
மாஸ் ஹீரோ படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு திருவிழா. சினிமாவிற்கோ பெரும் வியாபாரம். படத்தின் போஸ்டரில் இருந்து பாடல், ஸ்நீக் பீக், ஓடிடி உரிமம், சேட்டிலைட் உரிமம் என அனைத்துமே பணம்தான். அப்படி வருடாவருடம் போலவே இந்த வருடமும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பல மாஸ் ஹீரோ படங்கள் வெளியாயின. அவற்றில் எதிர்பார்ப்புகளை ஏற்றி ஏமாற்றிய பெரிய படங்கள் என்னென்ன, அதன் காரணம் என்ன என்பது பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
விடாமுயற்சி:
இப்போ அப்போ என்று படத்தின் வெளியீடு இழுத்துக் கொண்டே போய் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு வெளியான படம் நடிகர் அஜித்தின் ‘விடாமுயற்சி’. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துடன் த்ரிஷா, அர்ஜூன் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். விவாகரத்து பெறும் மனநிலையில் இருக்கும் அஜித்- த்ரிஷா ஒரு நாள் காரில் பயணப்படுகிறார்கள். அப்போது திடீரென த்ரிஷா காணாமல் போக அதன் பின்னான பிரச்சினைகளும் தீர்வும்தான் கதை. வில்லனிடம் அடிவாங்குவது, பில்டப் வசனங்களையும் காட்சிகளையும் குறைத்தது என தனது வழக்கமான கதை பாணியில் இருந்து சற்றே விலகி அஜித் நடித்திருந்த படம்தான் ‘விடாமுயற்சி’.
இருந்தாலும் அஜர்பைஜான் லொகேஷன் போலவே கதையும் பயங்கர வறட்சியாக இருந்து. சுவாரஸ்யமான காட்சிகளும் திருப்பங்களும் இல்லாமல் இரண்டாம் பாதியில் வழக்கமான ஹீரோ- வில்லன் முடிவுக்குள் கதை சிக்கியதும் படத்தின் தோல்விக்கு முக்கியமான காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ
கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘ரெட்ரோ’. சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் இடம்பெற்றிருந்த ‘கனிமா…’ பாடல் ஹிட் ஆன அளவுக்கு படம் ஹிட்டாகாமல் போக முக்கிய காரணமாக அமைந்தது கார்த்திக் சுப்பாராஜின் ஒரே பாணியிலான கதை. முழுமை பெறாத காட்சிகளும் ஒருக்கட்டத்தில் வழக்கமான ஹீரோயிச பாணியில் கதை சிக்கிக் கொண்டதும் ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு பெரும் அடியாக விழுந்தது.
தக் லைஃப்
கிட்டத்தட்ட 30 வருடங்களுக்குப் பிறகு மணி ரத்னம்- கமல்ஹாசன் கூட்டணி இணைந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. ‘நாயகன்’ படத்தை போல கல்ட் கிளாசிக் படமாக வரும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்பு வைத்தது இந்த மணிரத்னம்- கமல் கூட்டணி. எதிலும் புதுமை தனித்துவமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கமல் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த பின்பு கடமைக்கென்றே சினிமாவில் நடிக்கிறாரா என்ற ஐயத்தை இணையவெளியில் சமீபகாலமாக பார்க்க முடிந்தது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக அமைந்தது ‘தக் லைஃப்’.
வழக்கொழிந்த கேங்க்ஸ்டர் கதை, தேவையில்லாத ரொமான்ஸ் காட்சிகள், மாஸ் பில்டப் என இந்த வட்டத்திற்குள் சிக்கி சின்னாபின்னமானது இது. லாஜிக் மிஸ்டேக்கோடு படம் எடுக்கலாம் லாஜிக்கே இல்லாமல் படம் எடுத்தா எப்படி பாஸ்?
கூலி:
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் முதல் முறையாக கூட்டணி சேர்ந்த படம் ‘கூலி’ என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது. படத்திற்கு பான் இந்தியா மைலேஜ் ஏற்ற அமீர்கான், நாகர்ஜூனா, உபேந்திரா, செளபின் என எல்லா மாநிலத்தில் இருந்தும் ஒரு சூப்பர் ஸ்டாரை களமிறக்கினார் லோகேஷ். இது போதாதது என்று சத்யராஜ், ஷ்ருதி ஹாசன், பூஜா ஹெக்டேவும் நடித்தார்கள்.
அதீத வன்முறை காட்சிகள் இருக்கிறது என லோகேஷ் படங்கள் மீது தொடர்ச்சியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அதை எல்லாம் அவர் கண்டுகொள்வதாக இல்லை. திணிக்கப்பட்ட வன்முறை, பழைய பழிவாங்கல் என திரைக்கதையில் பெரிதாக சுவாரஸ்யம் இல்லாமல் போனது. இதில் ’ரசிகர்கள்தான் அதீத எதிர்பார்ப்பு வைத்தார்கள். நான் எங்கும் பில்டப் கொடுக்கவில்லை’ என படத்தின் தோல்விக்கான காரணத்தை ரசிகர்கள் மீது சுமத்தினார் இயக்குநர் லோகேஷ். படத்தின் ஒரே ஆறுதல் ’மோனிகா பெல்லூசி…எறங்கி வந்தாச்சி…’
இட்லி கடை
மாஸ் ஹீரோக்கள் எல்லோரும் கத்தி, கடப்பாறை என வன்முறையில் குதிக்க சைலண்ட்டாக இட்லி கடையை விரித்தார் நடிகர், இயக்குநர் தனுஷ். பாரம்பரியத்தை மீட்போம் என முழங்கிய இந்தக் கதை பார்வையாளர்களை பல நூறாண்டுகளுக்கு பின்னிழுத்தது. பழமையை புகழ்ந்து பேசுவது கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறை சிக்கல்களை புரிந்து கொள்ளாமல் இஷ்டத்திற்கு நீட்டி முழக்கியதால் வியாபாரம் ஆகாமல் போனது இந்த ‘இட்லி கடை’.
என்னதான் மாஸ் ஹீரோ படங்களுக்கான எதிர்பார்ப்பும் கொண்டாட்ட மனநிலையும் ரசிகர்களுக்கு இருந்தாலும் பெரும்பாலான பார்வையாளர்கள் தங்களுடன் இணைத்து கொள்ளும் எளிய கதைகளையே திரையில் எதிர்பார்க்கிறார்கள். அதிலும் ஓடிடி வளர்ச்சிக்குப் பிறகு மக்களின் மனநிலையில் பெரிய மாற்றம் வந்திருப்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு நல்ல கதையோடு ஹீரோயிச பில்டப்புகளை விட்டு வெளியே வருவது மாஸ் ஹீரோக்களுக்கும் தமிழ் சினிமாவிற்கும் நல்லது.