இன்றைய ராசிபலனில் எதிர்பாராத சோதனை என்று வந்தபோதே நான் கொஞ்சம் சுதாரித்திருக்க வேண்டும். விதி யாரை விட்டது ?
கதை, திரைக்கதை வசனம் என்று டைட்டில் போடப்பட்ட அப்படி எதுவுமே இல்லாத படம் தான் அஜித்தின் ’குட் பேட் அக்லி’ என்று சொன்னால் அது மிகையில்லை. உலக நாடுகளெல்லாம் கண்டு அஞ்சி நடுங்கும் கேங்ஸ்டராம் அஜித். மனைவி த்ரிஷாவுக்கு மகன் பிறந்ததை ஒட்டி திருந்தி வாழ நினைத்து சரண்டராகி 14 வருடங்களாக சிறையில் இருந்தபடி குத்தாட்டமும் குதூகலமுமாய் வாழ்கிறார். அப்புறம் ?
அப்புறம் என்று நீங்கள் கேட்டதால் ரொம்ப யோசிக்கிறோம். ஆனால் சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இருந்ததாக நினைவில்லை. அர்ஜூன் தாஸ் தொடங்கி உள்ளூர் முதல் உலக சண்டியர்கள் பலர் ‘அவரு யாரு தெரியுமா…அப்படிப்பட்டவரு… இப்பிடிப்பட்டவரு… லெஃப்ட் ஹேண்டால நூறு பேரைச் சுட்டவரு’ என்று தல புராணம் பாடியபடியே சுட்டுப்பட்டு, குத்துப்பட்டு, கதையால் குழப்பப்பட்டு மாண்டு போகிறார்கள்.
விடாமுயற்சியின் தொடர்ச்சியாக அஜித்தின் மனைவியாக அதே த்ரிஷா. கொஞ்சம் காதலித்து, கொஞ்சம் அஜித்தை நோக்கி கொக்கரித்து வந்துபோகிறார்.
‘சலங்கை ஒலி’ படத்தில் தன் அந்திமக் காலத்தில் இருக்கும் கலைஞன் கமல் தன் குறித்து புகழ்ந்துபேசுகிறவர்களை ‘இன்னும் கொஞ்சம்’ என்பது போல் நெகிழ்வார்.
இந்த ‘கு பே அ’ படம் முழுக்க மெயின் வில்லன்கள் தொடங்கி ஜூனியர் ஆர்டிஸ்டுகள் வரை அஜித்தை வானளாவ புகழ்ந்துகொண்டேயிருக்கிறார்கள்.
‘தல உனக்கு என்ன ஆச்சு தல ?’
புதுமை என்கிற பெயரில் ‘சகல கலாவல்லவனின் ‘இளமை இதோ இதோ’ பாடலை முழுமையாக ஒலிக்கவிட்டு 5 நிமிட நீளத்துக்கு ஒரு சண்டைக் காட்சி. வில்லனின் அறிமுகப்பாடலாக அதே இசைராசாவின் ‘ஒத்த ரூபா தர்றேன்’ பாடலும் இருமுறை இடம் பெறும்போது, இயல்பாக ஒரு சந்தேகம் வந்தது. ‘ஏம்பா இப்பக் கேட்டோமே அதுக்குப் பேரு மியூசிக்கு. பின்னணி இசைங்கிற பேர்ல இந்தப் படத்துக்கு வாசிச்சிருக்கீங்களே அதுக்கு பேரு என்னப்பா ? இப்படி கேட்டா பூமர் அங்கிள்னு சொல்லி எஸ்கேப் ஆவீங்க. இருக்கட்டும். இருக்கட்டும்.
கதையில் அங்காங்கே சில பழைய பாடல்கள் ரீமிக்ஸ் பண்ணப்பட்டு மிக்ஸியில் அரைக்கப்பட்ட நிலையில் சிம்ரன், அஜித் காம்பினேஷன் காட்சிகள் நடந்துகொண்டிருக்கும்போது அஜித்தை நோக்கி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், “ சார் இங்கே உங்களுக்கும் சிம்ரனுக்கும் ஒரு டூயட் சாங் வச்சிரலாமா “ என்று கேட்க, அதற்கு அஜித் டென்சனாகி டைரக்டரை நோக்கி, ”வில்லன்களை போடுறதுக்கு முன்னாடி, முதல்ல உன்னைத் தூக்கணுண்டா ‘’என்பார். கதை கேட்ட சமயத்திலேயே அஜித் அந்த காரியத்தை செய்திருந்தால் அவரது ரசிகர்களாவது உயிர் தப்பியிருப்பார்கள்.
குட் பேட் அக்லி... வெரி பேட்லி. (அஜித் ரசிகர்கள் மன்னிச்சூ...)