பாலியல் குற்றச்சாட்டு: மலையாள திரைப்பட சங்கத்திலிருந்து பதவி விலகிய சித்திக்!
மலையாள திரைப்பட சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் ராஜினாமா செய்துள்ளார்.
சமீபமாக மலையாள திரை உலகை அதிரவைத்த சம்பவங்களில் ஒன்று ஹேமா கமிட்டி அறிக்கை. அதில், பாலியல் துன்புறுத்தல் கலாச்சாரம் மலையாள திரையுலகில் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஆண் நடிகர்கள் குடிபோதையில் சக நடிகைகளின் அறைகளுக்குள் நுழைந்து அத்துமீறுவது போன்ற குற்றசாட்டுகள் அதில் இடம்பெற்றிருந்தது.
அதன் ஒருபகுதியாகத்தான், பிரபல மலையாள நடிகர் சித்திக் மீது ஒரு நடிகை பாலியல் குற்றசாட்டை முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாக அந்த நடிகை அளித்த பேட்டியில், “பெரிய கனவுடன் திரைப்படத் துறைக்கு வந்தேன். ஒரு திரைப்படம் பற்றி விவாதிப்பதற்காக நடிகர் சித்திக் என்னை ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்தார். தொழில்முறை அணுகுமுறையாக மட்டுமே அந்த சந்திப்பை கருதினேன். ஆனால் நான் சிக்கிக் கொண்டேன். அவர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அது பாலியல் வன்கொடுமைதான்.
அவர் என்னை அறைந்து உதைத்தார். அதனால் நான் அங்கிருந்து தப்பி ஓட வேண்டியதாயிற்று. அவர் நம்பர் ஒன் குற்றவாளி. என் நண்பர்கள் சிலருக்கும் அவருடன் இது போன்ற அனுபவங்கள் இருந்திருக்கிறது. அந்த சம்பவத்துக்குப் பிறகு நான் சினிமா தொழில்துறையிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன். ஆனால் இன்று அவருக்கு வேறு முகம். ஹேமா கமிட்டி அறிக்கை மீதான அடுத்த கட்ட நடவடிக்கைதான் முக்கியம். இதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் குற்றசாட்டுகளைத் தொடர்ந்து மலையாள நடிகர் சித்திக் மலையாள திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச்செயலாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார். இந்தச் செய்தியை உறுதிப்படுத்திய AMMA துணைத் தலைவர் ஜெயன் சேர்தலா அளித்த பேட்டியில், “சித்திக் மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் வரும்போது, அவர் இந்த பதவியைத் தொடர முடியாது. அதனால் அவர் ராஜினாமா செய்திருக்கிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.