பராசக்'தீ’ பரவட்டும்...! 'பேரெக் கேட்டாலே அதிருதில்ல...’

parasakthi
பராசக்தி
Published on

இந்த 2026 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் நாள் திரைக்கு வந்து, ஆண்டின் தொடக்கத்தை-இந்தத் தமிழ்ப் புத்தாண்டை/பொங்கலை அழகுபடுத்தியிருக்கிற சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ யைப் பேசுமுன், அதே பெயரில் 74 ஆண்டுகளுக்கு முன், 17-10-1952 இல் வெளி யாகி, அந்தத் தீபாவளியை  அழகுபடுத்தியிருந்த கலைஞரின் ‘பராசக்தி’யை யும் அசைபோட வேண்டியது காலத்தின் கட்டாயம்! 

இரண்டு ’பராசக்தி’களையும் இணைக்கிற, கருத்தியல் இயங்குதளம்,, ’ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்/ இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ என்கிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைத் தீர்க்கமும், 1965 இல் ஆதிக்க இந்தியை எதிர்த்துப் பொங்கி எழுந்த தமிழக மாணவர்களின் மொழி உரிமை எழுச்சிப் போராட்டமுமாகும்!

தமிழகத்தின் தென்கோடியில் இருந்த என் வாழ்க்கையை அரசியல் கருத்தியலில் திசை மாற்றிய பொழுதுகள்-தமிழாய்/திராவிடமாய்/ இரண்டும் ஒன்றாய்/பொதுவுடைமையாய், எனக்குள், நான், நீ’ என்று, இந்தித் திணிப்பு எதிர்ப்பு எழுச்சியைத் தொடர்ந்த பொழுதுகளில்தான், எனக்குள்ளே முகம் காட்டத் தொடங்குகின்றன. அந்த நினைவுகளை, அழகியலாய்க் கிளறி விட்டிருக்கிற,, அடுத்த தலைமுறைக்கான ஆவண ஓலையாய் ஆக்கி வைத்தி ருக்கிற சுதா கொங்கராவின் ’பராசக்தி’யைக் கொண்டாட வேண்டியதிருக்கிறது.

 தணிக்கைக் குழுவிடம் முட்டி மோதி, 09-01-2026 நண்பகலில், 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கிற படமாகத் தணிக்கைச் சான்றிதழ் பெற்று, 10-01-2026 காலையில் திரையரங்குகளில் வெளியாகி, அமைதிப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது ‘பராசக்தி’! எப்போதுமே ’இந்தியான்னா, அது டெல்லி மட்டுந்தானா?’ என்கிற கேள்வியைச் சுமந்து திரியும்படிச் செயல்படும் ஒன்றிய அரசு, 2021 இல் திரைப்பட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தைக் (Tribunal) கலைத்துவிட்டு, அதற்குப் பதில், நீதிமன்றம் போய் நீதி தேடிக் கொள்ளச் சொல்லிச் சட்டமியற்றியபோது, திரைப்படம் தொடர்புடைய எந்தச் சங்கமும் அதை எதிர்த்துக் குரலெழுப்பியதாகத் தெரியவில்லை. அப்பொழுதே, இதை நான் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுதும் எந்தச் சங்கமும் பெரிய அளவில் குரலெழுப்பியதாகத் தெரியவில்லை. அது இன்று ‘விஸ்வரூபம்’ எடுத்து நிற்கிறது. திரைப்படம் எடுத்து வெளியிடும் தயாரிப்பாளரின் தனிப்பட்ட பிரச்சினை என்பதாய்க்கூட, அதைக் கருதியிருக்கக்கூடும். ஆயின், இன்று நீ ; நாளை நான்’ என்று எல்லோரும் எதிர்கொள்ளக்கூடியதுதானே இந்தப் பிரச்சினை? ‘பராசக்தி’யில், 25 வெட்டுகள் நடந்திருக்கின்றன என்று ஊடகங்கள் சொல்லுகின்றன. அண்ணாவின் ‘தீ பரவட்டும்’ எனும் வாசகம், அதுபோல்  இன்னும் பலவும், அங்கங்குக் காணாமல் போயிருக்கின்றன என்று சொல்லப்படுகின்றது. ’தீ பரவட்டும்’ என்பதன் பதிலியாய்ப் படத்தில் உலாவரும் ’நீதி பரவட்டும்’ என்பது ஒலியாலும், அதுதரும் பொருளாலும் படத்தில் சுதிபேதமாக ஒலி க்கவில்லை. என்ன நீதி? சம நீதி, சமூக நீதி, மாநில உரிமை நீதி, மொழிக்கான அடையாள நீதி, அந்தக் குறிப்பிட்ட போராட்டத்திற்கான நீதி என்று பலவற்றையும் அது நினைவுபடுத்திக் கொண்டே இருக்கின்றது. ’தீ’ படத்தின் முதல் சட்டகத்திலிருந்து இறுதிச் சட்டகம் வரைக்கும்- சிகரெட் லைட்டர் தீ, பந்தத் தீ, எரியும் குடிசைத் தீ, எரியும் பேருந்துத் தீ, ஓடும் இரயில் தீ, தன்னையே எரித்துக் கொண்ட தீ என்று- பல வடிவங்களில் தீயின் பிழம்புகள் படம் நெடுகக் காட்சியாய்ப் பரவிநின்று நம்மைத் தகிக்க வைக்கின்றன. மொழி, நேர்ப்பொருளைச் சொன்னதோடு நின்றுவிடாமல், பல, குறியீட்டு நிரல்களாய், அடுக்கியும் விரித்தும், புதுப் பொருள்கள் மேலடுக்கி வரும்படி, பொருள் கொள்ள உதவியதற்குத் தணிக்கைக் குழுவிற்கு நன்றிகூடச் சொல்லலாம். படத்தொகுப்பின் அழகிய லாய்ப் படத்தை வெட்டிக் கொடுத்தது மாதிரியிருக்கிறது இந்தப் படத்தில் அவர்களின் பணி! 

பராசக்தி சிவாஜி
பராசக்தி சிவாஜி

திரையுலகில் கால்வைத்தத் தொடக்கக் காலத்திலிருந்தே, திராவிட இயக்கத்தவர், இப்படியான தணிக்கை நெருப்பாறுகளைக் கடந்து வந்திருக்கிற அனுபவங்களைப் பட்டியலிட்டால் அது பெருகும். அது, அவர்களின் கருத்தியலை எப்படியும் படைப்பியலாய்ப் பரத்திவிடத் துடிக்கிற துடிப்பியல் தந்திரோபாயம்! 1957 மார்ச் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்டிராத கட்சியான திமுக, உதயசூரியன் எனும் சுயேச்சைச்  சின்னத்தில் தேர்தலில் நிற்கும்போது, மக்களிடம் அந்தச் சின்னத்தைப் பிரபலப்படுத்த 18-01-1957 இல் வெளிவந்த ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில், கதாநாயகன் எம் ஜிஆர் பெயரே ‘உதயசூரியன்’!  அந்தப் புத்திசாலித்தனம் அவர்களிடம் உண்டு. இங்கும் அது, உறுத்தாமல் நிகழ்ந்திருக்கிறது. தணிக்கை வெட்டுகள் எதுவும், கதையைத் தள்ளாடச் செய்து விடாதபடி, கருத்தைக் குலைத்துவிடாதபடி, குளறுபடிகள் ஏதும் வெளித்தெரியாதபடி, அத்தனைக் கச்சிதமாக மேற்பூச்சுப் பூசப்பட்டுக் கதை தொய்வின்றி மிகச் சிறப்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது. நிச்சயம், சுதா கொங்காரா குழுவிற்கு என் பாராட்டுகள்! 

