அசோக் செல்வன், சரத்குமார்
அசோக் செல்வன், சரத்குமார்

போர் தொழில்: திரைவிமர்சனம்!

வாழ்க்கையில் அன்பும் அக்கறையும் கிடைக்கப் பெறாத ‘சில மனிதர்கள்’, சமூகத்தில் தங்களின் இருப்பை நிலைநிறுத்திக் கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை கிரைம் த்ரில்லர் வகையில் சொல்லும் திரைப்படம் தான் போர் தொழில்.

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இளம்பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட, அதை விசாரிக்க சிபிசிஐடி அதிகாரியான சரத்குமார் (லோகநாதன்) நியமிக்கப்படுகிறார். அவருடன் புதிதாக வேலையில் சேர்ந்த அசோக் செல்வன் (பிரகாஷ்), மீனா (நிகிலா விமல்) ஆகியோர் இணைகின்றனர். தொடக்கத்தில் திணறும் இவர்கள், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற தொடர் கொலைகள் நடந்திருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த கொலைக்கும் இப்போது நடக்கும் கொலைகளுக்கும் என்ன சம்மதம் என்பதைக் கண்டறிவதே மீதி கதை.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா ஒரு நேர்த்தியான சஸ்பென்ஸ் திரில்லர் படத்தை தந்துள்ளார். படம் தொடங்கி முடியும் வரை நம்மை ஒரு வித படபடப்பிலேயே வைத்துள்ளார். பிசிறு இல்லாத திரைக்கதையும், கதாபாத்திர உருவாக்கமும் கனகச்சிதம். கதை சில சினிமாத்தனங்களை தாண்டி, நல்லவன் மீது மரியாதையும் கெட்டவன் மீது பரிதாபத்தையும் ஏற்படுத்துகிறது. இதுவே படத்தின் தனித்துவம்.

தமிழ் சினிமாவில், நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நாயகர்களில் அசோக் செல்வனும் ஒருவர். அதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். படத்தில் அசோக் செல்வன் ஒரு கதாபாத்திரம் என்றால், அவரின் மீசை இன்னொரு கதாபாத்திரம். கனிவான கதாபாத்திரத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். அதேபோல், சரத்குமார் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி எடுக்கிறார். லோகநாதன் கதாபாத்திரம் அவரின் சினிமா வாழ்க்கையில் ஒரு முத்திரை என்று சொல்லலாம். சுப்ரீம் ஸ்டாருக்கு வாழ்த்துகள்!. பி.எல் தேனப்பன் கொஞ்சம் நேரம் மட்டுமே வந்தாலும் மனதில் நின்றுவிடுகிறார். நிகிலா விமல் அளவாக பேசி அளவாக அடித்துள்ளார். அவருக்கு வழக்கமான நாயகி கதாபாத்திரம் தான். படத்தில் வில்லன் யார் என்பது சஸ்பென்ஸ்!

திரைக்கதைக்கு இணையாகப் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கவனிக்க வைக்கிறது. ஜேக்ஸ் பிஜாய்யின் பின்னணி இசை ஒருவித பதட்டத்தை ஏற்படுத்துகிறது. படத்தில் பாடல்கள் இல்லை. மலைக்கோட்டையின் பின்னணியில் விரியும் திருச்சி, இரவுக் காட்சிகள், வில்லனைக் காட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் கலைசெல்வம் சிவாஜியின் உழைப்பு தனித்து தெரிகிறது. அதேபோல், ஸ்ரீஜித் சாரங்கின் எடிட்டிங் கூடுதல் பலம்.

‘கடமைனு வந்தா காமத்தை தள்ளி வைக்கனும்யா’ என்பது போன்ற ஜாலியான வசனங்களும், ‘பயந்தவங்கலாம் கோழை கிடையாது; பயந்து ஓடுறவன் தான் கோழை’ என்பது போன்ற சீரியசான வசனங்களும் கவனத்தை ஈர்க்கிறது.

மொத்தத்தில் போர் தொழில்; தமிழில் வந்த நல்ல கிரைம் திரில்லர்!

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com