பிண்டர், ஆர் தர் அடமோவ், ழான் பால் சார்த்தர், எட்வர்ட் ஆல்பி என்பதாய்ப் பெருமளவில் வெளித்தெரிய வந்தனர். 1961 இல் இந்தவகை நாடகங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்ட மார்டின் எஸ்வின் அந் நூலுக்குக் கொடுத்திருந்த தலைப்பு, ‘அபத்த நாடகம்’ (Absurd Theatre) என்பது! வாழ்க்கை அர்த்த மற்றமாயிருக்கிறது- வாழ்வதே அபத்தமாயிருக்கிறது என்பதை, இவ்வகை நாடகங்கள் விளக்கியிருந்தன. யதார்த்தம்/தோற்ற மயக்கம் இரண்டிற்கும் இடையிலான ஒரு முரண்மோதுகையை (Conflict) உருவாக்கி, சமூகத்தின் மேலான/அதிகாரத்தின் மீதான நம்பிக்கை இழப்பை, ஒழுங்கற்ற ஒரு நாடக அமைப்பில், அர்த்தமற்ற ஒரு தொனியில், அபத்தமாய் அவை வெளிப்படுத்தி இருந்தன. சாமுவேல் பெக்கட்டின் ’கோதேவிற்காகக் காத்திருத்தல்’ (Waiting for Godot), அயனெஸ்கோவின் ‘காண்டா மிருகம்’ (Rhenoceros), எட்வர்ட் ஆல்பியின் ‘மிருகக்காட்சி சாலை’ (Zoo Story), பிராண்டெல்லோ வின் ’Six Characters in search of an Author’ ஆகிய நாடகங்களைப் பார்த்திருக்கிறேன். அவை எனக்கு நாடக வகுப்பெடுத்திருக்கின்றன. தமிழிலும், ந.முத்துசாமியின் ’நாற்காலிக்காரர்’, இந்திரா பார்த்தசாரதியின் ‘பசி’, என்னுடைய ‘வெத்துவேட்டு’ ஆகிய நாடகங்கள் இந்த வகையினதாகக் கூடும்.
’மாயக்கூத்து சொல்லித்தந்திருக்கிற மனிதக்கூத்து’ என்று தலைப்பிருப்பதால், ஜூலை11 இல் வெளிவந்திருக்கிற ’மாயக்கூத்து’ திரைப்படம் பற்றி ஏதோ சொல்லப்போகிறாய் என்று பார்த்தால், யார் கேட்டது, அதற்குப் பொருத்தமற்ற இந்த அபத்த நாடக வகுப்பை இங்கு? எங்குபோய் முட்டிக் கொள்வது இந்த அபத்தத்தை நினைத்து? என்று முணுமுணுப்பது புரிகிறது. என்ன செய்வது? 48 ஆண்டுகளாய் நாடகம், நாடகம் என்றே வாழ்க்கையைத் தொலைத்திருக்கிற என்னை விட்டும், நாடகம் தொலைய மறுக்கிறது, நான் என்னத்தைச் செய்ய? சரி, ’மாயக்கூத்து’ திரைப்படத்திற்கு வருவோம்! இதுவும் எழுத்தாளனின் கதை- கதைக்குள் கதை- என்று meta-story ஆக விரிகிறது. திரைப்படக் கதைக்குள் இன்னொரு திரைப்படக் கதை என்பதாய்! எல்லோருக்கும் புரியும்படியான ஒரு மாய யதார்த்தவாதப் படம் இது! மனிதக் கூத்து நல்ல