தீபாவளி ரேஸில் அதிக எதிர்பார்ப்பில் படமாக இருந்தது மாரி செல்வராஜின் 'பைசன்'. அர்ஜூனா விருது பெற்ற கபடி விளையாட்டு வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை கருவாகக் கொண்டு எடுக்கப்பட்ட கதைதான் 'பைசன்- காளமாடன்'. படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
கபடி மீது கொள்ளை பிரியமாக இருக்கும் கிட்டானுக்கு (துருவ் விக்ரம்) இந்தியாவுக்காக கபடி விளையாட வேண்டும் என்ற தீரா ஆசையும் கனவும் இருக்கிறது. ஆனால், அவன் கனவுக்கு தடைபோடுகிறது சாதிய பாகுபாடு. கூடவே ஊர் பகையும் சேர்த்து துரத்த இதை எல்லாம் மீறி கிட்டானின் கபடி கனவு என்ன ஆனது என்பதுதான் 'பைசன்- காளமாடன்' படத்தின் கதை.
இதுவரை நடித்த முந்திய இரண்டு படங்களிலும் தனது சமூகவலைதளங்களில் சாக்லேட் பாய் இமேஜ் வைத்திருந்த துருவ் இந்த படத்தில் அதை எல்லாம் ஓரமாய் வைத்துவிட்டு முதல்பாதியில் காளமாடனாக கபடியில் களமாடி இருக்கிறார். விளையாட்டுக்காக முறுக்கேறிய உடம்பு, ஊர் சண்டையில் திமிறி எழுவது, சாதியை காட்டி விளையாட்டில் ஒதுக்கும்போது இயலாமையில் தவிப்பது என வசனம் அதிகம் பேசாமலேயே தேர்ந்த நடிகராக நடிப்பில் மிளிர்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் கனமான உணர்ச்சிகளை முகத்தில் வெளிக்கொண்டுவர தடுமாறுகிறார். கிட்டானின் தந்தை கதாபாத்திரத்தில் பசுபதி. தன்னுடைய கபடி ஆசையை புதைத்து மகனின் கபடி ஆசையையும் தடுப்பது, பின்பு மகனின் கபடி ஆட்டத்தை பார்த்து அவனுக்கு துணையாய் நிற்பது, சாதிய ஒடுக்குமுறையில் மருகுவது என ஒவ்வொரு ஃபிரேமிலும் அசத்தி இருக்கிறார். ரஜிஷா விஜயன், அனுபமா பரமேஸ்வரன், அமீர், லால் என ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
ஆனால், ரஜிஷா- அனுபமா கதாபாத்திரங்களை இன்னும் ஆழமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் எழுதியிருக்கலாம். அவர்கள் கதாபாத்திரம் படத்தில் இல்லை என்றாலும் எந்த குறையும் இல்லை என்ற ரீதியிலேயே இருக்கிறது.
மாரி செல்வராஜின் முந்தைய படங்களைப் போலவே, இந்தப் படத்திலும் பல ட்ரோன் காட்சிகளும் கருப்பு வெள்ளை காட்சிகளும் குறியீடுகளும் வந்து போகின்றன. சாதிய பாகுபாடுகளையும் அதிகாரத்தையும் வலிந்து திணிக்காமல் கதை போக்கில் வைத்ததும் இதை எல்லாம் மீறி தன் கனவை நோக்கி நகரும் இளைஞனையும் மையமாகக் கொண்டு அதில் தடம் மாறாமல் பயணித்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ். படத்தின் 1993 காலக்கட்டத்திற்கான ஒளிப்பதிவும், கலை இயக்கமும், நிவாஸ் கே பிரச்சன்னாவின் இசையும் படத்திற்கு பலம். அதேபோல அமீர்- லால் கதாபாத்திரங்கள் எழுதப்பட்ட விதமும் கவனிக்க வைக்கிறது.
மாரிசெல்வராஜின் பெரும்பாலான படங்களில் இருப்பது போலவே படத்தின் நீளமும் கதையை நீட்டி முழக்கி சொன்ன விதமும் இரண்டாம் பாதியில் அயர்ச்சியைத் தருகிறது. கதை ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரையிலும் சீரியஸ் டோனிலேயே நகர்கிறது. நீளத்தை குறைத்து, சீரியஸ் டோனில் இல்லாமல் இருந்திருந்தால் 'பைசன்' இன்னும் கூடுதலாக சீறியிருக்கும். இந்த சில குறைகளைத் தவிர்த்தால் மாரி செல்வராஜின் படங்கள் வரிசையில் 'பைசன்' படமும் தவிர்க்க முடியாத படைப்பாக வந்திருக்கிறது.