REWIND 2025: ’பேட் கேர்ள்’ முதல் ‘லோகா’ வரை... கவனம் ஈர்த்த ‘ஹீரோயின்’ படங்கள்!

REWIND 2025: ’பேட் கேர்ள்’ முதல் ‘லோகா’ வரை... கவனம் ஈர்த்த ‘ஹீரோயின்’ படங்கள்!
Published on

கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிளாக் அண்ட் வொயிட் காலத்தில் தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. ஆனால், பின்பு கமர்ஷியல் ரூட் என்கிற பேரில் நாயக வழிபாட்டில் சிக்கியது தமிழ் சினிமா. அந்த டிரெண்ட் தற்போது குறைந்து கதாநாயகிகளை மையப்படுத்திய படங்களும் தொடர்ச்சியாக வெளியாகி அவை வெற்றியும் பெறுவது சினிமாவிற்கு ஆரோக்கியமான போக்கு. அப்படி இந்த வருடம் வெளியாகி கவனம் ஈர்த்த மற்றும் பேசுபொருளான ‘ஷீரோயின்’ படங்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

பேட் கேர்ள்

கட்டுப்பாடான குடும்பப்பிண்ணனி கொண்ட ரம்யாவுக்கு பள்ளிப் பருவத்தில் சக தோழனுடன் ஈர்ப்பு வருகிறது. குடும்ப சூழ்நிலையால அந்த உறவு முறிய ரம்யாவின் ஒவ்வொரு கட்டத்தில் வரும் காதலும் ரம்யா மற்றும் குடும்பத்தின் உளவியல் சிக்கலை பற்றி பேசிய படம்தான் ‘பேட் கேர்ள்’. இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வர்ஷா இந்தப் படத்தை இயக்கி இருந்தார். ஆண்களின் பதின்பருவ காதலையும் அதன் பின்னான உளவியல் சிக்கலையும் பேசிய பலநூறு தமிழ் படங்களை பார்த்திருக்கிறோம். அத்திபூத்தாற்போலதான் பெண்ணின் பதின் பருவ காதலை பேசும் படங்கள் வரும். அப்படி ஒன்றாக வெளியானதுதான் ‘பேட் கேர்ள்’. படத்தின் சென்சார் கத்தரி காரணமாகவும் கதையில் தொக்கி நிற்கும் கேள்விகளாலும் படம் முழுமையடையாமல் தோன்றினாலும் இந்த வருடத்தின் ஷீரோயின் படங்களில் ‘பேட் கேர்ள்’க்கு முக்கிய இடமுண்டு.

தி கேர்ள் ஃபிரண்ட்

குடும்பம், காதல், அன்பு என்ற பெயரில் பெண்கள் எப்படி ஒரு உறவில் ஒடுக்கப்படுகிறார்கள், அவர்களுக்கான சுதந்திர வெளி எப்படி குறுக்கப்படுகிறது என்பதை நெற்றியடியாக சொன்ன திரைப்படம்தான் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் இயக்கத்தில் வெளியான ‘தி கேர்ள் ஃபிரண்ட்’ திரைப்படம். ’அல்லு அர்ஜூன், விஜய் போன்ற நடிகர்கள் ராஷ்மிகாவை வெறும் நடனத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். அந்தளவுக்கு நடிப்பில் இந்தப் படத்தில் மிளிர்ந்துள்ளார் ராஷ்மிகா’ போன்ற கருத்துகளையும் இணையவெளியில் பார்க்க முடிந்தது. பரந்துபட்ட இந்த உலகில் உனக்கான சுதந்திரத்தை கல்வியும் பொருளாதாரமும் கொடுக்கும். அவையே தேவையில்லாத டாக்ஸிக் உறவுகளில் இருந்து மீள உதவும் என பேசியிருக்கும் இந்தப் படத்தை நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.

லோகா

சூப்பர் ஹீரோ, ஷீரோ ஹாலிவுட் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்த்து பழகிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நம் மண்ணின் கதையை சூப்பர் ஷீரோயின் சப்ஜெக்ட்டாக எடுத்தால் எப்படி இருக்கும்? அப்படியான கதைதான் ‘லோகோ’. நல்லவர்களுடன் துணை நின்று தீயவர்களை அழிக்கும் வனநீலியை இந்த காலத்திற்கு ஏற்றபடி கொண்டு வந்திருந்தார்கள். கதைக்கு ஏற்ற ஆக்‌ஷன், உடல் உழைப்பு என ஆல் ஏரியாவிலும் கல்யாணி பிரியதர்ஷன் ஸ்கோர் செய்திருந்தார். மலையாளத்திலும் தமிழிலும் ரூ. 100 கோடி வசூல் கடந்தது இந்தப் படம்.

அங்கம்மாள்

உடை என்பதை வைத்து பல தலைமுறைகளாக பெண்கள் மீது வன்முறையும் ஒடுக்குமுறையும் கட்டவிழ்த்து விடப்படுகிறது. அப்படியான ஒரு தலைமுறை பெண்ணை பற்றி பேசிய படம்தான் ‘அங்கம்மாள்’. நடுத்தர வயது பெண்ணாக பிடிவாதம், தைரியம் என நடிப்பில் கலக்கி இருந்தார் கீதா கைலாசம். எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ சிறுகதையை ’அங்கம்மாள்’ படம் ஆக்கியிருந்தார் இயக்குநர் விபின்.

ஆண் பாவம் பொல்லாதது

திருமண உறவில் ஆண்களின் கஷ்டத்தை சொல்கிறேன் அதன் வழியே பெண்ணியமும் பேசுகிறேன் பேர்வழி என சொதப்பலாக வந்த படம்தான் ‘ஆண் பாவம் பொல்லாதது’. பெண்ணியத்தை எப்படி காட்டக்கூடாது என்பதற்கு உதாரணமாக அமைந்தது இந்தப் படம். பெண்ணியத்தை பேசும் சில காட்சிகள் நியாயம் சேர்ப்பதாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தாலும் ஒட்டுமொத்தமாக சொதப்பியது இந்தப் படம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com