எடுத்துக்கொண்ட காலத்தின், மொழி ஆதிக்கச் சட்ட த்திற்கு எதிரான மாணவர் போராட்ட உணர்வை, அறிவைத் தேடும் இந்தக் காலத்தின் இளைய தலைமுறைக்குள் கடத்தியிருப்பதிலும், அதுபோக, எதிர்காலத் தலைமுறைக்கு, எச்சரிக்கை உணர்வூட்டியிருப்பதிலும், சொல்லவந்த தன் கருத்தில், தணிக்கையையும் மீறி, சுதா கொங்காராவின் ‘பராசக்தி’க் குழு வெற்றி பெற்றிருக்கிறது. ’பராசக்தி’ படம் வெளிவந்து 73 ஆண்டுகளுக்குப் பின், ‘பராசக்தி தடை-அச்சில் வராத அரசாங்க ரகசிய ஆவணங்கள்’ என்ற பெயரில், கடற்கரய் மத்தவிலாச அங்கதம் தொகுத்திருக்கிற நூலொன்று, டிசம்பர் 2025 இல், 1120 பக்கங்களில் வந்திருக்கிறது. அதில் 304 பக்கம் முதல் 365 பக்கம் வரை, ‘பராசக்தி’ படத்தைத் தடை செய்ய முயற்சி மேற்கொண்டிருந்த அரசாங்க ஆவணப் பதிவுகளைத் தருகிறார். ’படத்தை 14-03-1953 க்குப் பிறகு திரையிடக்கூடாது என்ற தடை உத்தரவை மத்திய சர்க்கார் மேற்படி படத் தயாரிப்பாளரான மதறாஸ் நேஷனல் பிக்சர்சாருக்குத் தெரிவித்திருப்பதால், மேற்படி அறிக்கையின்படி, ’பராசக்தி’ படத்தை மதுரை சிடி சினிமாவில் அனைவரும் தவறாது 06-03-1953 முதல் 14-03-1953 க்குள் பார்த்து மகிழும்படிக் கேட்டுக் கொள்கிறோம்’ என்று துண்டுப் பிரசுர விளம்பரம் ஒன்றை, மதுரை கிருஷ்ணா பிரஸில் அடித்து வெளியிட்டிரு க்கின்றனர். ஆனால் படம் தடை செய்யப்பட்டதற்கான எந்த அரசு ஆணைகளும், ஆவணமாக வெளியிடப்படவில்லை என்கிறார் கடற்கரய் அந்த நூலில்! மனுக்கள், மொட்டைக் கடுதாசிகள், விசாரிப்புகள் மூலமாகவே, ’ஏன் படத்தைத் தடை செய்யக் கூடாது?’ என்கிற பீதியைப் பரப்பியபடியே, இந்தப் பிரச் சினை ஓராண்டு அளவிற்கு இழுத்துச்செல்லப்பட்டிருக்கின்றது. 1954 மார்ச் 30 இல் இராஜாஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஓடவேண்டிய சூழலில், அந்தப் பிரச்சினை அந்தரத்திலேயே அப்படியே நின்று போயிருந்திருக்கிறது.

 ’பராசக்தி’யைத் திரும்பவும் வெளிக் கொண்டுவர, திமுக ஆட்சிக்கு வரவேண் டியிருந்தது! இந்தப் ’பராசக்தி’யும், 55 ஆண்டுகளுக்குப் பின், திமுகவின் நான்காவது தலைமுறையிடமிருந்து விநியோகம் செய்யப்பட்டிருக்கிறது. தலை முறை தலைமுறையாகத் திராவிடக் கருத்தாயுதம் ‘பராசக்தி’யாய்த் தாத்தா கலைஞரிடமிருந்து, கொள்ளுப் பேரன் இன்பன் உதயநிதி வரைக்குமாகக் கை மாறி வந்திருப்பது, ரசிப்பிற்குரியதாயிருக்கிறது- சிறப்பாயிருக்கிறது.  ’மழையும் காற்றும் ’பராசக்தி’ செய்கைகாண், வாழ்க தாய்’ என்பதாய், ‘காணி நிலம் வேண்டும் ’பராசக்தி’ காணி நிலம் வேண்டும்’ என்று வேண்டுகிற பாரதியின் வேண்டுதலும், ‘இந்தப் பராசக்தி உனக்குத் தாய்; என் தங்கை கல்யாணி உனக்குத் தாசி, மானங்கெட்டவனே அப்படித்தானே?’ எனும் குணசேகரனின் (சிவாஜி) குரலில், கலைஞரின் நாத்திகமும், ஒருசேர, இலக்கியமாய் நினைவில் நிறுத்துகிற பெயராகப் ‘பராசக்தி’ இருக்கிறது. இன்னும் சொன்னால், வசனங்களில், அதிர்ச்சியைக் கூறுகட்டித் திரைச் சட்டகத்திற்குள் பொதிந்து வைத்திருக்கிற படமாயிருந்தது, கலைஞரின் ‘பராசக்தி’! ’திராவிடக் கருத்தியல் திரைப்படம்’ என்னும் படைப்பு அவதியை,உரத்துச் செவி அதிரச் சொன்ன படம் அது! அதன்பின்னே பெரும்படையாய்த் திரண்டவர்கள் இருந்ததைப்போலவே, மிரண்டவர்களும், அன்று முதல் இன்று வரையும், ’பேரெக் கேட்டாலே அதிருதில்ல’ எனும்படி, மனதிற்குள் காலநேரத்தை வேண்டியபடிக், ’காத்துக்கொண்டுதான்’ கிடக்கின்றனர். 

இப்பொழுது, அதே பெயரில், 21 ஆம் நூற்றாண்டு இளைஞர்களின் (Gen Z Kids), மொழியுணர்வைக் கூர்தீட்ட, தூசு படிந்திருக்கிற அந்த  வரலாற்றைத் துடைத்து, அதன் ஆழத்தைக் காட்ட, இது, இன்னொரு ‘பராசக்தி’யாய் வந்திருக்கிறது. இந்தப் ’பராசக்தி’யும் கலைஞரின் ’பராசக்தி’க்கு எவ்விதத்திலும் குறைந்து போகாமல், இன்றைய இளைஞர்களின் திரை மொழியில் கம்பீரமாகத் தலை நிமிர்ந்து நிற்கிறது. மொழி விழிப்புணர்வை, மங்கவிடாதிருந்து –’எந்த மொழிக்கும் பகையில்லை; சொந்த மொழிக்கு விலையேயில்லை’ என்பதை இந்தத் தலைமுறைக்குக் கையளித்து-அடுத்த தலைமுறைக்குப் பதிவாய்க் கொண்டு சேர்ப்பதுதான்-இந்தப் ‘பராசக்தி’யின் நோக்கமாயிருக்கிறது. அதில், தொடுகோட்டை மகிழ்வுடன் தொட்டுவிட்ட வெற்றி, படக்குழுவிற்குக் கிட்டியிருக்கிறது-பாராட்டுகள்! 

இந்தப் ‘பராசக்தி’ படத்தின் இறுதியில், ஒரு வசனம் வருகிறது. அது:- ‘டேய்! நீங்க எது செஞ்சாலும், என்ன பண்ணாலும், எந்த உருவம் எடுத்தாவது நாங்க வந்துகிட்டுத்தாண்டா இருப்போம்’ என்பதாய்க் கொக்கரிக்கிற, கேஜிபியிடம் உளவுப் பயிற்சிபெற்ற, வடவர் ஆதிக்கவெறியுணர்வு கொண்ட அதிகாரி திருவிடம், தமிழ்ப் போராளி செழியன் சொல்வது, ‘வாங்கடா, எங்க பேரன் பேத்திக ஒங்களுக்காகக் காத்துக்கிட்டு இருப்பாங்க’ என்பது! 60 ஆண்டுகளுக்குப் பிந்தைய, இப்பொழுதும் காத்துக் கொண்டிருக்கும் தலைமுறைப் பேரன் பேத்திகளுக்கான நினைவூட்டலாயிருக்கிறது இந்தப் படம்! இன்றுவரையும் நாம் பகிர்ந்து கொண்டிருக்கிற நேருவின் உறுதிமொழியான, ‘இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, அலுவல் மொழியாக ஆங்கிலமும் இருக்கும்’ என்கிற உத்திரவாதத்தை மீறி, ’இந்தியே ஆட்சி மொழி’ என்கிற ஆட்சி மொழிச் சட்டம் 17 ஆவது பிரிவை (1963) அமல்படுத்த,,1965 சனவரி 26 முதல் இந்தியே இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்கும் என்கிற அறிவிப்பு வெளி யானதே, மாணவரின் மொழிப் போராட்டத்திற்கான காரணம்! அந்தப் போராட்டத்தின் பயனாக, ‘தமிழ்நாடு தவிர, இந்தியா முழுமைக்கும் இந்த ஆட்சிமொழிச் சட்டம் பொருந்தும்’ என்று, அச் சட்டத்தின்கீழ், ஒரு விதி (1976) மட்டும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ’பல்வேறு மொழிவாரி தேசிய இனங்களின் கூட்டமைப்பு தான் இந்திய ஒன்றியம்’ என்கிற கருத்தில் அரசியல் சட்டம் மாற்றப்பட்டிருக்கவில்லை. சட்டம் (Act) என்பதற்கும், விதி (Rules) என்பதற்கும் வேறுபாடிருக்கிறது என்பது சட்டம் படித்தோர்க்குப் புரியும்...

