பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் மனைவி ஜுவாலா குட்டா 30 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்திருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா இருவருக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஜுவாலா குட்டா நாற்பது வயது கடந்தவர் என்பதால் திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் கழித்து மருத்துவர்களின் பலகட்ட சிகிச்சைக்கு பிறகே கடந்த ஏப்ரல் மாதத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஜுவாலாவின் மருத்துவ சிகிச்சைகளுக்கு பாலிவுட் நடிகர் அமீர்கான் உடன் இருந்து உதவியதால் அவரையே தங்கள் குழந்தைக்கு 'மிரா' எனப் பெயர் சூட்டவும் அழைத்திருந்தனர் இந்த தம்பதி.
இந்த நிலையில், சென்னை அரசு மருத்துவமனைக்கு தினமும் 600 மில்லி தாய்ப்பாலை தானம் அளிக்க உள்ளார் ஜுவாலா. தாய்மார் ஆதரவு இல்லாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு உதவும் வகையில் இந்த செயலை முன்னெடுத்ததாக சொல்கிறார் ஜுவாலா. இதுவரை 30 லிட்டர் தாய்ப்பால் தானம் கொடுத்திருக்கிறார் இவர் என்பது பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
இதுதொடர்பாக அவர்பகிரும்போது, "தாய்ப்பால் குழந்தைகளின் வாழ்வை காப்பாற்றும். ப்ரீமெச்சூர் மற்றும் உடல்நலன் சரியில்லாத குழந்தைகளுக்கு தாய்ப்பால் வாழ்வையே மாற்றக்கூடியது. உங்களால் தாய்ப்பால் தானம் கொடுக்க முடிந்தால் நீங்கள் தான் அந்தக் குடும்பத்தின் ஹீரோ. தாய்ப்பால் வங்கிகளுக்கு ஆதரவு கொடுங்கள்" என்கிறார்.
சரி, தாய்ப்பால் தானம் தொடர்பாக நிறைய சந்தேகங்கள் பலருக்கும் இருக்கும். இதனை அந்திமழை வாசகர்களுக்கு தெளிவுப்படுத்த மருத்துவர், பச்சிளம் குழந்தை நிபுணர் ஷோபனா ராஜேந்திரனிடம் பேசினோம்.
"எந்தெந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சரியாக கிடைக்கவில்லையோ அந்தக் குழந்தைகளுக்கு மற்ற பாலூட்டும் தாய்மார்களிடம் இருந்து பால் பெறுவதுதான் தாய்ப்பால் தானம். தன் குழந்தைக்கு தருவதை மீறி அதிகமாக பால் இருக்கிறது என்றாலோ அல்லது தேவைப்படும் குழந்தைகளுக்கு தரவேண்டும் என்று நினைத்தாலோ நிச்சயம் தாய்மார்கள் தரலாம். இது காலங்காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், இப்போது வைரஸ் தொற்று மற்றும் சில காரணங்களுக்காக தாய்ப்பால் தானத்தை, தாய்ப்பால் வங்கிகள் மூலம் முறைப்படுத்தி இருக்கிறார்கள்" என்கிறார்.
குழந்தை பிறந்து 6 ஆறு மாதம் வரையுள்ள தாய்மார்கள் பால் தானம் கொடுப்பதுதான் சிறந்தது என்கிறார். "ஆறு மாதங்கள் வரையில் தாய்ப்பாலில் நிறைய சத்துகள் இருக்கும். ஆறு மாதங்கள் கழித்து கலோரி, சத்துகள், தாய்ப்பால் அளவும் குறையும் என்பதால் குழந்தை பிறந்த முதல் 6 மாதங்கள் பால் தானம் கொடுக்க சிறந்த காலம். இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என்ற வரைமுறை இல்லை. உங்களால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு பால் தாய்மார்கள் தானம் செய்யலாம்" என்றார்.
தாய்ப்பால் தானம் கொடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பேசும்போது, "தாய்ப்பால் தானம் கொடுப்பதற்கு முன்பு கைகளையும் மார்பகங்களையும் நன்கு சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். ஒருவேளை பம்ப் மூலம் பால் எடுக்கிறீர்கள் என்றால் அந்த பம்ப், பால் சேகரிக்கும் பாட்டில் போன்றவற்றையும் நன்கு சுத்தப்படுத்தி கொள்வது முக்கியம். நிறைய பேர் தாய்ப்பால் தானம் செய்தால் தன் குழந்தைக்கு எங்கே பால் பற்றாக்குறை வந்துவிடுமோ என அஞ்சுகிறார்கள். நீங்கள் பால் தானம் செய்வதால் அதிகம் சுரக்குமே தவிர குறையாது. ஏனெனில், தாய்ப்பால் தானத்திற்காக மார்பகங்களை அதிகமுறை பம்ப் செய்யும்போது பால்சுரப்புக்கு முக்கியமான ஆக்சிடோசின், ப்ரோலாக்டின் என்ற இரு ஹார்மோன்களும் அதிகம் சுரந்து பால் சுரப்பை அதிகமாக்கும்" என்றார்.
மேலும், "மதுப்பழக்கம், ஹெச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி, ஹெபடைடிஸ் சி, HTLV அல்லது சிபிலிஸ் நோய்த்தொற்று உள்ளவர்கள் தாய்ப்பால் தானம் அளிக்கக் கூடாது. இவை எல்லாம் கர்ப்பக் காலத்திலேயே ரத்தப்பரிசோதனையில் உறுதி செய்திருப்பார்கள். தாய்ப்பால் தானம் கொடுக்கப்பட்ட பின்பு பதப்படுத்தப்பட்டு நுண்ணுயிரி தொற்று உள்ளதான எனப் பரிசோதிக்கப்படும். பின்பு, -20°C -ல் ஆறு மாதங்கள் வரையிலும் வங்கிகளில் சேமிப்பார்கள். தற்போது பெரும்பாலான மருத்துவமனைகள் தாய்ப்பால் வங்கிகளுடன் இணைப்பில் உள்ளதால் தாய்மார்களிடம் தானம் கொடுக்க விருப்பம் இருக்கிறதா எனக் கேட்பார்கள். யாரையும் இதில் கட்டாயப்படுத்த முடியாது. அதேபோல, பால் தானம் கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் எந்தக் கட்டணமும் கிடையாது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்" என்கிறார்.