புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் ரூ. 294 கோடி வசூலித்துள்ளதாக அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புஷ்பா 2 திரையரங்குகளில் நேற்று முன்தினம் வெளியானது.
படம் வெளியாவதற்கு முன்னதாகவே, ஓடிடி உரிமம், திரையரங்கு உரிமம் என இதுவரைக்கும் இல்லாத வகையில் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா ரூ. 400 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில், புஷ்பா 2 தற்போது இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
புஷ்பா-2 படத்தின் முதல் நாள் வசூலை தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் நாளில் ரூ.294 கோடி வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியில் மட்டும் ரூ.72 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது. இது ஷாருக்கானின் ஜவான் படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகம்.
முதல் நாள் வசூலில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரூ.222 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருந்த நிலையில், தற்போது புஷ்பா-2 முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.