கேரவனில் ரகசிய காமிரா… வீடியோ பார்த்து பயந்த ராதிகா! – நடந்தது என்ன?
நடிகைகள் உடைமாற்றுவதை ரகசிய காமிராவில் படம் பிடித்தனர் என நடிகை ராதிகா சரத்குமார் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் மலையாள நடிகை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட வழக்கில் கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா தலைமையிலான குழுவின் அறிக்கை கடந்த வாரம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பணிபுரியும் பெண்கள் பலரும் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் மோகன்லால் உள்பட பலரும் விலகினர். முக்கியமான பல பிரபலங்கள் மீது வழக்குப் பதிவும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் நடிகை ராதிகா சரத்குமார் நடிகர், நடிகைகள் ஓய்வெடுக்கும் வண்டியின் அறைகளில் காமிரா மறைத்து வைத்து விடியோ எடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து மலையாள சேனலுக்கு பேட்டியளித்த நடிகை ராதிகா சரத்குமார் கூறியதாவது:
நான் ஒருமுறை கேரளாவில் படப்பிடிப்பில் இருந்தேன். சிலர் கூட்டமாக ஏதோ விடியோ பார்த்து சிரித்துகொண்டிருப்பதை பார்த்தேன். அவர்கள் பார்த்துகொண்டிருந்தது வீடியோ என்ன என்பதை கடந்துசெல்லும்போதுதான் கவனித்தேன். படக்குழுவினரை உடனே அழைத்து அவர்கள் என்ன விடியோ பார்க்கிறார்கள் என்று விசாரிக்கக் கூறினேன்.
இதேபோல்தான் கேரவன்களின் கேமிரா வைக்கப்பட்டு பெண்கள் உடைமாற்றுவதை விடியோ எடுத்தார்கள். நானே அந்த விடியோக்களை பார்த்திருக்கிறேன். விடியோக்களை யார் எடுத்தார்கள் என யாருடைய பெயரையும் குறிப்பிட நான் விரும்பவில்லை.
வானத்தைப் பார்த்து துப்பினால் நம்மீதுதான் விழும் என்பதால் அவர்கள் பெயரை குறிப்பிட விரும்பவில்லை.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு கேரவன்களில் உடைமாற்ற பயம் ஏற்பட்டது. அதன் பிறகு நான் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகளில் சென்று உடைமாற்றுவேன். இந்த அமைப்பே தவறாக இருந்தது.
அந்தச் சம்பவத்துக்குப் பிறகு நான் மற்ற நடிகைகளிடம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் காமிரா குறித்து கூறினேன். அதற்குப் பிறகு நான் கேரவன் போகவே பயப்படுவேன். அது ஒன்றுதான் எங்களுக்கென ஓய்வெடுக்க, உடை மாற்ற, உணவு உண்ண இருக்கும் தனிப்பட்ட இடம். சில ஆண்கள் கேரவன்களில் இருந்து வெளிவருவதை பார்த்திருக்கிறேன். அதற்காக அவர்களை எச்சரித்துமிருக்கிறேன்.
கேரவன்களில் எதாவது காமிரா இருப்பதை பார்த்தால் செருப்பால் அடிப்பேன் என கேரவன்களை பார்க்கும் நபர்களிடம் கூறியிருக்கிறேன். நான் மிகவும் கோபமடைந்தேன். நான் பாதுகாப்பாக இருக்க கேரவன்களை தவிர்த்தே வந்தேன்.
நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கையை வெளியிட ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறதென எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. 46 ஆண்டுகளாக நான் திரைத்துறையில் இருக்கிறேன். என்னிடமும் சிலர் தவறாக நடக்க முயற்சித்துள்ளார்கள்.
இந்த மாதிரியான நேரங்களில் பெண்கள் முடியாது, இல்லை என்று தைரியமாக சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்போது எந்த ஆண்களும் எதுவும் சொல்லப்போவதில்லை. அதனால், பெண்கள்தான் அவர்களை காத்துக்கொள்ள வேண்டும் என்றார்,
நடிகை ராதிகா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல 200க்கும் அதிமான படங்களில் நடித்துள்ளார். சீரியல்களிலும் நடித்து வருகிறார்.