நாடாளுமன்றத்தில் மொழிவாரி மாநிலங்களின் பலம், ஒரே மாதிரியாக இல்லை. 543 மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில், தமிழ்நாடு & புதுச்சேரியிலிருந்து வெறும் 40 உறுப்பினர்கள் மட்டுமே செல்ல முடியும். அவர்களுக்கான நேரத்தில் அங்குக் கேள்வி எழுப்ப மட்டுமே முடியும், ஆனால் நினைக்கிற எதையும் நிறைவேற்றிவிட முடியாது. இதுதான் இன்றைய நிலை. நாடாளுமன்றத்தில் தனக்கிருக்கிற குறைந்தபட்ச அதிகாரங்களை வைத்து, இதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்! அதற்கு நன்றி சொல்லவேண்டும் என்கிற சிந்தனையையும், இன்னும் அடையவேண்டிய இலக்கு தூரத்திலிருக்கிறது என்பதையும், அதற்கு, எல்லா மாநிலங்களிலும் அவர்களின் மொழிவுணர்வும் இணைக்கப்பட வேண்டும் என்பதையும், அந்த வசனம் நினைவுபடுத்தியதற்கு, சுதா கொங்கராவிற்கு நன்றி சொல்ல வேண்டும். ஆயின், அந்தச் சட்டம், இன்னமும், நம் தலை மீது, கத்தியாகத் தொங்கியபடியே இருக்கிறது என்பதையும், அது, சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறது. வாழ்த்துகள் சுதா கொங்கரா!

’என்னங்க சாரே உங்கச் ’சட்டம்’? / என்னங்க சாரே உங்கத் ’திட்டம்’?/ கேள்வி கேட்க ஆளில்லாம, போடுறீங்க கொட்டம்!’-யுகபாரதியின் ஜோக்கர் படத்தின் பாடல் வரி! இந்தத் ’திட்ட’த்தில்தானே, ராமர் பிறந்த இடம் என்று ஒரு கதையை உருவாக்கி, அயோத்தியில் பாபர் மசூதியின் இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று சொல்லி, நீதி, அதிகாரத்தைத் தன் சட்டைப் பைக்குள்ளிருந்து எடுத்து, அங்குக் கோவிலைக் கட்ட முடிகிறது; பரங்குன்றத்தையும் அயோத்தியாக்குவோம் என்று ஒரு சிறு பிரிவால் முழக்கமிடவும் முடிகிறது. நவோதயா பள்ளிகள் வேண்டும் என்று இரண்டு பேரைவைத்து மனு போடவைத்து, ’தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள், ஆகவே அனுமதிக்கலாம்’ என்று நம் காதுகளையே குத்தவும் முடிகிறது. அவர்களால்தான், இங்கிருந்து கொண்டே, ‘பாரத மாதாக்கீ ஜே’ என்று இந்தியில் முழங்கவும் முடிகிறது. ‘வணக்கம்’ என்பதன் பதிலியாய் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முகமன் கூறிக்கொள்ளவும் முடிகிறது. அதைப் பெரும் பிரிவாய்க் காட்ட-கட்டமைக்க-உள்ளடிக் கலவர வேலைகளை அவர்கள் செய்யவும் முடிகிறது. நாளை இவர்களைக்கொண்டு- இந்த ஒன்றிரண்டு பேரை வைத்தே-’இந்தி பேசாத மக்கள்-தமிழ்நாட்டு மக்கள் விரும்புகிறார்கள்’ என்று கூறி, இந்தியை ஆட்சி மொழியாக்க அவர்கள் துணியலாம். நாடாளுமன்றத்தில் அதற்கான எண்ணிக்கை, அநதக் ’கூட்ட’த்திடம் இருக்கிறது. உண்மையைப் பேசவிடாமல், ஊடகவியலாளர் ’தமிழ்க் கேள்வி’ செந்தில்வேல், தோழர் மதிவதினி,  ஆகியோரை ஆள்வைத்து ஊடக விவாதத்தில் மிரட்டிப் பார்க்கிறது அந்தக் ‘கூட்டம்’! எந்த நாட்டில் வாழ்கிறோம்? ’கொடும் புலி வாழும் காடும் நன்றே’ என்றே குமைய வைக்கிறது. இனி, தொகுதி மறுசீரமைப்பு என்று வந்தால், நம் எண்ணிக்கையைக் கொண்டு, நாடாளுமன்றத்திற்கு எந்த அழுத்தமும் கொடுக்க முடியாதும் போகலாம், இளைஞர்களே எச்சரிக்கையாயிருப்பீர் என்று விரிவுரையாற்றிப் பாடம் எடுத்திருக்கிறது அந்த ஒற்றை வரி வசனம்! அதைத் தான், ’நீ எந்த உருவத்தில், எப்படி வந்தாலும், எங்கள் பேரன் பேத்திகள் அதைப் பார்த்துக் கொள்வார்கள்’ என்று, அடுத்த தலைமுறையிடம் அதைக் கடத்துகிற செழியனின் உரையாடல்-அபாரம்! ’பராசக்தி’-மொழி அரசியல் படம் மட்டுமல்ல, நம்மை அரசியல் படுத்துகிற படமாகவும் இது விளங்குகிறது. இங்குதான் சுதா கொங்கராவின் ‘பராசக்தி’, கலைஞரின் ‘பராசக்தி’யைப்போல் நமக்கு நெருக்கமாகிறது.

இப் படத்தின் கருவான, மாணவர் மொழிப் போரின் துறை வல்லுநர்-ஆலோசகராக (Expert Consultant) அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்/வரலாற்றுப் பேராசிரியர்  முனைவர். அ. ராமசாமி இருந்திருக்கிறார். அவரின் ‘The Struggle for Freedom of Languages in India’ என்கிற ஆய்வு நூல், 1965 மொழிப் போராட்டத்தை ஆழமாகப் பதிவு செய்திருக்கிற நூல். திரைப் படத்திலும், மதுரை மேலமாசி வீதியில் நடந்த கலவரத்தில் மாணவர்கள் இருவர் பாதிக்கப்பட்ட தகவலைப் பேராசிரியர் ராமசாமி சொல்லச் சொன்னதாக ஒரு மாணவர் ஓடிவந்து சொல்வதாக ஒரு காட்சியும் வரும். படத்திற்குள்ளும் அவரை நுழைத்திருக்கிற இப் பாங்கு, சிறப்பு!

குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு இடம், 12-02-1965 இல், படத்தின் கதாநாயகி ரத்னமாலா பொள்ளாச்சிக் கொடூரத்தைக் கண்டு கலங்கி, அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்களை விளித்து, ’தமிழுக்கு நீங்க பண்ண துரோகத்துக்கு, இனி இந்த ஜென்மத்துக்கு, நீங்க ஆட்சிக்கே வர முடியாது’ என்று சபிக்கிறார். எப்பா! என்ன அடி! அதுதான், இப்போதுவரை, 58 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது.