திசையில் செல்ல, படைப்பு என்கிற மாய க்கூத்துகள் பயன்படவேண்டும் என்பதை வழ்வின் சமனற்ற விஷயங்களைச் சொல்லி, நல்லதைச் சொல்ல ஆற்றுப்படுத்துகிறது. வாழ்வின் அபத்தங்களை, வழிவழியாகக் கட்டமைக்கப்பட்டு வாழ்வின் தருமங்கள் என்று ஆக்கிவைத்திருக்கிற அதிகாரக் கட்டமைப்பை, அதன் நியாயபேதங்களைக் கேள்விக்குட்படுத்துகிறது இந்த ’மாயக்கூத்து’! போகிறபோக்கில், அதற்குள் அமுங்கிக் கிடக்கிற அரசியலையும் நம்மை அசைபோட வைக்கின்றன. சமூகப் பிரச்சனைகளைப் பேசும்போது, அரசியல் அமரிக்கையாக அதனுள் வந்து அமர்ந்துவிடுகிறது. ’படைப்பதனால் என் பேர் இறைவன்’ என் கிற அகங்கார மிதப்பில் கிடக்கிற எழுத்தாளனை (யதார்த்தம்), அவன் படைத்து உலவவிட்ட கதா பாத்திரங்கள் (தோற்றப் புனைவு), எங்களை ஏன் இப்படிப் படைத்தாய் என்று அவனின் சட்டையைப் பிடிப்பதுதான் கதை! எழுத்தாளன், அவன் மனைவி, பதிப்பாசிரியர், அங்கு பணிபுரியும் நபர், எழுத்தாளனின் மதியுரைஞர் (mentor) ஒரு சிற்பி- இவர்கள் யதார்த்தத் தளத்தில் இயங்குபவர்கள்! எழுத்தாளன் உருவாக்கிய கதாபாத்திரங்களாய் உயிர்பெற்றிருக்கிற, மூன்று தனித்தனிக் கதைகளின்- ஏழைபடும் பாடு (பணக்காரத் திமிர்)/ அஞ்சாமை (மருத்துவக் கனவின் மரிப்பு)/ கொலையுதிர் காலம் (அடியாள்)-கதாபாத்திரங்கள், இவர்களை ஊடுபாவாய் இணைக்கிற ஆட்டோகாரன் கதையின் கதாபாத்திரம்-இவர்கள் மாயத் தளத்தில் இயங்குபவர்கள்- மீ யதார்த்தக் கதாபாத்திரங்கள்! இவர்களைக் கொண்டு யதார்த்தமும் மாயமும் பின்னிப் பிணைந்த கலவையாய், இவர்களின் உறவாடலில் உருவாக்கப்பட்டிருக்கிறது ’மாயக்கூத்து’! சுயாதீன முயற்சியில் உருவாகியிருக்கிற ஒரு படம் இது! வழக்கமான படங்களின் மீதான ஆற்றாமை இருப்பவர்களால் மட்டுமே உருவாக்கப்படக் கூடியது இது!
மாயக்கூத்தின் தொடக்கமும் முடிவும், இரண்டு படைப்பாளர்கள், தொடர்கதை எழுத்தாளன் என்கிற படைப்பின் பாத்திரங்களுக்கு உயிர்கொடுக்கிற அதன் கர்த்தாவும், கற்களுக்கு உயிர்கொடுத்து சிலையாக்குகிற அச் சிலைகளின் கர்த்தாவும், தங்கள் படைப்புத் தொழில் பற்றிய இருவேறு எதிர்நிலைப் பகிர்தல்தான்- அதற்குள் வருகின்ற எழுத்தாளச் சித்து