செய்யும் வேலை மீது  நமக்கு பயம் வேண்டும்!

செய்யும் வேலை மீது  நமக்கு பயம் வேண்டும்!
Published on

இயக்குநரின் கற்பனைகளை கண்முன்னே தத்ரூபமாக கொண்டு வந்து பார்வையாளர்களுக்கு திரையில் மறக்க முடியாத சினிமா அனுபவத்தை தருவதே கலை இயக்கத்தின் பிரதானம். இந்தத் துறையில் பல வருடங்களாக கோலோச்சியவர் கலை இயக்குநர் தோட்டா தரணி.

‘ராஜ பார்வை’, ‘மெளனராகம்’, ‘நாயகன்’ என பல கல்ட் கிளாசிக் படங்களில் இருந்து கமர்ஷியலாக வெற்றி பெற்ற ‘சந்திரமுகி’, ‘பொன்னியின் செல்வன்’ வரை பல படங்களில் கலை இயக்கத்தில் புகுந்து விளையாடியவர். பத்ம, தேசிய விருது, தமிழ்நாடு அரசு விருது என பல உயரிய விருதுகளுக்கு சொந்தக்காரரான இவருக்கு சமீபத்தில் பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது வழங்கப்பட்டது தமிழ் சினிமா துறைக்கே பெருமைமிகு தருணம். கடந்த டிசம்பர் மாதம் 76 வயதை நிறைவு செய்தவருக்கு ‘அந்திமழை’ வாசகர்கள் சார்பாக வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசினோம்.

”செவாலியே விருது பெற்றது எனக்கு த்ரில்லிங்கான அனுபவம். சின்ன விருதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் நம் வேலைக்கான அங்கீகாரம் என்பது மகிழ்ச்சிதான். அதேபோல, சமீபத்தில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நான் வரைந்த பெரியார் உருவப்படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தது எனக்கு நெகிழ்வான தருணம். பெரியார் ஓவியம் வரைய வேண்டும் என முதல்வர் தரப்பில் கோரிக்கை வைத்தனர். நம்முடைய சிறந்த படைப்பைக் கொடுப்போம் என்று ஒரே சிட்டிங்கில் ஆறுமணி நேரத்திலேயே பெரியார் உருவத்தை வரைந்துவிட்டேன்” என்றார்.

திரைத்துறையில் பல ஆண்டுகளாக கலை இயக்கத்தில் கோலோச்சி வருபவரிடம் கலை இயக்கம் இந்த காலக்கட்டத்தில் எந்தமாதிரியான மாற்றங்களை சந்தித்துள்ளது என்ற கேள்வியை முன்வைத்தோம், “அதுபற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரு புத்தகமே எழுதலாம். தற்போதைய செயற்கை தொழில்நுட்பம் வரையிலான அப்டேட்டை தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால், நம்முடைய அடிப்படை என்னவோ அதில் உறுதியாக இருக்க வேண்டும். இன்று வரையுமே நான் கணினி உபயோகப்படுத்தியதில்லை. பேப்பரும் பென்சிலும்தான். 12 வயதில் என் தந்தை ஓவியம் வரைய எனக்கு 15 ரூபாயில் வாங்கிக் கொடுத்த மேசையை தான் இப்போது வரை பயன்படுத்துகிறேன். சினிமாவில் எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்தால்தான் நல்லது. நான் பெரியவன், நீ பெரியவன் என்ற எண்ணம் இருந்தால் அது சரிவராது. நாம் செய்யும் வேலை மீது நமக்கு பயம் வேண்டும். சின்னதாக குடிசை செட் போட்டாலும் எனக்கு பயம் இருக்கும்” என்றார். 

“அஞ்சலி படத்திற்காக நாங்கள் வெளியே போட்ட செட் ஐந்து நாட்களில் முடித்தோம். அது பலரது பாராட்டுகளைப் பெற்றது. நாயகன் படத்தில்  ‘நான் சிரித்தால் தீபாவளி…’ பாடலுக்காக செட் அமைக்க வேண்டும். அந்த இடத்தில் இருந்த ஒரு மரத்தை சுற்றி கானா பஜானா செட் அமைத்துவிட்டேன். மாலை ஆறு மணிக்கு படப்பிடிப்பு. மணி ரத்னம் என்னை எப்போதும் தோட்டா பேட்டா என்றுதான் கூப்பிடுவார். அந்தப் பாட்டுக்கு நான் அமைத்துக் கொடுத்த செட் பார்த்துவிட்டு என்னிடம் வந்து, ‘அந்த மரம் இருப்பது ஃபிரேமில் சரியாக இல்லை என்று

பி.சி. ஶ்ரீராம் நினைக்கிறார்’ என்றார். ‘அப்படியா! நீங்கள் வேண்டாம் என்று சொன்னால் நான் எடுத்து விடுகிறேன்’ என்று சொல்லி என் மேஸ்திரியிடம் அந்த செட்டை பிரிப்பது போல சத்தம் எழுப்ப சொன்னேன். உடனே பிசி ஶ்ரீராம், ‘இல்லை…இல்லை…இருக்கட்டும்! பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். படம் முடித்து ப்ரிவியூ ஷோக்கான நேரம். அப்போது என்னிடம் வந்த பிசி ஶ்ரீராம், ‘அந்த பாடலில் செட் காம்போசிஷன் அருமை!’ என்றார். அந்தப் படத்தில் தாராவி செட் அமைக்க நிஜ தாராவிக்கு சென்று பார்த்தேன். பார்த்ததை பேப்பரில் வரைந்து கொண்டேன். அப்படித்தான் தாராவி செட் அமைத்தேன். ” என்றவர்் ‘சந்திரமுகி’ பட அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.  “இந்த படத்திற்காக நான் அமைத்த செட் பலரையும் கவர்ந்தது. அதற்கான முழுப் பாராட்டும் இயக்குநர் வாசுவுக்குதான் சென்று சேர வேண்டும். எதை எப்படி எடுக்க வேண்டும் என்ற தெளிவான திட்டமிடல் அவரிடம் இருந்தது. ஏழெட்டு இடங்களில் தனித்தனியாக ஷூட் செய்துவிட்டு ஒரே பங்களா போல படத்தில் காட்டி இருப்போம். இப்படித்தான் ‘சந்திரமுகி1’ முடித்தோம்” என்றார்.

பேட்டியின் நிறைவாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றி பகிர்ந்து கொண்டார், “கலைஞர் குறித்து எனக்கு நிறைய நல்ல நினைவுகள் உண்டு. முதல் முறையாக நான் தேசிய விருது வாங்கிய தருணத்தில் தமிழ்நாடு சார்பாக ஏழெட்டு விருதுகள் வாங்கி இருந்தோம். அப்போது, என்னைப் பற்றி கலைஞர் பேசும்போது, ‘ஒரு தந்தைக்கு தர வேண்டிய மரியாதையை இந்த விருதின் மூலம் கொடுத்திருக்கிறார்’ என்று என் தந்தையை முன்னிறுத்தி வாழ்த்தினார். கலைஞர் மீதான மரியாதையும் பாசமும் எனக்கு எப்போதும் உண்டு” என்றார் நெகிழ்வுடன்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com