இதைத் தணிக்கைத் துறை வெட்டாமல் விட்டிருப்பதற்கு ஏதும் காரணங்கள் இருக்குமா, தெரியவில்லை.   இன்றுவரை, ’பராசக்தி’ என்பதன் திரைப் படிமம், கலைஞர் மு.கருணாநிதி/ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவரையுமே அடையாளப்படுத்தக்கூடியதாய் இருக்கிறது. அவர்கள் அதில் பங்குபெற்றதென்பதே தனிக்கதை!

’பராசக்தி’ நாடகம், ’தேவி நாடக சபா’வில் நிகழ்ந்த காலத்தில், அதன் முகமாக ஒளிர்ந்தவர், அதன் நாடக ஆசிரியர், சுயமரியாதைப் பேச்சாளர் பாவலர் குடந்தை பாலசுந்தரம்! பராசக்தி கதை உரிமை, தேவி நாடக சபா’விலிருந்து பெறப்பட் டது. கதாநாயகனாக நடிக்க, ‘சக்தி நாடக சபா’விலிருந்து சிவாஜி அழைத்து வரப்படுகிறார். அவர், ஒரே தாண்டலாகத் திரையில் கால்வைத்த முதல் படம், ‘பராசக்தி’! கலைஞருக்குப் ‘பராசக்தி’ ஏழாவது திரைப்படம்! ஆசிரியர் ’பாவலர்’ பாலசுந்தரம், ‘பராசக்தி’ திரைப்பட வசனகர்த்தாவாகவும் மாறியிருக்க வேண்டிய நேரத்தில், வழக்கொன்றில் சிக்கி, அவர் சிறைக்குப் போக, அவருக்குப் பதிலாக அந்தப் பணி, திருவாரூர் தங்கராசுவின் கைகளுக்குப் போனது. அவர், நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள், நெறியாளுநர்கள் கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரிடம் கொஞ்ச நாட்களிலேயே முறுக்கிக்கொண்டு வெளியேற, மூன்றாவது தேர்வாக முத்தமிழறிஞரின் கைகளுக்கு அந்தப் பணி நகருகிறது. மூலக்கதை பாவலர் பாலசுந்தரம் என்றிடப்பட்டு, திரைக்கதையில் கலைஞர் செய்த மாற்றங்களுடன்- புதுமைப் பெண் ’விமலா’ பாத்திரம் கலைஞரின் கைங்கர்யம்-புதிய மொழியில், கலைஞரின் படமாகத்தான் விளம்பரம் செய்யப்பட்டது-இன்றுவரையும் கலைஞரின் படமாகத்தான் அது இருக்கிறது. அதுபோல் குணசேகரன் பாத்திரத்தில் முதலில், படத்தின் பங்குதாரர் ஏவி மெய்யப்பன் அவர்களின் தேர்வாக, அன்றைக்குப் பிரபலமாக இருந்த  நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி நடிப்பதாக இருந்து, பின் அது, பி.ஏ. பெருமாள் அவர்களால், புதுமுகம் சிவாஜியின் கைகளுக்கு வந்து சேர்ந்தது. நேஷனல் பிக்சர்ஸின் ‘பராசக்தி’, எப்படி சிவாஜிக்கு முதல் படமோ, அதுபோல் டான் பிக்சர்ஸின் (உதயசூரியன் அல்லது விடியல்) ‘பராசக்தி’ சிவகார்த்திகேயனுக்கு இருபத்தைந்தாவது படம் என்பதும் ஜி.வி.பிரகாஷிற்கு நூறாவது படம் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியவை! இந்தப் ‘பராசக்தி’க்கும், அந்தப் ‘பராசக்தி’க்கு இருந்த மாதிரியான, அப்படியான முத்திரை மொழிகளின் முடிச்சுகள் இருக்கின்றன. வசனம் கைமாறிவந்த கலைஞருக்குப் ‘பராசக்தி’ ஒரு காவியமாக அமைந்ததுபோல், நடிப்பு கைமாறிவந்த சிவாஜிக்கும், ’பராசக்தி’ அவரின்  ஒளி வட்ட முகமாக அமைந்தது. இங்கும், இந்தப் ‘பராசக்தி’யில், ’புறநானூறு’ சூர்யாவிடமிருந்து நடிப்பு கைமாறி வந்திருக்கிற சிவகார்த்திகேயனும், இன்னொரு ஒளிவட்ட முகமாக மிளிர்கிறார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

 சுதா கொங்கராவின் ‘இறுதிச் சுற்று’/ ‘சூரரைப் போற்று’ ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் நான் நீண்ட விமரிசனங்கள் எழுதியிருக்கிறேன். இது எனக்கு அவரின் மூன்றாவது திரைப்பட விமரிசனம்! நான் அவரைச் சந்தித்ததில்லை. இதுபோல், பாலாவின் ’நந்தா’, பிதாமகன்’, ’நான் கடவுள்’ என மூன்று திரைப் படங்களுக்கும், தொடர்ந்து நீண்ட விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். யாரும் கேட்டு எழுதிய விமரிசனங்கள் அல்ல அவை; என்னை எழுதவைத்தத் திரைப் படங்களாய் அவை இருந்தன-இருக்கின்றன-என்பதே உண்மை! இப்பொழுது, அப்படியே, சுதா கொங்கராவின் ‘பராசக்தி’க்கும்! இவரின் ‘பராசக்தி’க்கு முதலில் வைக்கப்பட்டிருந்த பெயர் ‘புறநானூறு’-இதுவும், மிகவும் சிலாக்கியமான ஒரு பெயர்தான்! அதை, மாணவர் படைக்கான குறியீட்டுப் பெயராக, ‘புறநானூற்றுப் படை’ என்று இந்தப் ‘பராசக்தி’யில் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. அன்றிருந்த காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாய் மாணவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட, ’சுதந்திரம் காக்கும் படை’க்கு எதிரான, இன்னொரு புதுக்குதல் இது!

1952 இல் எதிர்கொண்டிருந்த பல மாற்றங்களைப் போல், இந்தப் ’பராசக்தி’யும் பல மாற்றங்களைத் தனக்குள் ஏற்றிருக்கிறது. எல்லோரும் பார்த்து மகிழும் ’சினிமா’வாகவும் இருக்கிறது; விவாதிக்க வேண்டிய வரலாறாகவும் பேசுகிறது; ‘சித்திரிக்கப்பட்டவை’ என்பதாய் தணிக்கைத் துறைக்காக, ’புகைபிடித்தல் உடல்நலத்திற்குத் தீங்கானது’ என்பதுபோல், பல காட்சிகளில், எழுத்துகளும் போடப்படுகின்றன. இந்தப் ‘பராசக்தி’யில், மொழிப் போராட்டத்தின் ஆவணப்படுத்துதலும் இருக்கிறது, மொழிப் போராட்டத்தின் அராஜக  அடிதடி ஆக்‌ஷனும் இருக்கிறது; மொழிப் போராட்டத்தின் தூய அரசியலும் இருக்கிறது-துரோக அரசியலும் இருக்கிறது; மொழிப் போராட்டத்தினுள், புறநானூற்றுப் படைத் தலைவன் செழியனின் அகநானூற்றுக் காதலும் அழகாய் இருக்கி றது, மொழிப் போராட்டத்தினுள் புனைவும் இருக்கிறது; மொழிப் போராட்டத் தின் புதிரும் விடுவிக்கப்பட்டு இருக்கிறது, ஆனால் இவ்வளவும் இருந்தும், எதுவும் துருத்தி நிற்காமல் இருப்பதுதான் இதன் சிறப்பு! 