விளையாட்டுகளின் முடிச்சுகள்தான் - ’மாயக்கூத்து’ திரைப்படம்! எழுத்து, சிற்பம் என படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கிற இவர்கள் இருவரின் முரணாடலில், ’படைப்பதனால் என் பேர் இறைவன்’ என்கிற இறைவனின் பொறுப்பை யும்,அதன் அபத்தத்தையும், ததத்துவார்த்தமாய்க் கேள்விக்குட்படுத்துகிறது ‘மாயக்கூத்து’!படத்தின் தொடக்கமாய் வருகின்ற சிற்பியின் குரற்பதிவான, ’நல்லதை நலமாய் நல்கிட/ நியாயமாய் ஞாலம் படைத்திட/ அத்துணைச் சக்தியும் உனக்கிருப்பின்/ அல்லதை ஆற்றிடும் ஆசை என்ன?/ இத்துணை இன்னல் இழைத்த பின்னும் உன்னிலை மெலென்றா நீ நினைத்தாய்?’- இது, யாரை நோக்கி எழுப்பப்படுகிற வினா? ‘உலகமென்பது ஒரு நாடகமேடை; நாமெல்லாம் அதில் நடிகர்கள்’ என்ற சேக்ஸ் பியர் அந்த வினாவிற்கான விடையாக வருகிறார். கதாபாத்திரங்களைப் படைத்த எழுத்தாளனை நோக்கியும்/ பிரபஞ்சத்தைப் படைத்ததாய்க் கருதப்படும் கடவுளை நோக்கியுமான ஒரு வினாவாகத் தான் இது பார்க்கப்படுகிறது. அதன்பின்தான் எழுத்தாளனும் சிற்பியும் திரைச் சட்டகத்திற்குள் காட்டப்படுகின்றனர். ’எல்லாருமே இங்கெ பொம்மைங்கதான்’ என்கிறார் சிற்பி! ‘நான் பொம்மை இல்லைங்கய்யா. நான் அவுங்களெ ஆட்டி வைக்கிற கடவுள்’ என்கிறார் எழுத்தாளர்! இதுதான் பட த்தின் கருவாய் இருந்து, இதன்மேல் மாயக்கூத்தின் கதை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. எழுத்தாளங்றவன் கடவுள் மாதிரி- கண்ணதாசன் சொன்ன மாதிரி, ’நான் நிரந்தரமானவன் அழிவதில்லை/ எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை’- இது எழுத்தாளனின் கட்சி! ’கதைன்னா எங்கெ ஆக்கணும் எங்கெ அழிக்கணும் எங்கெ சுவாரஸ்யத்தெக் கூட்டணும்னு நான்தான்முடிவு பண்ணணும்?’/ ’ஆளாளுக்குச் சேந்து இப்படிச் செய் அப்படிச் செய்யுங்றீங்க…நான் ஆட்டி வைக்கிறேன் மூடிக்கிட்டு ஆடுங்க’…. இவை எழுத்தாளன் போடுகிற தாயங்கள்! ’ஒரு பொருளெ உருவாக்குறதுக்குத் தான் அவ்வளவு மெனக்கிடணும்…ஆனா அதெ அழிக்க ஒரு நொடி போதும்!’- இது சிற்பி பேசுகிற சமூக நியாயம்! இதன்பின், கதை, கடவுளைக் கழட்டிவிட்டு, நினைவில் பதியவிட்டு, எழுத்தாளனைச் சுற்றிச் சுழலத் தொடங்கிவிடுகிறது.
