
ஒவ்வொரு வருடமும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என சிறந்த புதுவரவுகள் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வகையில், இந்த வருடம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் சிறந்த புதுமுக இயக்குநர்கள் யார் யார் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அபிஷன் ஜீவிந்த்
நடிகர்கள் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த வருட தொடக்கத்தில் வெளியான திரைப்படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி கதையால் கவனம் ஈர்த்து பாக்ஸ் ஆஃபிஸ் நிரப்பியது. சொந்த மண்ணில் ஏற்படும் பிரச்சினையால் கடல் கடந்து இந்தியா வருகிறது சசிகுமார், சிம்ரனின் குடும்பம். வந்த இடத்தில் எல்லோருடனும் சகஜமாகப் பழகி வாழ்க்கை தொடங்கும்போது ஒரு பிரச்சினை அவர்களை சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதில் இருந்து எப்படி சசிகுமார் குடும்பம் மீண்டது என்பது கொஞ்சம் சீரியஸாகவும் நிறைய நகைச்சுவை கலந்தும் கொடுத்திருந்தார் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இயக்கத்தில் கலக்கியதோடு அந்தப் படத்தில் கவனிக்கத்தக்க கதாபாத்திரம் ஒன்றில் நடித்தும் பாராட்டுகள் பெற்றார். இப்போது அடுத்தடுத்து படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் அபிஷன் ஜீவிந்த் தமிழ் சினிமாவில் இந்த வருடத்தின் நல்வரவு.
கீர்த்தீஸ்வரன்
இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கீர்த்தீஸ்வரன் ‘டியூட்’ படம் மூலம் அறிமுகமானார். அறிமுகமான முதல் படத்திலேயே ரூ. 100 கோடி கலெக்ஷன் அள்ளி கண்டெண்ட் கிங் என்பதை நிரூபித்தார். காதல், நட்பு, கல்யாணம், காமெடி, தாலி செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கமர்ஷியல் கலவையாக ‘டியூட்’ இருந்தாலும் எல்லா தலைமுறைகளுக்கும் ஏற்ற விஷயங்களை சொல்லியதோடு ஆணவக்கொலையை போற போக்கில் பொட்டில் அடித்தாற் போல இந்த கமர்ஷியல் கதையில் புகுத்தி சொல்லியதிலும் தனித்து நின்றார் கீர்த்தீஸ்வரன். பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் என நடிகர்களின் தேர்ந்த நடிப்பும் கதைக்கு பலமூட்ட இந்த வருடத்தின் கலெக்ஷன் அள்ளிய படங்கள் பட்டியலில் சேர்ந்தது ’டியூட்’. சிலருக்கு படம் மீது மாற்று கருத்துகள் இருந்தாலும் இந்த வருடத்தின் நம்பிக்கையூட்டும் அறிமுகம் என்ற பட்டியலில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் நிச்சயம் இடம்பெறுவார்.
வர்ஷா பரத்
இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வர்ஷா பரத் அறிமுகமான படம் ‘பேட் கேர்ள்’. பலமுறை வெளியீடு தள்ளிபோய், சென்சாரில் பல கத்தரி வாங்கி எதிர்பார்ப்போடு வெளியான படம். பெண்ணின் பதின்பருவ காதல், குடும்பத்தின் கட்டுப்பாடான சூழல், அதன் பின் நடக்கும் விஷயங்களையும் பேசிய இந்தப் படம் பல விவாதங்களையும் முன்னெடுத்தது. தமிழ் சினிமாவில் பெண் இயக்குநர்கள் குறைவு என்ற குறை நெடுநாளாக இருக்க, அதை தீர்க்கும் விதமாக வந்த வெகுசில பெண் இயக்குநர்களில் வர்ஷா பரத் இந்த வருடத்தில் கவனம் ஈர்த்தார்.
லோகேஷ் அஜ்லிஷ்
சில சறுக்கல்களும் லாஜிக் ஓட்டைகளும் இருந்தாலும் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபர க்ரைம் த்ரில்லர் திரைக்கதையால் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டது லோகேஷ் அஜ்லிஷ் இயக்கிய ‘லெவன்’ திரைப்படம். ஒரே மாதிரியாகக் கொலை செய்யப்படும் சீரியல் கில்லிங் வழக்கை நடிகர் நவீன் சந்திரா துப்பறிந்து முடிச்சை அவிழ்ப்பதுதான் படத்தின் ஒன்லைன். அதை வித்தியாசமான ஃபிளாஷ்பேக்குடன் கதையோட்டத்தை விட்டு விலகாமால் பார்வையாளர்களை ஒன்ற வைத்ததில் வெற்றி பெற்றார் இயக்குநர் லோகேஷ் அஜ்லிஷ். திரையரங்குகளை விட ஓடிடி தளத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து இந்த வருடத்தில் பேசுபொருளானது இந்தப் படம்.
தமிழ் தயாளன்
செயற்கை தொழில்நுட்பம் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற நிலைநோக்கி நகரும் இந்தக் காலத்திலும் கூட, இன்னும் சாலை வசதியோ ஆம்புலன்ஸ் வசதியோ இல்லாத மலைக்கிராமம்தான் கொடைக்கானலின் ’கெவி’. அங்கு வசிக்கும் மலையன் – மந்தாரை தம்பதி அடிப்படை வசதிகள் கூட பூர்த்தியடையாத அந்த கிராமத்தில் தங்கள் குழந்தையை பெற்றெடுக்க என்ன மாதிரியான கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை எந்தவிதமான செயற்கை பூச்சும் சினிமாத்தனமும் இல்லாமல் கொடுத்து நெகிழ வைத்தார் அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன். கமர்ஷியல் கதைகள், பாக்ஸ் ஆஃபிஸ் என நட்சத்திர நடிகர்களும் பல முன்னணி இயக்குநர்களும் ஓடிக்கொண்டிருக்க நிறுத்தி நிதானமாக நிதர்சனத்தை பேசியதில் இந்த வருடம் கவனிக்க வைத்தார் இயக்குநர் தமிழ் தயாளன்.