  சனவரி 5 என்று நினைக்கிறேன், எதேச்சையாக, ‘பராசக்தி’ பட இசை வெளியீ ட்டு விழா நிகழ்ச்சியை/ படத்தின் முன்னோட்டத்தைச் செல்பேசியில் பார்க்க முடிந்தது. முன்னோட்டத்தின் பழுப்பு நிறத் திரைப் பூச்சு, பொட்டலம் கட்டி மடித்து வைக்கப்பட்டிருந்த இன்னொரு காலத்திற்குள் நம் கைபிடித்து அழைத்துச் செல்வதாக இருந்தது.  ’வசந்த & கோ’ விளம்பத்தில் வரும் ‘வசந்த காலம்’ பாட்டில் வருகிற அதே வண்ணத்தின் தொனி! தமிழ்த் திரையுலகில் இன்னுமொரு ‘பேசும் படமாக-பேசுகிற படமாக, இந்தப் ‘பராசக்தி’யும் அமையும் என, எனக்குள் அது, கட்டியம் கூறியிருந்தது. படமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது.  அதற்கான தரம்/குணம்/நிறம் படத்தில் தெரிகிறது. இதைப் படமாக எடுக்க முன்வந்த-அந்தக் காலவெளிக்குள் நம்மை அழைத்துச் செல்ல, அர்த்தமுடன் பணத்தைக் கொட்டியிருக்கிற- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கர் அவர்களுக்கு நன்றி! இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயனுடையது மிகத் தெளிவான உரை-எல்லோருக்கும் பதில் சொல்லும் திறந்த மனமும், முதிர்ந்த பக்குவமும் அதில் தெரிந்தன.

இந்த இடத்தில்,‘சீமராஜா’ படப்பிடிப்பின்போது, 2017 இல், பின்னி மில்லில் வைத்து, சிவகார்த்திகேயனுக்கும் எனக்கும் நடந்த உரை யாடலையும் இங்குப் பகிரலாம் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவரின் மனவிசாலத்தை இரண்டாவது முறையாக அந்த உரையில் பார்த்தேன்.  இதை, இங்குச் சொல்வதற்கான மனவெளியை, அவரின் அந்த உரை, எனக்குள் உரு வாக்கியிருக்கிறது. ’திரை வளர்த்த நான்; நான் வளர்க்கும் திரை’ நூலை அவரிடம் வழங்கிவிட்டுச் சொன்னேன்: -’இதில் நடிக்க ஒப்புதல் கொடுக்கலாமா வேண்டாமா என்று குழம்பியிருந்த நேரத்தில், என் தம்பி/ தங்கையரின் பிள்ளைகள், அவர்களின் குழந்தைகள், சிவகார்த்திகேயனை எங்களுக்கு ரொம்பவே பிடிக்கும்..,அவரோட நீங்க நடியுங்க’ என்று வற்புறுத்த, அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நானும் நடிக்க ஒப்புக் கொண்டேன்… சொன்னால் நீங்கள் வருத்தப்படக்கூடாது … சிறுவர்கள், குழந்தைகளுக்கு உங்களை ரொம்பவே பிடித்திருக்கிறது. அவர்களை மனதில் வைத்து, அவர்களுக்கு நல்ல கருத்துகளைச் சொல்லுகிற மாதிரி, நீங்க நடிக்கிறது நல்லது. (படங்களைக் குறிப்பிட்டு), ’தண்ணி அடிக்கிற மாதிரி, பெண்களைக் கண்டபடிக் கிண்டலடிக்கிற மாதிரி’ நடிக்கிறது எனக்குச் சங்கடமாக இருக்குது. நமக்கும் பெரிய சமூகப் பொறுப்பு இருக்கிறது’ என்று சொன்னேன். புத்தகத்தைப் புரட்டிக் கொண்டே, அதைச் சிரித்தபடி உள்வாங்கிக் கொண்டது, அவரின் முகத்தில் தெரிந்தது. அதன்பின், பத்துப் பதினைந்து நாட்கள் கழித்து, திருச்சி புனித வளனார் கல்லூரியில் அவர் பேசியதாக, ஒரு வார இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. அது:-’பெண்களைக் கேலி செய்கிற மாதிரியான காட்சிகளிலும், குடிக்கிற மாதிரியான காட்சிகளிலும் இனி நடிக்க வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறேன்’ என அம் மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாக! அவரின் அம்மாவின் குரலாக அது அவருக்குள் வேலை செய்திருக்கிறது. ’இந்த’ அண்ணா சொன்னதையும் கொஞ்சம் கேட்’டிருக்கிறார். அதன்பின் அவரைச் சந்திக்கிற வாய்ப்பும், தொடர்பு கொள்ளும் வழிகளும் முயற்சிகளும் எனக்கில்லாததால், இந்தவகையில் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. அவரின் ‘அமரன்’, விமரிசனங்கள் இருந்தாலும், அது, என்னை நெகிழவைத்த படம்! இப்போது-‘பராசக்தி’-இது இன்னமுமே கூடுதலாக! இதில், வாய் பேசாத ’பேனா’ பேசுகிற அரசியல் அற்புதம்!

ஆட்சித் துறை நேர்காணலுக்கு வந்தவர்-செழியன் கொடுத்த பேனாவுடன் (அண்ணா செழியனுக்குப் பரிசு கொடுத்தது) நேர்காணலுக்குப் போய், இந்தியில் திறன் போதாததால் திரும்பிவர, ஆட்சியிலிருந்த முதல்வரால், இரயில் நிலையத்தில் அவமானப்படுத்தப்பட, செழியன் கண்முன் தீக்குளித்து இறக்கிறார். பேனாவை வழங்கிய செழியன், டிடிஆர் பணிக்கு, அவர் பேசும் இந்தி பத்தாது என விரட்டப்படுகிறார். பேனா என்பது இங்கு அறிவின் குறியீடாய் நிற்கிறது. அது எப்பொழுதும் செழியனின் சட்டைப் பையில் இதயத்தைத் தொட்டுக் கொண்டே இருக்கிறது.    செழியன் வீட்டில், ’அண்ணா’ படமோ, வேறு எந்தத் தலைவர்களின் படங்களோ மாட்டப்பட்டு இருப்பதாகக் காட்டவில்லை. பெரும்பாலும் அப்படிக் காட்டிக் கடந்து போவது, ஒரு முறை! அண்ணனும் தம்பியும் கறுப்புச் சட்டை மட்டுமே போட்டு வருவதாக ஒரு குறியீடு காட்டப்படுகிறது. ஆனால் இங்கு, செழியன், தன் தம்பி சின்னதுரையிடம் (சிவகங்கை இராசேந்திரன் நினைவிற்கு வருகிறார்), ‘இந்த அண்ணா சொல்றதையும் கேளு’ என்கிற ஒற்றை வரியில், ’அவர்கள் யார்? எந்தக் கருத்தியல் பின்புலம் கொண்டவர்கள்’ என்பதைத் தெளிவுபடுத்திவிட்டுக் கடந்து சென்று விடுகிறார். அவ்வளவுதான்! அப்படித்தான் வசனங்களை உள்ளுணர்ந்து பொருள்கொண்டு ரசிக்க வைத்திருக்கிறது இந்தப் ’பராசக்தி’யும்! இன்னொரு இடம், அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் மாணவர்கள் இந்திப் படம் பார்த்துக் கொண்டிருக்கையில், சின்னத்துரை அவர்களுடன் மோதி, அதை மாற்றிப் பராசக்தி படத்தைப் போட்டுவிட்டுப் போவது! 1965 காலத்தில், 16 mm புரொஜெக்டரில்தானே படம் போட்டிருப்பார்கள்?   அப்படி உடனே படத்தை மாற்றமுடியுமா என்று தெரியவில்லை. ஆனால், சின்னத்துரையினுடைய கட்சி சார்பை விளக்குவதற்குத்தான் அதுவும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மொழிப்போர் வரலாற்றின் பக்கங்களில், நான் அறிந்தவர்களை நினைவுபடுத்தி, அதை உணர்வுபூர்வமாக அழகாக்கித் தந்திருக்கிறார்.  பாராட்டுகள் சிவகார்த்திகேயன்!  

