சத்திய சோதனை திரைப்படம்
சத்திய சோதனை திரைப்படம்

சத்திய சோதனை: திரைவிமர்சனம்!

‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமான சுரேஷ் சங்கையாவின் அடுத்த படைப்பாக வெளியாகி உள்ளது ‘சத்திய சோதனை’. ஒரு கொலை அதையொட்டி நடைபெறும் காவல்துறை விசாரணையை செம ரகளையாக எடுத்துள்ளார் இயக்குநர்.

தென்மாவட்டத்தில் உள்ள பேயம்பட்டி கிராமம் தான் படத்தின் கதைக்களம். கழுத்து நிறைய நகைநட்டுடன் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்று திரும்புகிறார் ஒருவர். அவரை வழிமறித்து சில இளைஞர்கள் கொன்று விடுகின்றனர். இறந்தவரின் உடலைக் கைப்பற்றும் காவல் துறைக்கு, அவர் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனது தெரிய வருகிறது. விசாரணையில் பிரேம்ஜி, ஒரு வயதான பாட்டி, நான்கு கொலைகாரர்கள் சிக்க, கதை கலகலப்பாக நகர்கிறது. லவட்டி சென்ற கிலோ கணக்கான நகையை காவல்துறை கண்டுபிடித்ததா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை

இயக்குநர் சுரேஷ் சங்கையா மிக எளிமையான கதையை அட்டகாசமான காமெடி திரைப்படமாக எடுத்துள்ளார். முதல் பாதி கொஞ்சம் மெதுவாக வேகமெடுத்தாலும் இரண்டாம் பாதி பட்டையைக் கிளப்புகிறது. தென்மாவட்ட வட்டார வழக்கை காமெடிக்கு கச்சிதமாகப் பயன்படுத்தி உள்ளார் இயக்குநர். உரையாடல்கள் மூலமே முழு படமும் நகர்கிறது.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள பிரேம் ஜிக்கு கதையில் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை என்றாலும், யதார்த்தமாக நடித்துள்ளார். நாயகி ஸ்வயம் சித்தா ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இருவர் பட்டைய கிளப்ப, அவர்களுக்கு சவால் விடும்படி நடித்துள்ளார் மூதாட்டி ஒருவர்.

‘சொந்த கையா இருந்தாலும் சோலினு வந்துட்டா சோந்தங்கையும் நொட்டாங்கையா மாறிடும்’ என்பது போன்ற பழமொழிகளுக்கு படத்தில் பஞ்சமில்லை. ஒரு காட்சியில், ‘உன் பேரு என்னப்பா’ என போலீஸ் கேட்க, ‘வைரமுத்து’ என கொலையாளி பதில் சொல்ல. ‘பேரு நல்லாதான் இருக்கு. ஆனா உன் நடவடிக்கை சரியில்லயே’ என போலீஸ் சொல்லும் போது அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து போனது. வசனங்களைக் கதை நிகழும் பகுதிக்கு ஏற்ப எழுதியுள்ளார் இயக்குநர்.

படம் நகைச்சுவை டிராமா என்பதால் சில தர்க்க பிழைகளை ஈசியாக கடந்துவிட முடிகிறது. ரகுராமின் பின்னணி இசை ஓகே ரகம். ஒளிப்பதிவாளர் சரண் நேர்த்தியான உழைப்பைக் கொடுத்துள்ளார். ஆற்றின் நடுவே, ஒருவரைக் கொலை செய்வதற்காக ரவுடிகள் சூழ்ந்து கொள்வார்கள். அந்தக் காட்சியை அட்டகாசமாக படமாக்கி இருந்தார்.

முதல் பாதி திரைக்கதையை தவிர்த்து படத்தில் பெரிதாக குறையில்லை. மொத்தத்தில் ‘சத்திய சோதனை’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்.

logo
Andhimazhai
www.andhimazhai.com