
சிவகார்த்திகேயனின் "பராசக்தி" திரைப்பட விளம்பரத்திற்கு நடிகர்திலகத்தின் பெயர், புகைப்படத்தைப் பயன்படுத்துவதா? என நடிகர் திலகம் சிவாஜி சமூகநலப்பேரவைத் தலைவர் சந்திரசேகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பராசக்தி - தமிழ்த் திரையுலக வரலாற்றை 1952இல் புரட்டிப்போட்ட பராசக்தி திரைப்படத்தின் பெயரை மீண்டும் அதே பெயரில் தயாரிப்பதற்கு ஆரம்பத்திலேயே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம். ஆனால், ரசிகர்களின் வேண்டுகோள் மற்றும் எதிர்ப்பைப் புறந்தள்ளி மீண்டும் அதே பெயரிலேயே, (பராசக்தி) திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளிவரவிருக்கிறது.
வேதனையிலிருக்கும் எங்களுக்கு, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதுபோல, நேற்று ஒரு தொலைக்காட்சியில், தீ பரவட்டும் என்று நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களிடமிருந்து தீப்பந்தத்தை சிவகார்த்திகேயன் பெறுவதுபோல பராசக்தி திரைப்படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
நடிகர்திலகத்தின் வாரிசுகளாக இளைய திலகம் பிரபு, மூன்றாம் தலைமுறையாக விக்ரம் பிரபு ஆகியோர் இன்றளவிலும் தமிழ்த் திரையுலகில் தடம்பதித்து சென்றுகொண்டிருக்கையில், சிவகார்த்திகேயனுக்கு நடிகர்திலகத்தின் வாரிசு என்ற ரீதியில் விளம்பரப்படுத்திக்கொள்ள யார் அதிகாரம், அனுமதி கொடுத்தது?
நேர்மையைக் காற்றில் பறக்கவிட்டு, அடுத்தவர் உழைப்பில், அடுத்தவர் பெயரில் குளிர்காய்ந்து, எப்படியாவது பணம் சம்பாதித்தால் போதும் என்று திரையுலகில் திரியும் கூட்டத்தில் ஒருவராக, இன்று சிவகார்த்திகேயனும், மனசாட்சி தேவையில்லை, பணம் மட்டும் போதும் என்ற நிலையில் பராசக்தி திரைக்குழுவும் உள்ளது.
ஒரு யுகக் கலைஞனாக, கலை உலகின் தவப்புதல்வனாக, கலைஞர் கருணாநிதி அவர்களின் புரட்சிகர வசனங்களை, தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டுசேர்த்த, நடிகர்திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தமிழ்த் திரையுலகம் கலையின் கொடையாக உலகிற்குத் தந்த திரைப்படம் தான் "பராசக்தி". அந்தப் பெயரை அபகரித்ததோடு மட்டுமல்லாமல், நடிகர்திலகத்தின் பெயரையும், புகைப்படத்தையும் தங்களுடைய வணிக நோக்கத்திற்காக, சுயலாபத்திற்காகப் பயன்படுத்துவதை நடிகர்திலகத்தின் ஆன்மா மன்னிக்காது.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.