“என் மகன்கள் இருவரும் தலைமறைவாக இல்லை” என பாடகர் மனோவின் மனைவி கண்ணீர் மல்க பேட்டிக் கொடுத்துள்ளார்.
சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் மற்றும் மதுரவாயலை சேர்ந்த 16 வயது சிறுவன் இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால்பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பயிற்சி முடிந்து அருகே உள்ள உணவகத்தில் உணவு வாங்க சென்றுள்ளனர்.
அப்போது பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் தங்கள் வீட்டின் அருகே அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது உணவு வாங்கிக்கொண்டிருந்த கிருபா மற்றும் சிறுவன் இருவரையும் அழைத்து மனோவின் மகன்கள் ரஃபிக், சாஹீர் மற்றும் அவரது 3 நண்பர்களும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால் கிருபாவுடன் வந்த சிறுவன் அங்கிருந்து தப்பியோடி ரோந்துப்பணியில் இருந்த காவல்துறையினரை அழைத்து வந்துள்ளார். ஆனால், காவலர்கள் எதிரிலேயே கிருபா மற்றும் சிறுவனை தாக்கிய மனோவின் மகன்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள், தகாத வார்த்தைகளிலும் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
மனோவின் மகன்கள் தாக்கியதில் கிருபா மற்றும் 16 வயது சிறுவனுக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. மனோ மகன்களின் நண்பர்கள் இருவரை போலீஸார் கைது செய்துள்ள நிலையில், மற்ற ஒரு நண்பரும், மனோவின் 2 மகன்களும் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
அன்றைக்கு என்ன நடந்தது என்று பேசியிருக்கும் பாடகர் மனோவின் மனைவி ஜமிலா, எனது மகன்கள் தலைமறைவாக இல்லை. தொடர்ந்து மகன்கள் குறித்து தவறான தகவல்கள் வெளியாகி வருவதால் அவமானத்தில் அவர்கள் வெளியே சென்று இருக்கலாம். தற்போது வரை மகன்கள் எங்கு இருக்கிறார்கள் என தெரியவில்லை என கண்ணீருடன் பேசியுள்ளார்.
மேலும், அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது:
“நேற்று முன்தினம் எனது மகன்களின் நண்பர்கள் வீட்டிற்கு வந்து இருந்தனர். அவர்களை வழி அனுப்ப நானும் எனது மகன்களும் வெளியே சென்றிருந்தோம். அப்போது எங்களையே குருகுரு என பார்த்துக் கொண்டு இருந்த நபரிடம் ஏன் பார்க்கிறாய் என என் மகன் கேட்டார். ஆனால், அதற்கு அவர்கள் தகாத வார்த்தையால் பேசி சினிமாகாரர்கள்தானே தெலுங்கு கொல்டி என கேவலமாக பேசினர். பின்னர் அவர்கள் சென்று 15-க்கும் மேற்பட்டோரை அழைத்துவந்து எங்களை தாக்கினர். அதற்குபின்னர் நான்தான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து போலிஸை வரவழைத்தோம்.
எனது கணவரும் நானும் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும், போலிஸில் புகாரளித்தால் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களுக்கு பிரச்சினையாகி விடும் என தாயுள்ளத்துடன் தான் புகார் அளிக்கவில்லை.
மாறாக எதிர் தரப்பினர் தாக்கியதில் எனக்கும் எனது மகன்கள் அவரது நண்பர்கள் என அனைவருக்கும் காயம் ஏற்பட்டது. மகனின் நண்பருக்கு விலா எலும்பு உடைந்துள்ளது. எனக்கு கை, முகத்தில் காயம், மகன்களுக்கும் கை,கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் உள்ளோம் தேவையற்ற அவதூறுகளை பரப்ப வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.