தொடர்கதைகள் எழுதுகிற எழுத்தாளன் வாசன்! படைப்பிலக்கிய கர்த்தா என்பதால், அவர் தன் னைக் கடவுளாகக் கருதிக் கொள்கிறார். தன் எழுத்துதான் வேதம்-தான் உலவவிடும் பாத்திரங்கள் அனைத்தும், தன் வேதத்திற்குக் கட்டுப்பட்டவை. அதை யாரும் மாற்றவே முடியாது என்கிற மமதை யுடன் திரிபவர்! ’தொடர்கதைகளை எல்லாம் யாருய்யா இப்பப் படிக்கிறா…தொடருக்கு எழுதப்போம்’ என்று, டி.வி.க்கு எழுதப் போகச் சொல்கிறார் பதிப்பாளர்-எழுத்தாளரின் மனைவியும் கூடத்தான்! இப்பொழுது, தொடர்கதைகளில் அவர் படைத்து உலவ விட்டிருக்கும் கதாபாத்திரங்கள், அவருக்கான மாய உலகில், கூத்துக் கட்டி, தங்களுக்கான நியாயத்தை அவரிடம் கேட்கின்றன. ஏன் தங்களை நல்லவனாகக் காட்டக்கூடாது, ஏழை என்றால், அவன் திருடக்கூடியவனாய்த்தான் இரு க்க வேண்டுமென்று யார் சொன்னது? ஏழைகளுக்கு மருத்துவத் தகுதித் தேர்வு கானல்நீர்தானா? குலக்கல்வி என்பது, இந்திய சிந்தனையில் திணிக்கப்பட்டிருக்கிற மனுவின் வடிவம்தானே என்று பல சிந்தனைகளைப் போகிற போக்கில் தெளிச்சிவிட்டு, நம்மை முடிவெடுக்க நம் சிந்தனையைக் கிளறிவிட்டுச் செல்கிறார். அததற்குண்டான அரசியலை நம்மை யோசிக்க வைத்துவிட்டு-படைப்பாளன்-அதிகாரம்-கடவுள்-மூன்றின் குணக்கேடுகளையும் நமக்குத் தொட்டுக் காட்டுகிறார். நிறை மனம் கொண்டவர்களைக் கதாபாத்திரங்களாய்க் காட்டாமல், உருவாக்கப்பட்டிருக்கிற அதிகாரக் கட்டமைப்பிற்குள்ளிருந்து, ’அந்தக் கடவுளாலெகூட எம்மேலெ பழி போடமுடியாது’ எனும் வைராக்கியத்தைக் கொண்டிருக்கிற எங்கள் வாழ்க்கையை மட்டும் ஏன் குறைப்பாடுடையதாய்ப் படைக்க வேண்டும் என்று, கதாசிரியரின் தொடர்கதையில் அவர் படைத்திருக்கிற கதாபாத்திரங்களே, நியாயம் கேட்க அவரிடம் வருகின்றனர். என் செண்பகம் அடிக்கடி சொல்லும், ‘மனிதர்கள் நல்லவர்கள்; ஆனால் பாவமானவர்கள்’,நினைவின் மேல்தளத்திற்கு வந்துவந்துசெல்கிறது! கோபத்தில் வெகுண் டெழுந்த எழுத்தாளரின் கதாபாத்திரங்கள், எழுத்தாளனைப் பிடித்து மொத்துகின்றனர். கடவுள்- படைப்பாளி- பயந்து ஓடுகிறார். கக்கூஸிற்குள் பீதியுடன் அமர்ந்திருக்கிறார். அப்பொழுது அவர் மனைவியின் எரிச்சல் அற்புதம்! ’அங்கெ ஒக்காந்து யோசிச்சி எழுதுனா, அப்படித்தான் கன்றாவி யாயிருக்கும் ஒங்கதையும்’!-சரியான செருப்படி! அதேபோல், ’நான் நிரந்தமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று எழுத்தாளர் சொல்லும்போது, பதிப்பாசிரியர், ’அவரே அப்படிச் சொல்லிட்டாரா…அப்ப அழியாமலே இருங்க’ என்று முணகிச் செல்வதும் இன் னொரு கன்னத்தில் விழுகிற இன்னொரு அடி! எதிர்மறைச் சிந்தனைக்குள், கதாபாத்திரங்களை மட்டுமின்றி வாசகர்களையும் தள்ளிவிடுகிற அந்தப் படைப்பாளி, திரும்பவும், அவரின் மதியுரைஞரி டம்-சிற்பியிடம்-வருகிறார். எழுத்து, சமுகத்திற்குப் பயன்பட வேண்டும்-நல்ல திசைவழியைக் காட்டக் கூடியதாய் இருக்க வேண்டும்-’அதிகாரங்றது அடக்குறதோ ஒடுக்குறதோ இல்லெ. அவசியமானதெ சரியான நேரத்துலெ குடுக்றது! சமத்துவமான ஒரு ஒலகத்தெ உருவாக்க எல்லா சக்தியும் இருந்தும், வேறுபாட்டெ மட்டுமே வெதெச்சிட்டு…என்னோட படைப்புகளுக்கு நாந்தான் கடவுள்னு வேற சொல்லிக்கிறே! இது கதைதான்…இல்லேன்னு நானும் சொல்லலெ…நல்லது சொல்லேன்… அது நாளைக்கு நெஜத்துலெ நடக்கட்டுமே!’