1938 இல் முதல் இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கிளர்ச்சியானது, இராஜாஜிக்கு எதிராகத் தமிழ்ப் பேரறிஞர்களை இணைத்துக் கொண்டு பெரியார் நடத்தியது. தாளமுத்து-நடராசன் அதில் களப்பலி ஆனவர்கள்.  அது, என் அப்பா, விட லையாயிருந்தபோது நடந்தது. 1949-50 இல் இரண்டாவது மொழிப் போர் கிளர்ச்சி ஒன்றும் நடந்து கடந்திருக்கிறது. அப்பொழுது, அம்மாவின் வயிற்றுக்குள் நான் இருந்திருக்க வேண்டும். மூன்றாவது முறை, இந்தித் திணிப்பிற்கு எதிராக, 1965 இல் மாணவர்கள் கிளர்ந்தெழுந்த மொழிவுணர்வுப் போராட்டத்தின் எழுச்சியில், பள்ளிச் சிறுவனாக நானும் கலந்து கொண்டிருந்தேன். அப்போது, பாளை தூய சவேரியார் உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறேன். எட்டாம் வகுப்புத் தமிழ் ஆசிரியர் முத்து, எனக்குள் அந்த வீர்யத்தைக் கலந்திருந்தார். அப்பொழுதும் என் குரல் பெரியது. ஆக, ஊர்வலத்தின் முன், நான் முழக்கமிட, அது அன்றைய போராட்டக்கார அண்ணாச்சிமார்களுக்குப் பெரிதும் பயன்பட்டிருந்தது. ’இந்ந்ந்தீ ஒழிக’ என்று உடலின் உதிர லயத்துடன் நான் முழங்கிய முழக்கம், இப்போதும் என் மனத் திரையில் காட்சியாக விரிந்து கொண்டேயிருக்கிறது. விளையாட்டுப் பிள்ளையாய் இருந்த நான், சந்திக்கு- நெல்லை சந்திப்பிற்கும்- வந்து, கல்லூரி அண்ணாச்சிமார்களின் ஊர்வலத்தில் முழக்கமிட்டுச் சென்றதன் முதல் அரங்கேற்றம், எனக்கு அங்குதான்-அந்தப் போராட்டத்தில்தான் நிகழ்ந்தது. அதுதான் என் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்து அது சேர்த்திருந்தது. அந்த மாற்றங்கள், தனிக் கதையாக விரியக் கூடியவை. ’கெஞ்சுவதில்லை பிறார்பால், அவர்செய் கேட்டினுக்கும் அஞ்சுவதில்லை/ மொழியையும் நாட்டையும் காவாமல் துஞ்சு வதில்லை-எனவே/ தமிழர் தோளெழுந்தால் எஞ்சுவதில்லை புவியில் எவரும் எதிர்நின்றே’ என்று முழக்கமிட்டிருந்த பெருஞ்சித்திரனாரின் ‘தென்மொழி’, ‘தமிழ்ச் சிட்டு’ இதழ்கள் எனக்குள் புகுந்துகொண்டிருந்த நேரமும் அது! நேற்று படித்த செய்திகள், கவிதைகள் எல்லாம் மறந்துபோய் விடுகிற இன்றைய என் இயலாமையில், கல்லூரிக் காலத்து இளமையில் கற்றது, பசுமரத்தாணியாய் உள்ளத்தில் உறைந்திருக்கிறது ஆச்சரியமாய் இருக்கிறது. 

அப்பொழுது எனக்குள் பதிந்து போயிருந்த, போகுமிடமெங்கும் நான் முழங்கிக் கொண்டிருந்த இன்னொரு பாடலையும், இங்குக் குறிப்பிட வேண்டும். அது ‘இந்தி அரக்கி’ என் பதாய்க் கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். அந்தக் கவிதையுடன்-அதன் பொருளுடன் இன்று எனக்கு உடன்பாடில்லாதிருக்கலாம், ஆனால், அந்த வயதில் என் உள்ளத்தை நிறைத்த கவிதை அது-‘லம்பாடி லம்பாடி லம்பாடிப் பேய்/நாய் குரைத்த ஓசையிலே பிறந்த பாடை (பாஷை)/ ஹை ஹையென்று எங்களூரில் குதிரைகளை ஓட்டும் சொல்லை/நலுங்காமல் எடுத்துப்போய் வினைச்சொல் ஆக்கி/மேலும் வார்த்தைகளைத் தேடியவாறு அலைகின்ற தெருப்பொறுக்கி!’-இந்தப் ’பராசக்தி’யைப் பார்க்கையில், அந்த வயதின் என் கழிந்த பொழுதுகள் மேலெழுந்து வருகின்றன. நல்ல படைப்புகள் நம் கைபிடித்து அப்படித்தான் கூட்டிச்செல்ல வேண்டும்-இந்தப் படம் அதைச் செய்திருக்கிறது. 

  1938 இல், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ எனும் கோரிக்கையை முன்மொழிந்து, முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில், தமிழறிஞர்களுடன் முன்னணி வீரராய்க் களத்திலிருந்த பெரியார் 1965 மொழிப் போராட்டத்தில், ‘பச்சைத் தமிழர்’  காமராசரின் வாக்குறுதியை- காமராசரையே நம்பி ஏமாந்திருந்தார். பிற்பாடு அந்தத் தவறை ஒப்புக்கொண்ட பெரிய மனது அவரிடமிருந்தது. ஆயின் அவ ரின் ‘கண்ணீர்த் துளிகள்’ அப் போராட்டத்தில் மாணவர்களின் அபிமானமாயிருந்தனர். இதுமாதிரியான மாணவர் எழுச்சிக்குப் பின், 1967 இல், திமுக ஆட்சிக்கு வருகிறது. அதன்பின், ஒவ்வொரு ஆண்டும், சனவரி 25 அன்று, (1965 இல் அன்றுதான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன், காவ லர்களின் துப்பாக்கிக் குண்டிற்குப் பலியாகிறார்.) தமிழ்நாட்டில், மொழிப்போர் ஈகியருக்கான வீரவணக்க நாள் கூட்டங்கள் நடைபெற்று வந்தாலும், இந்த ஆண்டு, மாணவர்களின் சுயமான எழுச்சியாக எழுந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் மணிவிழா ஆண்டில், அதை மீண்டும் உயிர்ப்பான பின்புலமாய்க் காட்சி வடிவாய்த் திரையில் வடித்து, ‘பராசக்க்க்தீ பரவட்டும்’ என்று, காலத்தைப் பின்னோக்கி நகர்த்த வைத்து, அந்தக் களத்தின் உணர்வுத் தளத்தை, மீண்டும் நம் மனசில் வேதியல் கிரியைபுரிய வைத்தமைக்குப் ‘பராசக்தி’க் குழுவினரைப் பாராட்டலாம். 

