REWIND 2025: சிறிய பட்ஜெட்- பெரிய லாபம்… தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள் என்னென்ன?

REWIND 2025: சிறிய பட்ஜெட்- பெரிய லாபம்… தமிழ் சினிமாவை கலக்கிய படங்கள் என்னென்ன?
Published on

இன்றைய தேதியில் வெளியாகும் படங்களின் திரையரங்க வசூலே படத்தின் வெற்றியை தீர்மானிக்கும் பிரதான காரணியாக இருக்கிறது. அதிலும் இந்த வருடம் சிறிய பட்ஜெட்டில் வெளியான பல படங்கள் பட்ஜெட்டை விட அதிகம் வசூல் செய்து, தமிழ் சினிமாவுக்கு புத்துயிர் பாய்ச்சியது. அப்படியான படங்களின் பட்டியலை ‘ரீவைண்ட் 2025’ பார்க்கலாம்.

‘குடும்பஸ்தன்’ திரைப்படம்:

குடும்ப சூழ்நிலையாலும், சமூக நெருக்கடியாலும் பரிதவிக்கும் ஒரு குடும்பஸ்தனுக்கு வேலையும் போய்விட கடன் மேல் கடன் வாங்கி அல்லாடும் கதைதான் ‘குடும்பஸ்தன்’ திரைப்படம். மணிகண்டன், சாந்வி மேக்கஹனா நடிப்பில் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியானது ‘குடும்பஸ்தன்’. கதையின் ஒன்லைன் கேட்க சீரியஸாக இருந்தாலும் அதில் நடைமுறையோடு ஒத்துப்போகும்படியும் நகைச்சுவையாகவும் அலுப்பூட்டாமல் கொடுத்ததில் ரசிகர்களுக்குப் பிடித்துப் போனது ‘குடும்பஸ்தன்’. ரூ. 8 கோடி பட்ஜெட்டில் உருவான படத்தின் கதை சக்கை போடு போட்டு கிட்டத்தட்ட ரூ. 28 கோடி வசூல் பெற்று வெற்றி பெற்றது.

’டிராகன்’ திரைப்படம்:

‘லவ் டுடே’ படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான படம் ‘டிராகன்’. கல்லூரியில் அரியர் மேல் அரியர் வைத்து மோசமான முன்னுதாரணமாக விளங்கிய ‘டிராகன்’ கல்லூரி முடிந்த பின்பு என்ன ஆனான், அவனது வாழ்க்கை எப்படி திசை மாறியது என்பதுதான் ‘டிராகன்’. அஷ்வத் மாரிமுத்துவின் அட்டகாசமான கதைக்கு நியாயம் சேர்க்கும் விதமாக முதல் பாதியில் எரிச்சலூட்டும் உடல்மொழியுடனும் இரண்டாம் பாதியில் பொறுப்பான பையனாகவும் நடிப்பில் வெரைட்டி காட்டினார் பிரதீப். கதாநாயகி கயாடு லோஹரும் கதைக்கு எனர்ஜி ஏற்ற ரூ. 35 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் ரூ. 150 கோடி கலெக்ஷன் அள்ளியது.

’டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம்:

சொந்த மண்ணில் ஏற்படும் பிரச்சினையால் கடல் கடந்து இந்தியா வருகிறது சசிகுமார், சிம்ரனின் குடும்பம். வந்த இடத்தில் எல்லோருடனும் சகஜமாகப் பழகி வாழ்க்கை தொடங்கும்போது ஒரு பிரச்சினை அவர்களை சிக்கலில் மாட்டிவிடுகிறது. அதில் இருந்து எப்படி சசிகுமார் குடும்பம் மீண்டது என்பது கொஞ்சம் சீரியஸாகவும் நிறைய நகைச்சுவை கலந்து கொடுத்திருந்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். சிறுசிறு குறைகளை மறந்து திரையரங்குகளில் ரசிகர்களை ரகளையாக சிரிக்க வைத்து வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம் உருவானது என்னவோ கிட்டத்தட்ட ரூ. 8 கோடி பட்ஜெட்டில்தான். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 50 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் ஹிட் லிஸ்ட் படங்கள் பட்டியலில் இடம்பிடித்தது.

’மாமன்’ திரைப்படம்:

தன் சொந்தக் கதையை பட்டி டிக்கரிங் பார்த்து, செண்டிமெண்ட் கொஞ்சம் எக்ஸ்டா தூவி நடிகர் சூரி எடுத்த கதைதான் ‘மாமன்’. பிரஷாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடித்திருக்க, சூரியின் அக்கா கதாபாத்திரத்தில் ‘லப்பர் பந்து’ புகழ் ஸ்வாசிகா நடித்திருந்தார். அக்கா பையன் மீது முறை மாமனாக சூரி பாசம் பொழிய, அந்த விஷயமே தனது குடும்ப வாழ்க்கையை எப்படி தடம் புரள வைக்கிறது என்பதுதான் ‘மாமன்’ திரைப்படத்தின் கதை. கலவையான விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு வந்திருந்தாலும் ரூ. 10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் கிட்டத்தட்ட ரூ. 50 கோடி வசூல் செய்து தயாரிப்பாளர்களை தப்பிக்க வைத்தது.

‘தலைவன் தலைவி’ திரைப்படம்:

பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவான படம் ‘தலைவன் தலைவி’. திருமணம் ஆன கணவன் – மனைவிக்குள் வரும் பிரச்சினைகளும் அதன் பின்னான சமாதானங்களுமே கதையில் பிரதானம். படம் பார்க்கப் போகும்போதும் காதடைத்துக் கொள்ள கொஞ்சம் பஞ்சையும் சேர்த்து எடுத்துப் போங்கள் என்று படத்தின் வெளியீட்டில் விளம்பரப்படுத்தியிருந்தால் மக்கள் கொஞ்சம் உஷாராகி இருப்பார்கள். அந்தளவுக்கு டால்பி எஃபெக்ட்டில் படம் முழுக்க காதில் ரத்தம் வராத குறையாக கத்தி தீர்த்தார்கள் தலைவனும் தலைவியும் கூடவே ரசிகர்களுக்கு தலைவலியும். கலவையான விமர்சனஙக்ளைப் பெற்ற இந்தப் படம் ரூ. 25 கோடி உருவாகி கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வசூலை நெருங்கியது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com