-என்று கூறுகிறார். ‘அபத்த நாடகங்களில் கிடைக்காத, நம்பிக்கை தருகின்ற இப் பொருண்மை மிக முக்கியமானது. படைப்பாளியின் படைப்பில் இருக்கின்ற குணக் கட்டமைப்பு பற்றிய சிந்தனைகளை மட்டுமல்ல, இப்படிக் கட்டமைத்திருக்கிறதாய் கட்டமைக்கப்பட்டிருக்கும் படைப்பாளியின் கருத்தியலையும்-கடவுளின் இடத்தையுமேகூட-மிக நாசூக்காகச் சுட்டிக் கொட்டிச் சென்றிருக்கிறார்! ’விதிகிதின்னு நமக்குமேல ஒருத்தன் இருக்காங்றீ ங்க…அப்படி ஒருத்தன் இருந்தான்னா, அவன் சட்டெயெப் புடிச்சி நான் கேப்பேன்’ என்கிற மருத் துவராய்க் கனவு காணும் பெண்ணின் குமுறலையும் கடந்துதான் நாம் போகின்றோம். கடவுளும் (இருந்தால்) அதிகாரத்தைத் தனக்குள் வைத்துக்கொண்டு மக்களை அசௌகரியப்படுத்திக் கொண் டிராமல், மக்கள் நலமுடன் வாழ, மக்கள் பயன் பெறும்படியான காரியங்களில் தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும் என்கிறார்- ஓ! மை கடவுளே!
பதிப்பாசிரியர் வரதராஜனாக வருபவர் டெல்லி கணேஷ்! அவருக்கு இதுதான் கடைசிப் படமாகி இருக்கிறது என்பது ஒரு சோகம்! அனால், மனிதர் சிறுசிறு அசைவுகளில்/ உணர்வுகளில் அதிசயம் செய்திருக்கிறார். வாழும் காலத்தில் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எப்படி இருக்கும் என்று நான் யோசிப்பதுண்டு. நடிப்பில் இயல்பை வழியவிடுவதில், நடிக்காது நடிப்பைத் தருவதில் அசாத்திய நடிகர் அவர்! எழுத்தாளர் வாசனாக வருபவர், நாகராஜ் கண்ணன்! இவர்தான் இந்தப் படத்தினுடைய உரையாடலையும், பாடல் வரிகளையும் எழுதியிருக்கிறவர். உரையாடல்கள், தத்துவ விசாரத்தை ஊக்குவித்து, உள்ளத்தில் அசைபோடும்படி, அருமையாக அமைந்திருக்கின்றன. நடிப்பு, பார்ப்பவர் மனசுக்குள் அசைபோட வைத்துவிடும் ஆயுளைக் கொண்டிருக்கிறது. சிற்பி ஒரு முறை, ’எம்மார்ஐ ஸ்கேன் எடுக்கப் பரிந்துரை செய்கிற நிலையில், அந்தவகைப் பதட்டம் நிறைந்த எழுத்தாளனாகவே, வாழ்ந்திருக்கிறார். வாழ்த்துகள் நாகராஜன்! எழுத்தாளனின் மனைவியாக வருபவர் அந்தப் பாத்திரத்திற்காகவே பிடித்து வைக்கப்பட்டவராக இருக்கிறார். பார்த்துப் பழகியிருக்கிற முகம் சாய் தீனாவும், மற்றைய பாத்திரங்கள் எல்லோருமே- தன் பெண்ணின் மருத்துவக் கனவிற்குப் பூச்சி மருந்து தெளிக்கிற பூபாளம் பிரகதீஷும், அவரின் மனைவியாக வரும் ஜானகியும் எனக்கு முகம் தெரிந்தவர்களாய் இருக்கின்றனர்-தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கின்றனர். ’சொல் புதிது, சுவை புதிது, எந்நாளும் அழியாத சோதிமிக்க நவ கவிதை’ என்பதுமாதிரி, இப் படத்தின் சொற்கள் புதிதாய் ஒலிக்கின்றன; கதாபாத்திரங்கள், தொழில் நுணுக்கர்கள் கூட்டு, இந்தப் பட த்திற்குப் புதிய சுவையைத் தருகிறது! அளவெடுத்த சட்டைத் துணி மாதிரி அத்தனைப் பேரும் இந் தப் படத்துடன் கச்சிதமாகப் பொருந்திப் போயிருந்திருக்கின்றனர். படக் குழுவிற்கு வாழ்த்துகள்!