 படம் ஆரம்பிக்கும் முன், பொறுப்புத் துறப்பு, எழுத்தாக மட்டுமின்றி, குரல்வழி யாகவும் பதியப்படுகிறது:- ’இத் திரைப்படத்தில் சித்திரிக்கப்பட்ட நிகழ்வுகள் சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், வரலாற்று நம்பகத்தன்மை அல்லது துல்லியத்தை நாங்கள் மீட்கவோ அல்லது கோரவோ இல்லை. இதில் காட் டப்பட்டுள்ள கதாபாத்திரங்கள், இடங்கள், பெயர்கள் மற்றும் நிகழ்வுகள், எந்த வொரு உண்மையான நிகழ்வுகளுடனோ, நிறுவனங்களுடனோ, இடங்களுட னோ அல்லது வாழும், இறந்த நபர்களுடனோ ஒத்துப் போகுமேயானால், முற்றிலும் அது தற்செயலானது. நாங்கள், அனைத்துச் சமூகங்கள், சாதிகள், மதங் கள், நம்பிக்கைகளை மதிக்கின்றோம். மேலும் எந்தவொரு சமூகம், நபர், சாதி மற்றும் மதத்தின் உணர்வுகளை அவமதிப்பதோ, சேதப்படுத்துவதோ அல்லது இழிவுபடுத்துவதோ எங்களது நோக்கமில்லை.’ என்று! ஆக, வரலாற்றுப் புள்ளி விவரங்களை, நமக்குத் தெரிந்த சம்பவங்கள் இல்லையே, நம்மை அடையாள ப்படுத்தித் திட்டுகிறார்களே, காம்ராஜரைக் காணவில்லையே என்கிற அங்கலாய்ப்பையெல்லாம் கொஞ்சம் ஒதுக்கித் தள்ளி வைத்துவிட்டு, இந்தப் படத் தைப் பார்க்க முயலலாம். இது ஒரு சினிமா-வரலாறாகப் பதியப்பட்டிருக்கிற, இந்திமொழித் திணிப்பிற்கு எதிரான மாணவர் போராட்டத்தின் பின்புலத்தில், போராட்டத்தின் உணர்ச்சிக் குவியல்களையும், மோதல்களையும் சாகசங்க ளையும் காட்டுகிற படம்!, இறுதியில், ’தமிழ்நாட்டின் அனைத்துப் பள்ளிகளிலும் மும்மொழிக் கொள்கையை அகற்றிவிட்டு, தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளிக்க இப் பேரவை தீர்மானிக்கிறது’ என்று முதல்வர் அண்ணா சட்டப் பேரவையில் அறிவிப்பதாய்க் காட்டப்படுகிறது. இந்த உண் மையைப் போலவே, பச்சையப்பன் கல்லூரி, காந்தி மியூசியம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை மேலமாசி வீதி, டில்லி, சென்னை, பொள்ளாச்சி, கோயமுத்தூர், திருச்சி ஆகிய ஊர்கள், உண்மைத் தன்மையைக் கூடுதலாய்க் கொடுக்க உதவுகின்றன. இது, மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செழியன், சின்னதுரை, நத்னமாலா ஆகிய மூவரைச் சுற்றி மட்டுமே சுழலும் ஒரு கதை- அதன் பின்புலம் 1965 மாணவர் போராட்டம் என்று புரிந்து கொண்டால் போதும்!! நடுவில், 12 பிப்ருவரி 1965 இல், இராணுவத்தை இறக்கி, பொள்ளாச்சியில் நடத்திய, மறைக்கடிக்கப்பட்டிருக்கிற, ’ஜாலியன் வாலாபாக்’கை நினைவுபடுத்துகிற, ஹிட்லரின் ’கான்சண்ட்ரெஷன் காம்ப்’பை கண்ணுக்குள் ஓடவிடுகிற ஒரு கொடூரம், இரத்தமும் சதையுமாக, வெளிச்சத்திற்குள் நிறுத் தப்பட்டிருக்கிறது. எத்தனை முறைகள்தான், தானாக வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டேயிருப்பது?படம் ஆரம்பிக்கும் முன் முன்னுரையாக, மொழியின் முக்கியத்துவம் உலகின் பல இனங்களுக்கும் எப்படி முக்கியமாயிருந்ததென்று சித்திரக் காட்சிகளாகச் சொல்லப்படுகிறது. படத்திற்குள் நுழைவதற்குமுன், பார்வையாளர்களை மன அளவில் மொழி தொடர்பாகச் சிந்திக்க வைக்கிற மருந்தாயிருக்கிறது அது!  ‘மொழிக்காக யாராவது உயிரெக் கொடுப்பானான்னு கேக்குறீங்களா? மொழிங்கிறது வெறும் சத்தமும், எழுத்தும் மட்டுமில்ல. அது ஒரு இனத்தினுடைய மூச்சுக்காற்று; அடையாளம்! ஆங்கிலேயர்கள் ஸ்காட்லாந்தைப் பிடித்து அடிமைப்படுத்தி, அவுங்க கேலிக் மொழியெ மொத்தமா அழிச்சாங்க, என்னைக்கி எல்லாருக்கும் ரஷ்யன்தான் ஒரே மொழின்னு மிகைல் கோபர்சேவ் அறிவிச்சாரோ, அன்னைக்கு சோவியத் யூனியன்லெ எதிர்ப்புக் கிளம்ப ஆரம்பிச்சிச்சி. கிழக்கு பாகிஸ்தான்/மேற்கு பாகிஸ்தான்லெ வெறும் உருது மட்டும் தான் பேசனும்னு எப்ப ஜின்னா சொன்னாரோ, அன்னைக்கே மக்கள் அவுங்க உரிமையெக் கேக்க ஆரம்பிச்சாங்க.. இந்த ஆதிக்க வெறி, மொதமொதல்லெ இந்தியாவுலெ தலையெடுக்க ஆரம்பிச்சது, 1915 லெ. ஆங்கில மொழி பேசுறது அடிமைத்தனம்னு, அதுக்குப் பதிலா எல்லாரும் இந்தி பேசணும்னு வடக்கிலெ யிருந்த இந்தியத் தலைவர்கள் முடிவு எடுத்தாங்க. அதைப் புகுத்துற முயற்சியெ நேரிடையாகவும் மறைமுகமாகவும் மத்தியிலெ ஆண்டவுங்க தீவிரப்ப டுத்துனாங்க.  இதெ எதுத்தவுங்களெக்  கொத்துக் கொத்தா, கைது செஞ்சாங்க, அடிச்சாங்க, மிதிச்சாங்க, சித்திரவதை பண்ணினாங்க. இந்தித் திணிப்பினாலெ எல்லாருடைய படிப்பு, வேலை, வாழ்க்கை எல்லாம் கேள்விக்குறியாகும்னு பயந்தப்ப,, யாரும் போராட வரமாட்டாங்கன்னு நெனச்சப்ப, தாய்மொழியெக் காப்பாத்த எழுந்து நின்னது ஒரு படை. பயம்னா என்னன்னே தெரியாத மாணவர் படை.-புறநானூற்றுப் படை’ என்கிறது அந்தக் குரல்! இந்த உணர்வோட படத்திற்குள் நுழைகிறோம். இதைச் சொல்வதுதான் படம்!

