ரெஜினா: திரைவிமர்சனம்!
கணவனைக் கொன்றவர்களை தேடிப் பிடித்துக் கொல்லும் மனைவியின் கதையே ரெஜினா திரைப்படம்.
அம்மாவை சிறு வயதிலேயே இழந்த சுனைனா, தன்னுடைய தந்தை கண்முன்னே வெட்டிக் கொல்லப்படுவதை பார்க்கிறார். யாருமற்ற அனாதையாக வளரும் அவருக்கு ஆஸ்துமா. இப்படி மீளாத்துயரில் இருப்பவரை கரையேற்றுகிறார் காதல் கணவர். அப்படிப்பட்ட கணவரை, வங்கியில் நடந்த கொள்ளை சம்பவம் ஒன்றில் கொன்றுவிடுகிறார்கள். காதலனைக் கொன்றவர்களைக் கண்டுபிடிக்க காவல் துறையிடம் தொடர்ந்து சென்று கோரிக்கை வைக்கிறார். அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, சுனைனாவே களத்தில் இறங்குகிறார். கொன்றவர்களை அவர் எப்படி கண்டுபிடித்தார்? அவர்களை என்ன செய்தார் சுனைனா? என்பது தான் படத்தின் கதை.
பழி தீர்க்கும் கதைகளே தமிழ் சினிமாவின் கச்சாப் பொருள். புதுமையும், எதிர்பாராத திருப்பங்களும் கொண்ட பழி தீர்க்கும் கதைகளுக்கே மக்களிடம் வரவேற்பு அதிகம். ரெஜினா அப்படியொரு வாய்ப்பை தவறவிட்டிருக்கிறது. முதல் பாதி யூகிக்க முடியாத அளவுக்கு இருந்தாலும் இரண்டாம் பாதி அப்படி இல்லை.
உறவினர் வீட்டை விட்டு வெளியேறும் சுனைனா. கோவாவில் பார் நடத்தி வரும் ரித்து மந்த்ராவுடன் நெருங்கி பழகுகிறார். இருவருக்குமான உறவை வைத்து, இது லெஸ்பியன் கதையாக இருக்குமோ என்று யூகிப்பதற்குள், கதை பழைய நிலைக்குத் திரும்புகிறது. இயக்குநர் டொமின் டி சில்வா, சுனைனாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்து கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
கணவரை இழந்த சோகத்தில் தவிக்கும் சுனைனாவின் நடிப்பு நன்றாக இருந்தாலும், பழி தீர்க்கும் காட்சிகளில் அவரின் நடிப்பு சோபிக்கவில்லை. ஒற்றைப் பெண்ணாக காவல் துறையை, ரவுடிகளை அசால்டாக எதிர்கொள்கிறார். இது நம்பும்படியாக இல்லை.
ரித்து மந்த்ராவின் கணவராக நடித்திருக்கும் ஆதித்தன், ரவுடியாக வரும் தீனா, காவலராக வரும் விவேக் பிரசன்னா ஆகியோர் சிறப்பாகவே நடித்துள்ளனர். கம்யூனிஸ்ட்டாக காட்டப்படும் எழுத்தாளர் பவா செல்லதுரை குரலில் இருக்கும் வசீகரம் அவரது நடிப்பில் இல்லை.
சதிஷ் நாயர் பின்னணி இசை பலம். படத்தொகுப்பு, ஒளிப்பதிவும் சிறப்பாகவே உள்ளது.
கச்சிதமான திரைக்கதை, அழுத்தமான காட்சியமைப்பு இல்லாமல் ரெஜினா தடுமாறுகிறாள்.