இசை, அஞ்சனா ராஜகோபால் என்கிற புதியபெண்-சிறிய பெண்! அனுபவப் பழமாய்த் தெறித்து விழுந்திருக்கிறார். இம்மாதிரி அபத்தச் சம்பவங்களைக் கொண்டாடும் இசை, இதுபோன்ற புதிய தலைமுறை இளைய இரத்தங்களில்தான் இலகுவாக உட்செரிக்க முடியுமோ என்னவோ தெரியவில்லை. மிகுந்த ஆச்சரியம் தரத்தக்க சந்தோஷத்திற்குள் இசை தள்ளி விட்டிருந்தது! எப்படி நடந்தது இந்த அதிசயம் என்று அவரிடம் கேட்டால், புன்னகைத்துக் கையைப் பூப்போல விரிக்கிறார். இந்த எளிமை, படத்தின் இசையில் பூரிப்பாய்த் தெரிகிறது. பாராட்டுகள்!
ஒளிப்பதிவாளர் சுந்தர்ராம் கிருஷ்ணன் மூலமாகத்தான் நான் சிற்பியாய் இதற்குள் நுழைகிறேன். எட்டு ஒன்பது ஆண்டுகளுக்கு முன், மதுரைக்கு என்னைத் தேடி வந்தவர்- தன் படத்தில், ஒரு முதிய பரதேசி பாத்திரத்தில் நடிக்கக் கேட்டு! நான் ஒரு பரதேசி என்பது அவருக்கு எப்படித் தெரியும் என்பது அப்போது தெரியவில்லை. இப்போது கேட்கையில், ’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் கோவில் பூசாரியைத் தெரியுமா என்று அவரின் நண்பர்களைக் கோவையில் விசாரிக்க, என் நாடக நண்பர்களில் ஒருவரான திருநாவுக்கரசு என் எண்ணைக் கொடுத்து, ’அவர் வருவது சிரமம்’ என்று ஆசியும் கூறி அனுப்பி வைத்திருக்கிறார். என்னை அவர் தொடர்பு கொள்ளுகையில், நான் திரைப் பிரதியை இணையத்தில் அனுப்பச் சொல்கிறேன். மறுநாள் அவரும் அவர் நண்பர் சங்கமேஸ்வரனும், என் படுக்கையின் முன்பு எனக்குப் பள்ளியெழுச்சிப் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் ஆர்வத்தைப் பார்த்து, ’சரி, செய்யலாம்’ என்று சொல்லவும், உடனே, கோவைக்குப் பறக்கின்றனர். அடுத்தடுத்த வேலைகள் அதைத் தொடர்ந்து நடக்கின்றன. அவரும், அவரின் நண்பர்கள் சிலரும், அவரின் கைக்கடக்கமான காமிராவும் தவிர, வேறு யாரும், எதுவும் படப்பிடிப்புத் தளத்தில் இருந்ததாக நினைவில்லை. அது, வெறும் மூன்று இலட்சத்தில் உருவான படமென்றால், யாரும் நம்ப மாட்டார்கள். இதுபோன்ற திரைப்பட சாகசப் படையினர் சேர்ந்து உருவாக்கி இருப்பது இந்த ‘மாயக்கூத்து’! அவரது திறமைக்குச் சான்றாக, வேலையாள் செல்வி இரத்தம் வடிய இறந்து கிடக்கும் காட்சியைப் பலரும் சொல்லியிருந்தனர். உண்மைதான்! அதைவிடவும் என்னை இரசிக்க வைத் திருந்த