1959 இல் படம் ஆரம்பிக்கிறது. இரயில் எரிப்பு! படத்தில் இரயில் என்பதும் ஒரு கதாபாத்திரமாகவே படத்தின் தொடக்கம் முதல் இறுதிவரையும் முக்கியப் பங்காற்றி யிருக்கிறது-இரயில் என்பது ஒன்றிய அரசின் ஒரு குறியீடு என்பதாகத் திரைக் கதை கோர்க்கப்பட்டிருக்கிறது. படம் முடியவும், மாணவர் போராட்டத்தில் களப்பலி ஆனோரின் பட்டியலும் அவர்களின் படங்களும், பத்திரிகைச் செய்திகளும் திரையில் ஆவணமாகக் காட்டப்படுகின்றன. கனத்த மனதுடனும், இருமொழிக் கொள்கையை ஏந்திப் பிடித்திருக்கிற மாநில அரசியலை மனதிற்குள் அசைபோட்டபடியே, அரங்கைவிட்டு எதுவும் பேசமுடியாமல், பொங்கி வரும் கண்ணீரை அடக்கியபடி வெளிவரவேண்டியதாயிருக்கிறது.  படத்தை அனைவருமே சேர்ந்து அழகாக்கியிருக்கிறார்கள். முதலில் படத்தின் வண்ணத் தொனி! பழைய உலகத்திற்குள் நம்மைக் கொண்டுபோய் அமர்த்தி விடுகிறார்கள். ஒரு பழுப்பு ஓலைச் சுவடியைப் புரட்டுவதுபோல், அதனுள்ளே நம்மை இழுத்துக் கொண்டே சென்றுவிடுகிறது. கலை இயக்கக் குழுவினரை உச்சிமுகரத் தோன்றுகிறது. அசாத்தியம்! மதுரை இரயில் நிலைய, நடைமேடையில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘மதுரை ஜங்ஷன்’-பெயர்ப் பலகையின் எழுத்து வடிவும், அதன்கீழ் எழுதப்பட்டிருக்கும், திருநெல்வேலி, தூத்துக்குடிக்கு இங்கு இறங்கி வண்டி மாறவும்’ என்கிற தகவல் துல்லியமும், காலத்திற்குள் நீங்கள் கரைந்து நின்று, பெரும் ஆய்வு செய்திருப்பதைப் புலப்படுத்துகிறது. ரயில், ரயில் பெட்டிகள், பேருந்துகள்-மதுரையின் வெள்ளைப் பேருந்து/ சென்னையின் சிகப்புப் பேருந்து/ டெல்லியின் நீலப் பேருந்து/ டெலிபோன்கள்/ அச்சு இயந்திரம்/ வீதிகள்-அன்றைக்கு கோவிலைச் சுற்றி இருக்கிற தெருக்கள்,மாசி வீதிகள் அப்படித்தான் இருந்திருந்தன. நான் அந்த வயதில் வந்திருக்கிற வடக்கு மாசி வீதியின் அருகிலிருக்கும் செம்பி கிணற்றுத் தெரு, உடுப்பி ஹோட்டலின் பின், சென்ட்ரல் தியேட்டரின் பின்னுள்ள சந்துகள் மாதிரியான தெருக்களுக்குள் நுழைந்து வந்தது மாதிரி இருந்தது. அருமை! எங்கெங்கோ களத்தை வடிவமைத்து அவற்றை எடுத்திருந்தாலும் அவற்றைத் தொகுத்திருக்கிற பணியின் லாகவமும் பாராடிற்குரியது. உடை, ஒப்பனைக் குழுவினரு க்கு ‘சபாஷ்’ போடத் தோன்றுகிறது! சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா, சேத்தன், குருசோமசுந்தரம் எல்லாரும் அறிந்த முகங்கள்! ஆனால் அவர்களை எல்லாம் அவர்களின் முகங்களை மாற்றாமல், அவர்களைக் கதாபாத்திர முகங்களாய் மாற்றிக் காட்டியிருப்பதற்கு ஆனந்தக் கூத்தாடலாம். என்ன அழகான தலை வகிடுகள்! சிறப்பு! அது இன்னொரு காலத்திற்குள் நம்மைக் கைப்பிடித்துக் கூட்டிச் செல்கிறது. இசை, அருமை என்பது எளிய பதம்! ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு தங்கள் தங்கள் பங்கிற்கு இன்னொரு காலத்திற்குள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். பாடல் காட்சிகள் அழகாகப் படமாக்கப் பட்டிருந்தும், அழகாக இசைக்கப்பட்டிருந்தும், படம் பேசும் காட்சிகளின் உணர்வு வேக நகர்விற்கு, சிறு வேகத் தடையாகவே அவை இருக்கின்றன. கேட்பதற்கு அத்தனை ரம்மியமாயிருக்கின்றன பாடல்களும், இசையும்-தனியாகக் கேட்கையில்! புறநானூற்றின் ஆட்டங்களுக்குள் அமிழ்ந்து நிற்கையில், அகநானூற்றின் ஆட்டங்கள் கொஞ்சம் ஆயாசப்படுத்தத்தான் செய்கின்றன என்பதைச் சொல்லாதிருக்க முடியவில்லை. இவ்வளவையும் அள்ளிவந்து, அழகிய தோரணமாய்க் கண்ணுக்கு விருந்தாக்கி இருப்பவர் ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரன்! ஒவ்வொரு சட்டகமும் அழகு! இரயிலுக்குத் தீ வைக்கிற காட்சி, அதன் பரபரப்பு,  டெல்லியின் ரோடு மறியல், பொள்ளாச்சிக் குரூரம்-இவற்றைப் படமாக்கியிருக்கும் நேர்த்திக்கு ’ஓ’போடத் தோன்றுகிறது. ஆயின், கடைசி இரயில் சண்டை, அப்படித்தான் இருந்திருக்க வேண்டுமா என்று ஒரு கேள்வி எனக்குள் இருக்கிறது. ‘முரட்டுக் காளை’ படத்தின் உச்சக்கட்டச் சண்டையை இன்னொரு புதிய தூரிகையால் தீட்டிப் பார்த்தது போலிருக்கிறது அது!

தொழில் நுணுக்கர்களிடம் தனக்கு வேண்டியதைக் கேட்டு வாங்கியதைப் போலவே, நடிக, நடிகையரிடமிருந்தும் தனக்கு என்ன வேண்டுமோ அதை மிகச் சரியாக வாங்கியிருக்கிறார் சுதா கொங்காரா! ’அமர’னுக்கு அப்புறமாய்ச் ’செழியன்’ - சிவகார்த்திகேயனை இன்னொரு உயரத்தில் உட்காரவைத்துப் பார்த்திருக்கிற படம் இது! 

அதுபோல், ரவிமோகனுக்கும்! என்னவொரு குரூரம் கண்களில்!  அவரின் அம்மா வடக்கு-அப்பா தமிழ்! அப்பா மேலுள்ள அந்தக் கோபம்  தமிழின் மேலுள்ள கோபமாகவும் மாறியிருக்கிற உளவியல்  குரூரம், அவர் கண்களில் குடியிருப்பதைக் கண்கள் காட்டுகின்றன. கூடுதலாக தன் கைவிரலைத் துண்டித்தவனையும் கூறுபோடத் துடிக்கும் கண்களாயிருக்கின்றன. திருநடம் என்கிற அந்தக் கதாபாத்திரம், காட்ட முடியாதிருக்கிற வட இந்தியத் தலைவர்களின் தமிழ்-தமிழர் விரோதத்தைக் காட்டும் குரூரத்தின் ஒற்றைக் குறியீடாக நிற்கிறார்.

’பரதேசி’க்கு அப்புறமாய் மிகச் சரியாக அமைந்து வந்திருக்கிற கதாபாத்திரம் அதர்வாவுக்கு-நியாய மாரே! சேத்தனைச் சொல்லாமல் கடந்து போகமுடியாது – ’அண்ணா’வாகவே அளவெடுத்து வந்து நிற்கிறார். குருவின் கலைஞரின் கதை-பாளை சிறைக்குள் என்றாகிவிடுகிறது.   ஸ்ரீலீலா என்கிற ரத்னமாலா தெலுங்குப் பெண்ணாக வருகிறார். அவரின் அப்பா மதுரை எம் எல் ஏ! அவருடைய துடிப்பும், கோபமும், நிதானமும் தமிழுக்கு ரொம்பவும் புதியதாக இருக்கிறது. தெலுங்கு மொழியே ஆனாலும், ஆதிக்கத்தை எதிர்ப்பதில் முதல் ஆளாக நிற்பேன் என்கிற  பெருமிதம் அவருடையது! ’ ’எங்க அம்மா பாடுன தாலாட்டு, பாட்டி சொன்ன கதைங்க, பையங்க படிப்பு எல்லாத்துலெயும் எங்க மொழி எங்க ரெத்தத்துலெ கலந்திருக்கு. எங்க ரெத்தத்துலெ இருந்து மொழியெப் பிரிக்க முடியலேல்ல. எங்களெ ரெத்தம் சிந்த வைக்கிறீங்களா?’- காதுகளில் அதிருகிறது தாயே அந்தக் குரல்! சுதா கொங்காரா அவர்கள் இதைத் தமிழ்மொழியின் பிரச்சினையாக மட்டும் காட்டாமல், எல்லா மொழிகளுக்கும் இதே பிரச்சினை இருக்கிறது, ஆகவே எல்லோரும் ஒன்றிணையணும் என்று அங்கங்குள்ளவர்களைக் கொண்டும் காட்டி யிருப்பதற்கு,, அவருக்கு ஒரு மகிழ் வணக்கம்! ’தீ பரவட்டும்’ என்றும் இந்தப் படத்தின் பெயராய் அமையலாம். இந்தியா முழுக்க அந்தத் தீ பரவட்டும் என்பதைத்தான் படம் சொல்கிறது. தணிக்கை அங்கே பெரிய கத்தியைத் தூக்கியிருக்கும். அதை அமைதிப்படுத்துகிற விதமாகவும், கலைஞரின் ’பராசக்தி’ யினை நினைவுபடுத்தும் விதமாகவும், ‘பராசக்தி’ என்று பெயர் வைத்திருப்பதற்கு, சுதா கொங்காராவைப் பாராட்டலாம்.

கலைஞர் இரண்டு காட்சிகளில் மட்டும் தெரிகிறார் என்பவர்களுக்குப் படம் முழுக்கவுமே அவரே நிறைந்திருக்கிறார் என்று காட்டுகிற ஒரு குறியிடாகவும் ‘பராசக்தி’ பெயர் இருக்கிறது-படத்தில் பயன்படுத்தும் தமிழ்ப் பிராமியின் குறியீட்டைப்போல்! 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com