மா. பொ.சி போஸ்டர்
மா. பொ.சி போஸ்டர்

போஸ் வெங்கட்டின் புதிய படத்துக்கு ம. பொ.சி. குடும்பத்தினர் எதிர்ப்பு!

போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிக்கும் ‘மா.பொ.சி’ திரைப்படம் புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், போஸ் வெங்கட் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில், சித்துகுமார் இசையில், பத்திரிக்கையாளர் சுகுணா திவாகர் வசனத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’மா. பொ. சி - மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்’. இந்த படத்துக்கு ம. பொ.சி.யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ம.பொ.சி-யின் பேத்தி பரமேசுவரி படக்குழுவினரை விமர்சித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

“மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் என்னும் ம.பொ.சியைப் பலர் மா.பொ.சி (தவறே எனினும்) என்றும் அழைக்கின்றனர். உச்சரிக்கையில் குறில் நெடிலாகி அதுவே எழுத்தாகும்போது நேரும் தவறு. மா.பொ.சி என்றாலும், அவருடைய உருவமே நினைவிலெழும்.

போஸ் வெங்கட் இயக்கத்தில் மா.பொ.சி என்றொரு போஸ்டரைப் பார்த்தேன். தமிழ் இயக்குநர்களுக்கு ஏன் இந்த கற்பனை வறட்சியென்று நினைத்தேன்.

பரமேசுவரி
பரமேசுவரி

மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானமாம். மாங்கொல்லை மயிலாப்பூரிலிருக்கும் ஒரு பகுதி; பொன்னரசனும் பொன்னுசாமியும்; கடைசிப் பெயர் சிவஞானமே. முகத்தில் மரு வைத்து மறைத்தாலும் மறைக்க முடியாதவராயிற்றே அவர்.

தமிழுக்குத் தொண்டாற்றியவர்களை நீங்கள் மதிக்கவே வேண்டாம்; ஆனால் ஏன் இப்படி அவமதிக்கிறீர்கள்? நாடறிந்த ஒரு தலைவரை, எல்லைப் போராட்ட வீரரை, சிலம்புச்செல்வரை அவருடைய பெயரைப் பயன்படுத்திக்கொண்டு, அவருடைய கதையில்லையென்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? அவருடைய குடும்பத்தாரிடம் அனுமதி வாங்க வேண்டுமென்று தெரியாதா?

நண்பர்கள், இதனைப் பகிர்ந்து உடனிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று எழுதியுள்ளார். அவரின் இந்த பதிவுக்கு மொழிப்பெயர்ப்பாளர் லதா அருணாச்சலம், கமலாலயன், முத்துநிலவன், இரா. காமராசு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com