இடம், எழுத்தாளர் மாடியிலிருந்து, தன்னைக் கடவுள் என்கிறார். மாடிப் படியின் கீழே இற ங்கியபடி பதிப்பாளர் பதில் சொல்கிறார். தந்தக் கோபுரத்தில் அமர்ந்திருக்கிற எழுத்தாளனின் இயல்பை இந்தக் காட்சிப் படிமம் எனக்குச் சொன்னது! இன்னொன்று, படத்தின் உச்சக்கட்டம்! முத லில் சிற்ப சாலைக்குள்தான் படமாக்கப்பட்டிருந்தது. அது ஒளிப்பதிவாளருக்கும் நெறியாளுநருக்கும் ஏதோ ஒரு குறையாக இருந்தது அவர்களின் முகங்களில் தெரிந்தது. ஒருநாள் என்றுதான் என்னை அழைத்துப் போயிருந்தனர். எடுத்த அந்தக் காட்சியையே இன்னொரு களத்தில் எடுக்க வேண்டும் என்று, இடம் தேர்வுசெய்து இன்னொரு இடத்தில் அதைமட்டும் படமாக்கினர். அது தான் படத்தில் காட்டப்படுகிற, படகில் படத்தின் முடிவை விவாதிக்கிற காட்சி! பரந்தவெளியின் வானத்து மேகமும், மிதக்கும் நீரின் நீலமும், சூரியன், பின்னிருந்து தன் மஞ்சள் கலந்த செந்நிறத்தை இறக்க, அக் காட்சியும் ஒருசேர இணைந்து, அதில் பேசப்படுகின்ற உண்மையை, அந்தப் பிருமாண்ட வெளிக்குள், அழகாய் அர்த்தம் சொல்ல ஆரம்பித்துவிட்டது என்பது சிறப்பானது.
ஏ.ஆர். இராகவேந்திரன், இந்தப் படத்தை நெறியாளுகை செய்திருக்கிறார். அவர் நண்பர் சீனிவாசனுடன் சேர்ந்து இந்தக் கதையை/ திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் அவர் அதிகம் பேசி நான் பார்த்ததில்லை. ஆனல் அவரின் பார்வையில்/ நடவடிக்கைகளில், தீர்க்கம் என்பது கொட்டிக் கிடக்கும். படப்பிடிப்பு முடிந்த மறுவிநாடி, சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடப் போய்விடும் இயல்பு அவருடையது! அந்த இயல்புடனேயே, நம்மிடம் வேண்டியதைக் கேட்டு வாங்கிவிடக் கூடியவரகவுமிருந்தார். அவருடன் பயணித்த நாட்கள் இனிமையானவையாகவே இருந்தன. அவருக்குப் பின்புலமாயிருந்த அவரின் நண்பர்கள் பிரசாத் இராமச்சந்திரன், ராகுல் தேவா ஆகிய தயாரிப்பு நிர்வாகிகளையும், அவருக்குப் பக்கபலமாக இருந்த சில திரைப்பட நெறி யாளுநர்களையும், ‘மாயக்கூத்து’ நெறியாளுநர் இராகவேந்திரன் நன்றியுடன் நினைத்துப் பார்த்த, படத்தின் தொகுப்பாளர் நாகூரானும் நன்றி கூறப்படவேண்டியவர்கள்! இவர்கள் அத்தனைப் பேரி னுடைய கள்ளங்கபடமற்ற உழைப்பு இன்று மதிப்புறு விளைச்சலை வழங்கி இருக்கிறது. வாழ்த்துகள்!