கேலி கிண்டல்... வேதனைப்பட்ட பிரியா பவானி சங்கர்!
தன் மீதான கேலி கிண்டல்கள் தன்னை மிகவும் பாதித்ததாக நடிகை பிரியா பவானி சங்கர் கூறியுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். மேயாத மான் திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, பத்து தல, ரத்னம் என 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா மட்டுமல்லாது சென்னையில் உணவகம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பிரியா பவானி சங்கர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். பொதுவாகவே சமூக வலைதளங்களில் பிரியா பவானி சங்கர் நடித்தாலே அந்தப் படம் வெற்றி பெறாது என கிண்டல் செய்பார்கள். இது குறித்து வேதனை அடைந்த பிரியா பவானி சங்கர் நேர்காணல் ஒன்றில் பேசியதாவது:
"ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்தில் நடிக்கும் வாய்ப்பை யார்தான் வேண்டாம் என்று சொல்வார்கள்? படம் வெற்றியடையக் கூடாது என்ற எண்ணத்தில் படக்குழுவில் உள்ள யாரும் வேலை பார்க்க மாட்டார்கள்.
'இந்தியன் 2' படம் வெளியான பிறகு நான் பின்னடைவைச் சந்தித்தேன். இந்த படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன். கடந்த 5 வருடத்தில் வெளியான பெரிய ஹீரோக்களின் படங்களில் உங்களுக்கு நினைவில் இருக்கின்ற பெண் கதாபாத்திரங்கள் பத்திச் சொல்லுங்களேன்?
எழுதியிருக்கின்ற கதாபாத்திரத்தில்தான் நாம் நடிக்க முடியும். இந்தப் படத்தால் என்னை நோக்கி வைக்கின்ற கேலி விமர்சனங்கள் என்னைக் காயப்படுத்தாது. இம்மாதிரியான கேலி விமர்சனங்கள் எல்லோரையும் காயப்படுத்தும்தானே?
இனி வரும் காலங்களில் நல்ல படங்கள் பண்ணுவேன். ட்ரோல் பண்ணலாம். நானும் அந்த மாதிரியான விஷயங்களைப் பார்த்து சிரித்துவிட்டு கடந்துபோய்விடுவேன்.
சமூக ஊடகங்களில் என்னைக் கேலி செய்கிறவர்கள் நேரில் என்னிடம் அது குறித்து பேசவேமாட்டாங்க. சமூக ஊடகத்தில் தொடர்ந்து வன்மத்தை கொட்டுகிறார்கள். எந்த ஒரு நடிகரையும் 'இவராலதான் படம் சரியாகப் போகல இவர் பேட்லக்'ன்னு சொல்லமாட்டார்கள். இது முழுக்க முழுக்க பெண் வெறுப்பு சிந்தனைதான்." என ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.