’லாபத்துல பங்கு…இல்லைன்னா சங்கு’- நடிகர்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு

’லாபத்துல பங்கு…இல்லைன்னா சங்கு’- நடிகர்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு
Published on

‘நடிகர்களுக்கு இனியும் கோடிக்கணக்கில் சம்பளத்தைக் கொட்டிக்கொடுத்துவிட்டு நாங்கள் நடுத்தெருவில் நிற்கத் தயாராக இல்லை. படம் வித்தா துட்டு…இல்லைன்னா நடையக் கட்டு’ என்று தயாரிப்பாளர்கள் அதிரடி முடிவு எடுத்திருப்பதாக கோடம்பாக்கம் அதிர்கிறது.

திரையுலக சங்கங்கள், குறிப்பாக தயாரிப்பாளர் சங்கம் கோமா ஸ்டேஜுக்கு வந்திருக்கும் நிலையில் விஜய் ஆதரவுடன் அதற்கு உயிர் கொடுக்கும் முயற்சிகள் அரங்கேறத்துவங்கியுள்ளன. அதன் முதல் அடியெடுப்பாக முதல்வர் விஜய்க்கு பக்கம் பக்கமாக பிறந்தநாள் வாழ்த்து விளம்பரங்களை வாரி வழங்கியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். இதையடுத்து மிக விரைவில் முதல்வர் விஜய்யை சந்தித்து நலிந்துவரும் தயாரிப்பாளர்களைக் காப்பாற்ற உதவும்படி சில கோரிக்கைகள் வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அக்கோரிக்கைகளில் தலையாயது நடிகர்களின் சம்பள விவகாரம். படம் துவங்கும்போதே தங்கள் சம்பளத்தில் பெரும் பகுதியை அட்வான்ஸாகப் பெற்றுக்கொண்டு டப்பிங் முடிப்பதற்குள் மொத்தத் தொகையையும் தயாரிப்பாளர்களிடமிருந்து நடிகர்கள் கறந்துவிடுவது வாடிக்கை. இனியும் இந்நிலை தொடராமல் நடிகர்களும் பட வியாபாரத்தில் பங்கேற்று அதில் ஏற்படும் லாப நஷ்டங்களிலும் பங்கேற்றால்தான் சினிமா பிழைக்கும் என்கிற அறிவிப்பை தயாரிப்பாளர்கள் வெளியிட முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி இனி நடிகர்கள் முன்பணம் வாங்காமல், தங்களது சம்பளத்தை பட வியாபாரத்துக்கு முன்பே முடிவு செய்யாமல் நடிக்க முன்வரவேண்டும் என்பது தயாரிப்பாளர்களின் ஆசை.

இதன் முன்னோட்டமாக, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் விக்ரம் படத்துக்கு முன்பணம் வழங்கப்படவில்லை. இதே ஸ்டைலில் தொடங்கப்பட்டுள்ள இன்னொரு படம் ‘அயோத்தி’ இயக்குநர் மந்திரமூர்த்தியின் இயக்கத்தில் விஜய் ஆன்டனி நடிக்கும் குட்ஷோ நிறுவனப்படம்.

மேற்படி இரு படங்களிலுமே கதாநாயகர்களுக்கு நோ அட்வான்ஸ். சம்பளமும் நிர்ணயிக்கப்படவில்லை. படம் எவ்வளவுக்கு வியாபாரம் ஆகிறது என்பதைப் பொறுத்தே இவர்களுக்கு சம்பளம் என்று சொல்லப்படுகிறது.

இவ்விரு படங்களின் நடைமுறையை மற்ற தயாரிப்பாளர்கள் கெட்டியாகப் பற்றிக்கொள்கிறார்களா என்று பார்ப்போம்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com